பிசினஸில் கலக்கும் - கார்ப்பரேட் யோகி!

ஜெ.சரவணன்

கர்ப்புறங்களில் தொப்பை வயிறு கொண்டவர்களையும் கட்டாந்தரையில் உட்கார வைத்து யோகா செய்ய வைத்த பெருமை பாபா ராம்தேவுக்கு உண்டு. ‘நான் ஒரு பரிபூரண சன்யாசி’ என்று இவர் சொன்னதை நம்பி, இவரை தனது யோக குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் பலர். ஆனால், இன்று அவர் வெறுமனே ஆன்மிகத்தையும் யோகாவையும் கற்றுத் தரும் சாது மட்டுமல்ல, சர்வதேச நிறுவனங்களையே பயப்பட வைக்கும் அளவுக்கு பல ஆயிரம் கோடியை புரட்டி எடுக்கும் ‘கார்ப்பரேட் யோகி’.

 பாபாவின் கதை!

ஹரியானா மாநிலத்தில் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் எனும் கிராமத்தில் ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு, 1965 டிசம்பர் 25-ஆம் தேதி பிறந்தார் பாபா ராம்தேவ். அவரது உண்மையான பெயர் ராமகிருஷ்ண யாதவ்.

பள்ளிப் பருவத்திலேயே யோகாவினால் ஈர்க்கப்பட்டு ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து வந்தார். யோகாவை திறம்படக் கற்ற அவர், அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர் வேதங்களையும், அரபிந்த கோஷின் ‘யோகிக் சதன்’ போன்ற புத்தகங்களையும் படித்து தேர்ந்தவர், சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்றில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். அதன் விளைவு, இன்று அவரது ஒவ்வொரு யோகா அசைவையும் பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

 செல்வாக்கை செல்வமாக்கிய சிந்தனை!

மனிதர்களுக்குப் பொதுவாகவே வரவே வராத சில விஷயங்கள் சுய கட்டுப்பாடும் யோகாசனமும். அதை நன்கு தெரிந்து வைத்திருந்த பாபா ராம்தேவ், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனியின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். இவருடைய யோகா பயிற்சிகள் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் வைரலாக உலகம் முழுவதும் பரவின. திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சி அளித்து பிரசித்தி பெற்றார்.

இதன் விளைவாக அவரிடம் எக்கசெக்கமான பணம் குவிய ஆரம்பித்தது. அவர் தொடங்கிய பதஞ்சலி யோகபீடத்துக்கு, ஸ்காட்லாந்தில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக அளித்தனர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை சொன்ன ஹார்வர்டு பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் இவரது சிஷ்யர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. அவரது டிரஸ்ட்டுக்கு வரும் நன்கொடை பணமும் அதிகரித்தது.

இப்படிக் குவிந்த செல்வாக்கை செல்வமாக்கும் சிந்தனையில் தொடங்கப்பட்டதுதான் மக்களோடு நேரடி தொடர்புகொண்ட, உணவு மருந்து பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் ‘பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட்’ என்கிற நிறுவனம். ஒரு சன்யாசி வருமானம் பார்க்கும் தொழிலைச் செய்யலாமா என்று எழுந்த கேள்விகளுக்கெல்லாம் ‘இது லாப நோக்கத்தில் செயல்படும் நிறுவனமல்ல’ என்கிற ஒரு சிம்பிளான பதிலைச் சொல்லிவிட்டு, அடுத்தடுத்து புதிய பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார் பாபா.

 பயம் காட்டும் பதஞ்சலி!

விளம்பரத்துக்காக ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் ஒரு வருடத்துக்கு சுமார் 2,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பார்க்கும் நிறுவனமாக மாறிவிட்டது சில ஆண்டுகளுக்கு முன்பு  தொடங்கப்பட்ட ‘பதஞ்சலி’ நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டு பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பெரிய நிறுவனங்களே அஞ்சி நடுங்க ஆரம்பித்திருக்கின்றன.

பெரிய நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மூலப் பொருட்களை பற்றி பெரிதாக எதுவும் சொல்வதில்லை. ஆனால், முழுக்க முழுக்க இயற்கை மற்றும் ஆயுர்வேதப் பொருட்களைக் கொண்டே நாங்கள் பொருட்களை தயாரிக்கிறோம் என்று இந்த நிறுவனம் சொல்லிக் கொள்வதால், நகர்ப்புற மத்திய தர வர்க்கத்து மனிதர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது பதஞ்சலி நிறுவனம். இதை ஆச்சார்யா பால்கிருஷ்ணா நிர்வகித்து வருகிறார். 

இதற்கு நாடு முழுக்க 15,000 விற்பனைக் கூடங்கள் உள்ளன. மக்களால் மிக வேகமாக நுகரப்படும் 398 பொருட்களும், 188 மருந்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு  விற்கப்படுகின்றன. 2014-ல் ரூ.1,200 கோடியாக இருந்த இந்த நிறுவனத்தின் வருமானம் இந்த வருடம் ரூ.2,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், 2015 - 16ம் நிதி ஆண்டில் இது ரூ.5,000 கோடியைத் தாண்டும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த மூன்று வருடங்களில் இதன் வருமானத்தை ரூ.10,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கிய சில வருடங்களில் இவ்வளவு வேகமான வளர்ச்சியை எப்படி பாபா ராம்தேவால் அடைய முடிந்தது?

 பூக்கடைக்கும் விளம்பரம்!

பாபா ராம்தேவ், தன் யோகா கலையின் மூலமாகவே பிரபலமானவர். பொதுவாகவே, ஆன்மிகம், யோகா போன்றவற்றுக்கு மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பு இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். யோகா மூலம் மக்களின் மனதை வசீகரம் செய்தவர், அவர் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளராகவும் மாற்றினார்.

என்னதான் பூக்கடையாக இருந்தாலும் அதற்கும் விளம்பரம் தேவை. இதுவரை பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை என்றாலும், இனி புதுமையான விளம்பர உத்திகளை கையிலெடுக்க திட்டமிட்டிருக்கிறதாம் பதஞ்சலி நிறுவனம். இதற்காக சில  விளம்பர நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்தியாவில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கான நுகர்வோர் சந்தை இருக்கிறது. இந்தச் சந்தையை ஆக்கிரமிக்க என்ன செய்யலாம் என்பதே பாபாவின் முக்கிய யோசனையாக இப்போது இருக்கிறது. 

 உலக தரத்தில் யோசி; உள்ளூர் அளவில் செயல்படு! 

‘Think global, Act local’ என்று சொல்கிற மாதிரி,  ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நகர்ப்புற, படித்த மக்களை கொக்கி போட்டு இழுக்கிறார் ராம்தேவ். இவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 55 லட்சம் பேர் இணைப்பில் உள்ளனர். ட்விட்டரில் 5.4 லட்சம் பேர் உள்ளனர். இப்படி லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் உள்ளூர், படித்த மக்களை எளிதாக சென்றடைந்தது பாபாவின் சாதனைதான்.

 சர்ச்சைகளுக்கு நடுவே!

பாபா ராம்தேவ்-ன் வளர்ச்சி அபாரமாக இருந்தாலும் அவரும் சில சர்ச்சைகளில் சிக்காமல் இல்லை. 2006-ல் பாபா ராம்தேவ் தயார் செய்த சில பொருட்களில் மனித மற்றும் மிருகங்களின் எலும்புகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிருந்தா காரத். ஆனால், அந்த சர்ச்சைக்குப்பிறகுதான் பதஞ்சலி இன்னும் வேகமாக வளர ஆரம்பித்தது. சமீபத்தில்கூட அவர் தயாரித்து வெளியிட்ட நூடுல்ஸ், அரசிடமிருந்து உரிமம் பெறாமலே வெளி யிடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. ஆனால், பாபாவோ  இதை எல்லாம் சட்டை செய்யாமல், தன் பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை வளர்ப்பதிலேயே முழுமூச்சாக செயல் படுகிறார். இந்தியாவின் பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவன மான ஃப்யூச்சர் குரூப்புடன் இணைந்து செயல்பட, இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

ஆக, சன்னியாசிகள் வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது என்கிற பாரம்பரியத்தை உடைத்திருக்கிறார் கார்ப்பரேட் யோகி பாபா ராம்தேவ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick