உங்களுக்கு கைகொடுக்கும் பணத்தோட்டம்!

சா.ராஜசேகரன்,  (Wisdomwealthplanners.com), நிதி ஆலோசகர், புதுச்சேரி.

விவசாயத்துக்கும் நம் வாழ்க்கையில் பணம் சேர்ப்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு விவசாயி தனக்கு தேவையான வருமானத்தை தரும் பலவகையான பயிர்களை வளர்ப்பார்.

குறுகிய காலத்துக்கு ஒரு பயிர், நடுத்தர காலத்துக்கு வேறு ஒரு பயிர், நீண்ட காலத்துக்கு மற்றொரு பயிர் என பலவகையான பயிர்களை வளர்ப்பதன் மூலம் தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வார்.

பொதுவாக, ஒரு விவசாயி தனது தேவைகளை ஐந்தாக பிரித்துக் கொள்வார்.

மூன்று மாத குறுகிய கால சாகுபடிக்கு கீரை, காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை பயிர் செய்வார்.

ஆறு மாதம் முதல் மூன்று வருடம் வரையிலான நடுத்தர காலத்துக்கு நெல், கனி, கரும்பு போன்றவற்றை சாகுபடி செய்வார். 

மூன்று மற்றும் பல வருட காலத்துக்கு தென்னை மரம், பனைமரம், சவுக்கு மரம், தைல மரம் போன்றவற்றை சாகுபடி செய்வார்.

நிரந்தர தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு வாழை, முருங்கை போன்றவற்றை சாகுபடி செய்வார்.

காலங்காலமாக உதவுகிற மாதிரி பலா மரம், மா மரம், வேப்பம் மரம், தேக்கு மரம் போன்ற மரங்களை வளர்ப்பார்.

விவசாயிகள் தங்கள் நீண்ட மற்றும் குறுகிய காலத் தேவைகளை இப்படி திட்டமிட்டு அமைத்துக் கொள்கிற மாதிரி, நாமும் நம்முடைய நீண்ட கால, நடுத்தர கால, குறுகிய கால தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

விவசாயிகள் தங்கள் நிலத்தில் பசுமைத் தோட்டம் அமைக்கிற மாதிரி, நாமும் பணத் தோட்டம் அமைத்து, நம் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எப்படி?

நம் தேவைகளை பொறுத்தும், முதலீட்டுத் தன்மை மற்றும் காலத்தை பொறுத்தும், அத்தகைய முதலீடு ஈட்டும் வட்டி விகித்தை பொறுத்தும், பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதாவது, வங்கி சேமிப்பு, அஞ்சல் வழி சேமிப்பு, காப்பீடு, பாண்டு (Bonds), மியூச்சுவல் ஃபண்டுகள், நிறுவனப் பங்குகள், கமாடிட்டி என பல முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, நமது வாழ்க்கை என்னும் பயணத்தில் பல கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். ஆனால், அதற்கேற்றாற் போல் எந்தெந்த கனவுகளுக்கு எத்தகைய முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பொருத்துதான் ஒருவர் கனவு நிஜமாகுமா என்பதை சொல்ல முடியும். 

இதற்கு முதலில் சேமிப்புக்கும், முதலீட்டுக்கும் உள்ள வேறுப்பாட்டை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, சேமிப்பு என்பது ஒரு மரத்தின் விதையை வைத்திருப்பதை போலாகும். அதுவே அந்த விதையை விதைத்தால் பல மரங்கள் வளர்ந்து, காய்கனிகளை தந்து, பல வகைகளில் பயன் பெறலாம்.

இதுபோலதான் முதலீடும். நம் பணத்தினை முதலீடு செய்து, அதனை பெருக்கி பயன் பெறலாம். ஆக, நம் கனவுகளையும், இலக்குகளையும் ஒப்பிட்டு, அதற்கேற்றவாறு முதலீட்டை பகிர்ந்து முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஒரு வருடத்துக்கும் குறைவான ஆசைகள், ஒன்று முதல் மூன்று வருடத்துக்கும் குறைவான ஆசைகள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் நிறைவேறுகிற ஆசைகள் என காலத்தின் அடிப்படையில் பட்டியலிட்டு, அதற்கேற்றவாறு முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்கள் குறுகிய கால தேவை களுக்கு அதாவது, மூன்று மாதம் முதல் ஆறு மாதத்துக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கீரை, காய்கறி, இலை, கொடி போன்றவற்றை சாகுபடி செய்வது போல, நம்முடைய குறுகிய கால தேவைக்கு கைதரக்கூடிய  மாதிரி அஞ்சல் சேமிப்புக் கணக்கு, வங்கி சேமிப்புக் கணக்கு, லிக்விட் ஃபண்ட் ஆகியவற்றை நாடலாம். தீபாவளிக்கு புதிய ஆடைகள், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் என்கிற நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த முறையில் நாம் பணம் சேர்க்கலாம்.

ஒரு வருடத்துக்குள் நிறைவேறும் ஆசைகள் எனில், அதாவது வீட்டுக்கு தேவையான ஃபர்னிச்சர், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்றவற்றை கடன் மூலம் வாங்காமல், நாமே பணம் சேர்த்து வாங்கலாம். இதற்கு ஒரு வருட வங்கி ஆர்டி, ஷார்ட் டேர்ம் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், கில்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்து இந்தத் தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மூன்று வருடத்துக்குள் நிறைவேற்றிக் கொள்ளும் ஆசைகள் எனில், இரு சக்கர வாகனம், கார் மற்றும் வீட்டு மனை வாங்குவதற்கான டவுன்பேமென்ட்டுக்கான பணத்தை சேர்க்க மூன்று வருட வங்கி ஆர்டி, மியூச்சுவல் ஃபண்ட் மிட் டேர்ம் பிளான் என்று தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

நீண்ட கால கனவுகளுக்கும், கடமைகளுக்கும் தேவையான பணத்தை சேர்க்க வேண்டுமெனில், அதாவது, குழந்தைகளின் உயர் கல்விக்கான செலவு, பிள்ளைகளின் திருமணம், ஓய்வூதியம், வீடு வாங்குதல் என்று இவை அனைத்துக்கும் குறைந்தது ஐந்து வருடம் முதல் பத்து வருடமாக இருந்தால், அதற்கு செல்வமகள் மற்றும் பொன்மகன் திட்டம், கடன் / ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதன் மூலம் அனைத்துக் கனவுகளையும் நிறைவேற்றலாம்.

இதில் மற்ற முதலீட்டுகள் அனைத்தும் வருடத்துக்கு 10 சதவிகிதத்துக்கும்  குறைவாகவே கிடைக்கும். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்டில் 8%, 10%, 12%, 15% என்று பல விதங்களில் வருமானம் தரும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளன.

திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலமே நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது நிச்சயம். பசுமைத் தோட்டத்தை உருவாக்கி விவசாயிகள் பலன் பெறுவது போல, நாமும் குறுகிய மற்றும் நீண்ட காலத்துக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இன்றே முதலீடு செய்யத் தொடங்குவோம்.


வட்டிக்கு இவ்வளவு பணமா?

ப்போது நம்மில் பலர் பல பொருட்களை கடனில் வாங்கித்தான் அனுபவித்து வருகிறோம். இதற்கு நாம் தரும் வட்டி சுமார் 18 சதவிகிதத்திலிருந்து 24% வரை. எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்கு கிரெடிட் கார்ட்டிலிருந்து பணத்தை எடுக்கிறோம். இதற்கு ஆண்டு வட்டி 48%. சுற்றுலா செல்வதற்கும் சில சுபநிகழ்ச்சிகளுக்கும் 22% வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், வீடு கட்ட, நீண்ட கால வீட்டுக் கடன் 12% வட்டி விகிதத்தில், உயர் கல்விக்கு கல்வி கடன் 14% வட்டி விகிதத்தில் என்று கடன் பெற்றுதான் நமது கனவுகளை நிறைவேற்ற முடியும் என்று நினைத்து, நாம் ஈட்டும் வருமானத்தில் பெரும்பகுதியை வாங்கிய கடனை திரும்பத் தரவே செலவிடுகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick