சொத்து வாங்குபவர்களை பாதுகாக்கும் ரியல் எஸ்டேட் மசோதா!

சி.சரவணன்

ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) மசோதா 2015-க்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த மசோதாவில் ராஜ்ய சபை குழு 20 முக்கிய திருத்தங்களை மேற்கொண்ட பிறகு மந்திரி சபை ஒப்புதல் அளித்திருக்கிறது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களில் முக்கியமானவை இனி.

 குறைந்தபட்சம் 500 ச.மீ அல்லது 8 அடுக்குமாடி வீடுகள் (ஃப்ளாட்கள்) ஒரு இடத்தில் கட்டப்பட்டால், அது ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்குமுன் இது 1,000 ச.மீட்டராக இருந்தது.

 ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகளும் புதிதாக கொண்டு வரப்பட இருக்கிற ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்வது அவசியம்.

 கட்டுமானச் செலவுக்கான தொகை யில் 70 சதவிகிதத்தை அதற்கென  இருக் கும் எஸ்க்ரோ கணக்கில் போட்டு வைக்க வேண்டும்.

 தாமதம் ஏற்பட்டால் பில்டர் மற்றும் வீடு வாங்குபவருக்கான அபராத வட்டி ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

 கட்டுமானத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால், 5 ஆண்டுகள் வரைக்கும் பில்டர்கள்தான் பொறுப்பு. இதற்குமுன் இது இரு ஆண்டுகளாக இருந்தது.

 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கார்பெட் ஏரியாவில் சமையல் அறை, கழிவறைகள் சேர்த்து தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

 குடியிருப்போர் நலச் சங்கம் பெரும்பாலான வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.

 விதிமுறைகளை பின்பற்றாத பில்டர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

 சொத்து வாங்குபவரின் அனுமதி இல்லாமல் பிளான் மற்றும் டிசைனில் புரமோட்டர்கள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.

இந்த மசோதா குறித்து ரியல் எஸ்டேட் அமைப்பான கிரடாய் (தமிழ்நாடு) முன்னாள் சேர்மனும் நவீன் ஹவுஸிங் நிர்வாக இயக்குநருமான டாக்டர் ஆர்.குமாரிடம் கேட்டோம். 

‘‘இந்த ரியல் எஸ்டேட் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக வந்தால் ரியல் எஸ்டேட் தொழில் வெளிப்படையாக நடக்கும். அனைத்து பில்டர்களும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டிவரும் என்பதால், சொத்து வாங்குபவர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அப்ரூவல் இல்லாமல் ஃப்ளாட்கள் கட்டுவது குறையும். கார்பெட் அளவின்படிதான், அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்கிறபோது, வாங்குபவர்களுக்கு உண்மையில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் அளவு தெளிவாக தெரியும். புராஜெக்ட் தாமதமாகும் காலத்துக்கு வட்டி கொடுக்க வேண்டும் என்பதால், பலரும் தாமதத்தைத் தவிர்க்க முயல்வார்கள்.

முக்கியமாக, டைட்டில் இன்ஷூரன்ஸ் கொண்டுவர வேண்டும் என இந்த மசோதாவில் சொல்லப்பட்டு இருக்கிறது. அது நடைமுறைக்கு வந்தால், நிலத்தின் உரிமை காப்பீடு செய்யப்படும். நிலத்தின் உரிமையில் ஏதாவது சிக்கல் வந்தால், இன்ஷூரன்ஸ் பாலிசி கைகொடுக்கும் என்பதால் பில்டர் மற்றும் சொத்து வாங்குகிறவர் பாதிக்கப்படுவது குறையும்” என்றவர்,  இந்த மசோதாவினால் சொத்து வாங்குபவர்களுக்கு ஏற்படும் சில சிக்கல்களையும் சொன்னார். 

‘‘கட்டுமானச் செலவுக்கான தொகையில் 70% தனிக் கணக்கில் போட்டு வைப்பதன் மூலம் இந்த நிதி வேறு திட்டத்துக்கு பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பில்டர் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, இது போன்ற கணக்கில் போட்டு வைத்தால் அது வட்டி இழப்பில் கொண்டு வந்து நிறுத்தும். மேலும், இப்போது உள்ளது போக மேலும் ஓர் ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும், அனுமதி பெற வேண்டும் என்பது செலவை அதிகரிக்கும் விஷயமாக இருக்கும். இந்தக் கூடுதல் செலவுகள் எல்லாம் சொத்து வாங்குபவரிடமிருந்து வசூலிக்கப்படும் என்பதால் சொத்தின் விலை உயர்ந்துவிடும்.

சிஎம்டிஏ, டிடிசிபி, வருவாய் துறை, மின்சார வாரியம், குடிநீர் வாரியம் போன்ற அமைப்புகள் இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படாமல் இருக்கிறது. இந்த அமைப்புகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இனியாவது ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் அட்டகாசம் ஒழியும் என்று எதிர்பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick