இ-கேஒய்சி... முதலீட்டாளர்களுக்கு ஈஸி ஆகுமா?

இரா.ரூபாவதி

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே  கேஒய்சி (Know Your Customer) நடைமுறைக்கு வந்தது. முதலீட்டாளரின் முகவரி, புகைப்பட அடையாளச் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு, இந்த கேஒய்சி வழங்கப்படும். பிறகு பான் கார்டு எண்ணுடன் இந்த கேஒய்சி இணைக்கப்படும். அதாவது, முதலீட்டாளரின் பான் கார்டை வைத்தே அவர் கேஒய்சி செய்துள்ளாரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். கேஒய்சிக்காக விண்ணப்பிக்கும் முதலீட்டாளரை மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட், விநியோகஸ்தர் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் என யாராவது ஒருவர் கட்டாயம் நேரில் பார்த்திருக்க வேண்டும் (In Person Verification) என்பது விதிமுறை. ஆனால், அதில் சில சிக்கல்கள் நிலவுவதால், தற்போது இ-கேஒய்சி (Electronic Know Your Customer) முறையை அறிமுகப்படுத்த உள்ளன சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். 

இந்த புதிய முறையை தற்போது ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலமாக போலி முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இ-கேஒய்சி என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது, யாருக்கு இந்த கேஒய்சி முறை என்பது குறித்து கேம்ஸ் (Computer Age Management Services Pvt Ltd.) நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டோம்.

“மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு கேஒய்சி என்பது கட்டாயம். இதில் முதல் முறை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை நேரில் பார்ப்பதில் சில சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது. அதாவது, முதலீட்டாளர்கள் வெளியூரில் வசிக்கும்போது அல்லது பணியின் காரணமாக வேறு இடத்துக்குச் சென்றிருந்தால், அந்தச் சமயத்தில் கேஒய்சி செய்வது கடினம். இதுபோன்ற முதலீட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த இ்-கேஒய்சி.

இதில் முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், விநியோகஸ்தர் கள், கேஆர்ஏ(KRA- KYC Registration Agency), ரெப்பாசிட்டரி ஆகியோரின் இணையதளத்தில் இ-கேஒய்சிக்கான படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்தபிறகு அதனுடன் முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்று, புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குறிப்பிட்ட நேரத்தை அந்த முதலீட்டாளருக்காக ஒதுக்கும். அந்த நேரத்தில் முதலீட்டாளர் வீடியோ கலந்தாய்வு முறையில் மியூச்சுவல் ஃபண்ட் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள வேண்டும். அந்த கலந்தாய்வில் முதலீட்டாளர் கேஒய்சிக்காகச் சமர்ப்பித்த ஆவணங்களின் ஒரிஜினலை காண்பிக்க வேண்டும். அதன்பிறகு முதலீட்டாளரின் புகைப்படத்தையும் வீடியோ கலந்தாய்வில் இருக்கும் நபரையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இவை அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர், அந்த முதலீட்டாளருக்கான கேஒய்சி நடைமுறை முடியும்.  அதன்பிறகே அவர் முதலீட்டைத் தொடங்கலாம். இதை விநியோகஸ்தர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கேஆர்ஏ, ரெப்பாசிட்டரி என யார் வேண்டுமானாலும் இந்த நடைமுறைகளைச் செய்ய முடியும்.

செபியின் விதிமுறையின்படி, ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஏதாவது ஒரு ரெப்பாசிட்டரி ஒப்பந்தம் செய்துகொண்டு முதலீட்டாளருக்கு கேஒய்சி வழங்க வேண்டும். எனவே, முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூலமாக கேஒய்சிக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சம்பந்தப்பட்ட ரெப்பாசிட்டரிக்கு அனுப்பி கேஒய்சி நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு கூறும். அதன்பிறகு முதலீட்டாளருக்கு கேஒய்சி வழங்கப்படும்” என்றார்.

இந்த இ-கேஒய்சி முறையை ஸ்மார்ட் போன் மூலமாகவே செய்துகொள்ள முடியும். இதற்கு இன்டர்நெட் வசதி மட்டும் இருந்தால் போதும். வீடியோ கலந்தாய்வு இப்போது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இந்த முறை சரியாகச் செயல்பட்டால், சிறு நகரங்களில் வசிக்கும் சிறிய முதலீட்டாளர்களும் எளிதாக கேஒய்சி பெற்று, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick