உலகின் தலைசிறந்த 5 இந்திய மேனேஜ்மென்ட் குருக்கள்!

இரா.ரூபாவதி

லக அளவில் மிகச் சிறந்த மேலாண்மை சிந்தனையாளர்கள் 50 பேரை தேர்வு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பட்டியல் வெளியிட்டு வருகிறது திங்கர்ஸ்50 என்கிற அமைப்பு. 2015-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த 50 மேலாண்மைச் சிந்தனையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்களில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் இனி..

விஜய் கோவிந்தராஜ்

விஜய் கோவிந்தராஜ் 1949-ம் வருடம் சென்னையில் பிறந்தார். ஆடிட்டர் படிப்பில் கோல்டு மெடல் வாங்கியவர். அதன்பிறகு ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். தற்போது அமெரிக்காவின் டக் பிஸினஸ் ஸ்கூலில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஜிஇ நிறுவனத்தின் முதன்மை இன்னோவேஷன் தலைவராக 2008 - 10-ம் ஆண்டில் பதவி வகித்தார். தவிர, ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் பலவற்றுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். 2012-ல் இவர் எழுதிய ரிவர்ஸ் இன்னோவேஷன் புத்தகம் மிகவும் பிரபலம். 300 டாலரில் வீடு கட்டுவது குறித்த இவரது ஐடியா பெரிய வரவேற்பைப் பெற்றது. 2015-ஆம் ஆண்டுக்கான திங்கர்ஸ்50 வெளியிட்ட பட்டியலில் விஜய கோவிந்தராஜ் 13-ம் இடத்தில் இருக்கிறார்.

பங்கஜ் ஜெமவாட்!

1959-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தவர். அப்லைடு கணிதத்தில் பட்டம் பெற்ற பின்னர் பிசினஸ் எக்கனாமிக்ஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் பிஹெச்டி படிப்பில் சேர்ந்து மூன்று வருடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் முழு நேர பேராசிரியராக நியமிக்கப்பட்டவர் இவர்தான்.  

உலகமயமாக்கல் கல்வி மற்றும் மேலாண்மை துறையில் சிறப்பு வாய்ந்தவர். இவர் எழுதிய வேர்ல்ட் 3.0 என்கிற புத்தகம் 21-ம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத புத்தகம் என்று புகழப்படுகிறது.  திங்கர்ஸ்50 வெளியிட்ட பட்டியலில் இவருக்கு 19-வது இடம் கிடைத்துள்ளது.

நிர்மால்ய குமார்!

டாடா சன் நிறுவனம் குரூப் எக்சிக்யூட்டிவ் உறுப்பினராக நிர்மால்ய குமாரை பணியில்  அமர்த்தியுள்ளது. இவர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் பேராசிரியராக பணியாற்றினார். பல்வேறு நாடுகளில் உள்ள ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குநராக இருந்திருக்கிறார். ஏசிசி, பாட்டா இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட் போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும். இவர் ஸ்ட்ராட்டஜி மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் பிராண்ட் பிரேக் அவுட் ஹவ் எமர்ஜிங் மார்க்கெட் பிராண்ட்ஸ் வில் கோ குளோபல் (Brand breakout: How Emerging Market Brands Will Go Global) புத்தகம் மிகவும் பிரபலம். திங்கர்ஸ்50 வெளியிட்ட பட்டியலில் இவருக்கு 40-வது இடம் கிடைத்துள்ளது.

சுபீர் செளத்ரி!

1967-ம் ஆண்டில் பிறந்த இவர், கரக்பூரில் உள்ள ஐஐடியில் ஏரோனாட்டிகல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தார். அதன்பிறகு சென்ட்ரல் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் தொழில் துறை மேலாண்மை பட்டமும் முடித்தார். 1998-2003-ம் ஆண்டு அமெரிக்காவின் சப்ளையர் இன்ஸ்டிட்யூட் அமைப்பில் செயல் துணைத் தலைவராக இருந்தார். தற்போது எஎஸ்ஐ கன்சல்டிங் குழுமத்தின் சிஇஓ-ஆக இருக்கிறார்.  இவர் 13-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். இந்தப் புத்தகங்கள் அனைத்தும் குவாலிட்டி அண்ட் மேனேஜ்மென்ட் துறை சார்ந்த புத்தகங்கள் ஆகும். இவர் எழுதிய புத்தங்களில் தி ஐஸ்கீரிம் மேக்கர், சிக்ஸ் சிக்மா புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. இவர் எழுதிய சிக்ஸ் சிக்மா புத்தகத்தின் வழிகாட்டுதலில் அதிக நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்துள்ளது. அந்தப் புத்தகத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், பவர் ஆஃப் சிக்ஸ் சிக்மா என்ற புத்தகத்தை எழுதினார். திங்கர்ஸ்50 வெளியிட்ட பட்டியலில இவருக்கு 39-வது இடம் கிடைத்துள்ளது.

அனில் கே குப்தா!

அனில் கே.குப்தா, ஸ்ட்ராட்டஜி உலகமயமாக்கல் மற்றும் தொழில்முனைவு துறையில் உலகின் தலைசிறந்தவர் ஆவார். இவர் ஸ்மித் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியராகவும் பதவி வகிக்கிறார். எக்கானமிஸ்ட் பத்திரிக்கை சமீபத்தில் எழுதப்பட்ட இன்னோவேஷன் இன் எமர்ஜிங் எக்கானமிக்ஸ் என்ற கவர் ஸ்டோரியில் அணிலை சூப்பர்ஸ்டார் எனக் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், சீனாவின் வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சியை ஒப்பிட்டு பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். பல்வேறு முக்கிய பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புகள் வகித்துள்ளார். திங்கர்ஸ்50 வெளியிட்ட பட்டியலில் அனில் கே குப்தா 47-வது இடத்தில் உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick