நாணயம் லைப்ரரி: தன்னம்பிக்கையை தரும் ரகசியங்கள்!

புத்தகத்தின் பெயர்: த அல்டிமேட் சீக்ரெட்ஸ் ஆஃப் டோட்டல் செல்ஃப் கான்ஃபிடன்ஸ் (THE ULTIMATE SECRETS OF TOTAL SELF–CONFIDENCE)

ஆசிரியர்: டாக்டர் ராபர்ட் ஆன்டனி

பதிப்பாளர்: Harper Collins Publisher

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம் டாக்டர் ராபர்ட் ஆன்டனி எழுதிய ‘த அல்டிமேட் சீக்ரெட்ஸ் ஆஃப் டோட்டல் செல்ஃப் கான்ஃபிடன்ஸ்’ எனும் தன்னம்பிக்கையை தரக்கூடிய அதிமுக்கியமான ரகசியங்களை சொல்லும் புத்தகத்தை. வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நினைக்கும் அனைவருக்கும் இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கின்றேன் என்ற அதிரடியுடன் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

உலகத்தில் வாழும் மனிதர்களை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். வெகுசிலரே சந்தோஷமாகவும், மன நிறைவுடனும், வாழுகிற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்து டனும் வாழ்கின்றனர். பலரால் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னை களையே சமாளிக்க முடிவதில்லை. இதனாலேயே பலரும், என்னமோ போடா மாதவா என்ற ரேஞ்சுக்கு ஒரு சராசரி வாழ்க்கையை வாழ துணிந்துவிடுகின்றனர். இப்படி சராசரி வாழ்க்கையை வாழத் துணிவதனால் என்னவாகிறது?

இவர்களுடைய வாழ்வில் பற்றாக்குறைகள் தலைவிரித்து ஆடுகிறது. இந்த பற்றாக் குறைகளே இவர்களை நாடு சரியில்லை, வீடு சரியில்லை, கணவன், மனைவி, பிள்ளைகள் சரியில்லை, அலுவலகச் சூழ்நிலைகள் சரியில்லை என்று புலம்ப வைக்கிறது. நாடும், வீடும், கணவன், மனைவி குழந்தைகளும், அலுவலகச் சூழ்நிலைகளும் ஒரு மனிதனை கன்ட்ரோல் செய்கிறது என்ற எண்ணம் அவர்களிடத்தில் குவிந்து விடுவதால் வாழ்க்கையில் முன்னேற இவற்றையெல்லாம் தாண்டி தனிமனிதனால் முடியும் என்ற லாஜிக்கல் வாதத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. நம் மனத்தின் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் நம்முடைய முன்னேற்றத்துக்கு நாம் வழிவகுக்கலாம் என்ற இந்த நூற்றாண்டின் அரிய அறிவியல் கண்டுபிடிப்பை இவர்கள் உணர முழுமையாக மறுக்க ஆரம்பிக்கின்றனர்.

இதற்கு நாம் இவ்வளவுதான் (சிறிய அளவில்) என நாம் நினைப்பதை விட்டுவிட்டு நாம் இவ்வளவு (ஆகவேண்டும் என பெரிய அளவில்) என்று நினைத்தால் மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியம் என்கிறார் ஆசிரியர். மந்தையில் ஒரு ஆடாக ஓடிக்கொண்டு இருக்கும்வரை மந்தை என்றே நாம் அறியப்படுவோம். நமக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்காது. மந்தையில் இருக்கும்வரை மந்தைக்கு இருக்கும் கஷ்டநஷ்டங்கள் நமக்கு இருக்கவே செய்யும்.  நம்முடைய வாழ்க்கையை அடுத்தவர்களே கன்ட்ரோல் செய்கின்றனர் என்று நினைத்தபோதே நாம் மனரீதியாக அடிமையாகி விடுகிறோம். நம்முடைய எண்ணத்துக்கு நாமே கைதியாகி விடுகிறோம். ஏனென்றால் நம்முடைய எண்ணமே நம்முடைய நடவடிக்கை களுக்கான ப்ளூ பிரின்ட்டாக செயல்படுகிறது. 

ப்ளூ பிரின்ட் எப்படி இருக்கின்றதோ, அப்படித்தானே ரிசல்ட்டுகளும் இருக்கும் என்று கிண்டலடிக்கின்றார் ஆசிரியர். ஷேக்ஸ்பியர் சொன்னதைப் போல், நாம் யாரென்று நமக்குத் தெரியும். நாம் யாராக மாறமுடியும் என்பது நமக்குத் தெரியாது என்பதே உளவியல் ரீதியான உண்மை. இதனை நீங்கள்  கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

இதனை உணர்ந்துகொண்டால் பிரச்னை நம்முள்ளே இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொள்ளும் போதுதான் நமக்குள்ளே இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வெளியாட்களை தேடுவதிலோ அல்லது குறை சொல்வதிலோ பலனில்லை என்பது நமக்கு நன்றாகப் புரியும் என நறுக்கென்று சொல்கிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு சில ஐடியாக்களில் ஹிப்னாடைஸ் ஆகி அதனுடன் கட்டுண்டு கிடக்கிறான். முதலில் இந்த மயக்கத்தில் இருந்து வெளியேவர முயற்சி எடுங்கள் என்கிறார் ஆசிரியர். ஹிப்னாடைஸ் செய்வதன் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறார். நல்ல உடல்நிலையில் இருக்கும் நபரிடம், உங்களுக்கு உடம்பு சரியில்லை. உங்களால் இந்த மேசையின் மீது இருக்கும் பென்சிலைகூட தூக்க முடியாது என்ற அளவுக்கு நம்பிக்கையை (நம்பிக்கையின்மையை!) வளர்க்க முடியும். இதனை நான் மேடையிலேயே பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு செய்து காண்பித்திருக்கிறேன் என்கிறார் ஆசிரியர்.

ஹிப்னாடிசத்தில் கட்டுண்டு கிடக்கும் நபருடைய கை மேசையின் மீது இருக்கும் பென்சிலை எடுக்க முயலும். ஆனால், மூளையோ அது உன்னால் முடியாது என்று முழுமையாக நம்பும். அதனால் தசைகளுக்கும் மூளைக்கும் இடையே யுத்தம் ஒன்று நடக்கும். இறுதியில் மூளையே வெல்லும். இதனாலேயேதான் நம்பிக்கையும்/கனவுகளும் முழுமையாக வெற்றி பெறுகின்றன என்கிறார் ஆசிரியர். ஒரு மனிதன் ஒரு விஷயத்தை (அது உண்மையோ/பொய்யோ) முழுமையாக நம்ப ஆரம்பித்துவிட்டால், அவன் அது அப்படித்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையிலேயே அவனுடைய நடவடிக்கையை மாற்றியமைக்கிறான். நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவனுடைய நடவடிக்கையை யாராலும் மாற்றியமைக்க முடியாது என்கிறார் ஆன்டனி.

அதனாலேயே நீங்கள் கஷ்டத்தில் இருந்தால் தற்போது இருக்கும் நிலை நிரந்தரமானது என ஒருபோதும் நம்பாதீர்கள். நம்பினால் அவ்வளவுதான். அங்கேயே செட்டிலாகி விடுவீர்கள் என்கிறார். கொஞ்சம் உங்கள் வாழ்நாளை திரும்பிப் பாருங்கள். நல்லது என்று சொல்லிக் கொடுத்ததை வைத்து வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். நல்லது என்று நம்ப வைத்து விற்ற பொருளை வாங்கியிருப்பீர்கள் என்கிறார். இதனாலேயே ஒரு சராசரி மனிதனால் அவனுடைய முழு சக்தியை உபயோகித்து செயலாற்ற முடிவதில்லை. ஏனென்றால் அவனால் ஒன்றும் சாதிக்க முடியாது என முழுமையாக நம்புகிறான். அவனுடைய தாய், தந்தை ஆசிரியர் போன்றவர்கள் அவனுடைய மூளைக்குள் இதனை (நீ சராசரி! சொன்னதை செய்து வாழும் ரகம்! சாதனையெல்லாம் உன்னால் முடியாது என) வெற்றிகரமாக விதைத்துவிடுகின்றனர். இந்த விதை விருட்சமாக மாறி, மூளையில் அமர்ந்துகொண்டு அவனை பென்சிலைக்கூட தூக்க முடியாத அளவுக்கு செய்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர். இதனாலேயே நீங்கள் ஏற்கெனவே கட்டுண்டு கிடக்கும் ‘முடியாது’ என்ற எண்ணமாகிய ஹிப்னாடிசத்தில் இருந்து வெளியே வாருங்கள் என்கின்றேன் என்கிறார் அவர்.

நீங்கள் யாருடைய கையையாவது பற்றியிருந்தால் தானே அவர் உங்களை கைவிட முடியும். நீங்கள் யாரின் மீதாவது சாய்ந்திருந்தால்தானே அவர் உங்களை விழவைக்க முடியும். யாருடைய கையையும் பற்றிக்கொண்டோ யாரின் சப்போர்ட்டிலுமோ நிற்க முயலாதீர்கள். அப்படி செய்யாதிருக்கும் பட்சத்தில் மற்றொருவர் உங்களை கீழே விழவைக்க முடியாது இல்லையா என்கிறார் ஆசிரியர்.

போட்டி மனப்பான்மையைப் பற்றி விளாசும் ஆசிரியர், போட்டி என்பதே கிரியேட்டிவிட்டியை கொல்லும் பெரும் ஆயுதம் என்கிறார். உலகத்தில் நீங்கள் படைக்கப்பட்டதன் அர்த்தம் புதியதாய் எதையாவது உருவாக்கவே தவிர, போட்டியாளரைவிட சிறந்து விளங்குவதற்காக இல்லை. போட்டி என்பது கொஞ்சம் ஆரோக்கியமான விஷயமாக முதலில் தெரிந்தாலும் கிரியேட்டிவிட்டியை அது முழுமையாக் கொன்றுவிடும். ஏனென்றால், நீங்கள் போட்டியாளரைவிட சற்றே முன்னால் இருந்தால் போதுமே. அப்புறம் எதற்கு உங்களுடைய முழு ஆற்றலுக்கு உகந்த விஷயங்களை செய்ய வேண்டும்?

நினைவிருக்கட்டும், போட்டியாளரை வெற்றி கொள்ளுமளவுக்குத் தேவையான விஷயங்களை மட்டுமே செய்வது தான் உங்கள் ஆற்றல் இல்லை. அதையும் தாண்டி நீங்கள் நிறையவே செய்ய முடியும். அதனால்தான் போட்டி என்பது கிரியேட்டிவிட்டியை கொல்லும் ஒரு விஷயம் என்கிறேன்.

ஒருவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இன்னொரு வருக்கு நண்பர்களே இல்லை என்ற நிலையை பார்க்கிறோம். இது எதனால்? தன்னை அதிகமாக நேசிப்பவர்களுக்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். தன்னையே பிடிக்காத ஒருவருக்கு எப்படி பிறரைப் பிடிக்கும்? பிறரைப் பிடித்தால்தானே மற்றவர்களுக்கு அவரைப் பிடிக்கும் என்று கலாய்க்கிறார் ஆன்டனி.

இந்த புத்தகத்தை படித்ததும் தெளிவான, சக்தியுடன் கூடிய, போகும் திசை தெரிந்த, சரியான திட்டங்களை கொண்டிருக்கிற நபராக நீங்கள் மாறிவிடுவீர்கள் என்கிறார் ஆசிரியர். முன்னேற நினைப்பவர்கள் படிக்கலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick