கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் திடீரென அதிகரித்திருக்கிறது. தங்கத்தின் விலை இந்த வாரத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் சொல்கிறார்.

தங்கம்!

‘‘கடந்த ஐந்து வாரங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் மீட்டிங் மினிட்ஸ் தொடர்பான குறிப்புகள் வெளியானதும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்துள்ளது. அது மட்டுமல்லாமல், சீனாவின் பணமான யுவானின் மதிப்பு சமீபத்தில் குறைக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் உயராமல் உள்ளது. அமெரிக்காவில் தற்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான சூழல் இல்லை என ஃபெடரல் வங்கியின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதால், தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1164 டாலர் வரை விலை உயர்ந்தது. வரும் வாரத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,185 டாலர் வரை செல்ல வாய்ப்புள்ளது. மேலும், 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.27,500 வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.’’

வெள்ளி!

தங்கத்தின் விலை உயர்ந்த அளவுக்கு வெள்ளியின் விலை உயரவில்லை. ஏனெனில் வெள்ளியை தொழில் துறையில் அதிகமாகப் பயன்படுத்துவது சீனாதான். தற்போது சீனாவில் நிலவும் பிரச்னைகளினால் தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த ஆறரை வருடங்களில் இல்லாத அளவுக்கு உற்பத்தி ஆர்டர்கள் குறைந்துள்ளன. மேலும், அடிப்படை உலோகங்களின் விலையும் வெகுவாகச் சரிந்துள்ளது. இதனால் ஒரு அவுன்ஸ் வெள்ளி வெள்ளிக்கிழமை அன்று 15.47 டாலருக்கு வர்த்தகம் ஆனது.

இந்த வாரம் வெள்ளியின் விலை உயர வாய்ப்புள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.37,500 வரை உயரும் என எதிர்பார்க்கலாம்.

கச்சா எண்ணெய்!

கடந்த எட்டு வாரங்களாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. 1986-க்கு பிறகு கச்சா எண்ணெய் தற்போது மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 29 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. அதிக வரத்து மற்றும் உலகப் பொருளாதார மந்தநிலைதான் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் 41.14 டாலராக வர்த்தகமானது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் 46.62 டாலராக  வர்த்தகமானது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் தற்போது நிலவும் பொருளாதாரப் பிரச்னை கச்சா எண்ணெய் விலையில் பிரதிபலிக்கிறது.

சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஏற்கெனவே அதிகமாக உள்ளது. இதனால் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை சரியவே வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கரன்சி!

‘‘ரூபாயின் மதிப்பு 64.80 - 66.20 இடையே வர்த்தகமாகும்!’’

சிவசுப்ரமணியம், மூத்த ஆய்வாளர்,
ஆதித்யா பிர்லா மணி.

“கடந்த வாரம் எதிர்பார்த்ததைப் போலவே ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 65.50 என்ற நிலையில் வர்த்தகமானது. சீனா டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பைக் குறைத்ததைத்  தொடர்ந்து அந்த நாட்டின் பங்குச் சந்தை 10 சதவிகித அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதன் விளைவு ஆசிய சந்தைகள் அனைத்திலுமே எதிரொலித்தது. அதாவது, எமெர்ஜிங் சந்தைகள் அனைத்துமே வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. எஃப்ஐஐ தொடர்ந்து பணத்தை வெளியே எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் கடந்த வாரத்தில் மட்டும் 26 பில்லியன் டாலர் அளவுக்கான ஈக்விட்டி ஃபண்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க ஃபெட் வருகிற செப்டம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வட்டி குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு சுமார் 50 சதவிகிதமாக இருந்தது, தற்போது 36 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதனால் டாலரின் மதிப்பு வலிமை இழக்க ஆரம்பித்தது. ஆனாலும்  டாலருக்கு நிகரான ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்பும் வீழ்ச்சி அடைந்தது.

இந்த நிலையில், சீனாவில் பிஎம்ஐ கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தது. இதனாலும் சீன சந்தையில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது. மேலும், கடந்த எட்டு மாதங்களில் இந்தியாவில் ஏற்றுமதி குறைந்திருக்கிறது. தற்போதைய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பு வேகமாகச் சரியும்போது மட்டும் ஆர்பிஐ சரிவைத் தடுப்பதற்கான வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 64.80 - 66.20 இடையே வர்த்தகமாக வாய்ப்புள்ளது.’’

இரா.ரூபாவதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick