கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த விலைப்போக்கு குறித்து இந்தியா நிவேஸ் கமாடிட்டி நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!

“டாலரின் மதிப்பு வலிமை அடைந்து வருவதால், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமாகிறது. கச்சா எண்ணெய்யின் வரத்து அதிகமாக இருப்பது இந்த விலை குறைவுக்கு முக்கிய காரணமாகும். டபிள்யூடிஐ கச்சா எண்ணெய்யின் விலையானது 14% குறைந்து, ஒரு பேரல் 50 டாலருக்குக் கீழே கடந்த மூன்று வாரங்களாக வர்த்தகமாகி வருகிறது.  

அமெரிக்காவின் இஐஏ   (Energy Information Administration) கணிப்பின்படி, ஒரு நாள் கச்சா எண்ணெய்யின் சப்ளையானது 7,50,000 பேரலாகும். ஆனால், அது 6,50,000 பேரலாகக் குறைந்தது. இதேபோல, அமெரிக்காவின் எனர்ஜி துறையின் கணிப்பின்படி, கச்சா எண்ணெய்யின் டிமாண்ட் ஆனது 4,00,000 பேரலாக உள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலையானது கடந்த ஏழு வாரத்தில் மட்டும் 3,900 ரூபாயிலிருந்து 2,735 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையானது இதற்குமுன் 2015 மார்ச் மாதத்தில் ரூ.2,643 வரை குறைந்தது. எம்சிஎக்ஸ் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2,780 ரூபாய்க்கு கீழே குறைந்தால், அது ரூ.2,670 - 2,640 வரை குறைய வாய்ப்புள்ளது. மூன்று நாட்கள் தொடர்ந்தும், வாராந்திர முடிவிலும் ரூ. 2,640 விலைக்கு கீழ் இறங்கினால், ரூ.2,400 வரை இறங்க வாய்ப்புள்ளது.''

தங்கம்!

தங்கத்தின் விலையானது கடந்த வார இறுதியில் விலை ஏற்றம் கண்டது. இதற்கு முக்கிய காரணம், சீனா தனது கரன்சியின் மதிப்பைக் குறைத்ததுதான். இதன் விளைவாக, டாலரின் மதிப்பு மேலும் வலிமை அடைந்தது. அதாவது, கடந்த ஒரு மாதமாக 10 கிராம் தங்கத்தின் விலை யானது 27,000 ரூபாயிலிருந்து  25,000 ரூபாய்க்குக் குறைந்தது.

இது தற்போது மீண்டும் 25,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக விலை உயர ஆரம்பித்துள்ளது. அதாவது, கடந்த வார இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,095 டாலரிலிருந்து 1,119 டாலராக விலை உயர்ந்தது.

இதேபோன்ற விலையேற்றம் வரும் வாரத்தில் இருக்க வாய்ப்பில்லை. இந்த வாரம் தங்கத்தின் விலை மந்தநிலையிலே இருக்கும். அதாவது 25,600 ரூபாயிலிருந்து   26,200 ரூபாய்க்குள் வர்த்தகமாகும்.

கரன்சி!

கரன்சியின் போக்கு குறித்து ஆதித்யா பிர்லா மணி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் சிவசுப்ரமணியன் கூறியதாவது:

“ 2015ம் ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.20 லிருந்து 64.20-க்குள் வர்த்தமாகி  வந்தது.

ஆனால், டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பை சீனா  சுமார் 3.6% குறைத்தது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

அதேபோல, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் குறையும். இதனால் பணவீக்க விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

மேலும், ரூபாயின் மதிப்பு என்பது வேகமாகச் சரிவடையாமல் குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்து வருவது நல்லது என்றுதான் ஆர்பிஐயும் நினைக்கிறது.

இந்த மாதம் வெளியாகியுள்ள நுகர்வோர் பணவீக்க விகிதம் மற்றும் மொத்த விலை பணவீக்க விகிதம் குறைந்துள்ளதால், ஆர்பிஐ, செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் என எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

வட்டி விகிதம் குறையும்போது ரூபாயின் மதிப்பு மேலும் சரிவடையவே செய்யும்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது 64.20 - 65.50 இடையே வர்த்தகமாகும்” என்றார்.

இரா.ரூபாவதி


கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick