அதிகரித்த தங்கத்தின் தேவை... இது வாங்கும் தருணமா?

இரா.ரூபாவதி

லக அளவில் தங்கத்தின் தேவை  கடந்த ஜூலை -  செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த தேவையைவிட சென்ற காலாண்டில் தேவையானது 6% அதிகரித்துள்ளதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

தங்கத்துக்கான கவர்ச்சி இனி பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்த்த நிலையில், அதன் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது ஆச்சரியத்தையே ஏற்படுத்தி உள்ளது.

காயின் மற்றும் பார்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காயின் மற்றும் பார் தங்கத்தின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இதன் தேவை 33% அதிகரித்து, 295.7 டன்னாக இருந்தது. ஆனால், இந்தியாவில் காயின் மற்றும் பார் தங்கத்துக்கான தேவை 6 சதவிகிதம்தான் உயர்ந்துள்ளது. 

ஆபரணங்களின் தேவை!

ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் பண்டிகைக் காலம் என்பதால், ஆபரணங்களின் தேவை அதிகரித்து உள்ளது. இந்த மூன்று மாதங்களில் திருமணங்களும் அதிகம் நடக்கும் என்பதால், ஆபரணங்களின் தேவை அதிகரித்துள்ளது. அதாவது,2015 ம்  ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஆபரணங்களின் தேவை 15% அதிகரித்துள்ளது.  2014-ன் மூன்றாவது காலாண்டில் 184.2 டன்னாக இருந்த ஆபரணங்களின் தேவை 2015-ன் மூன்றாவது காலாண்டில் 211.1 டன்னாக அதிகரித்துள்ளது.

தங்கத்தை அதிகமாக பயன்படுத்தும்  நாடு இந்தியா, சீனா மற்றும் துருக்கிதான். ஆனால், சென்ற ஜூலை - செப்டம்பர் காலாண்டில் முதலீடு அதிகரிக்க முக்கிய காரணம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட விலைச் சரிவுதான். அந்த சமயத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தங்கத்தின் மீதான முதலீடு கணிசமாக உயர்ந்தது. இதற்குமுன் 2008-ல்தான்  தங்கத்தில் அவர்கள் நிறைய முதலீடு செய்தார்கள். அதன்பிறகு இப்போதுதான் தங்கத்தில் அதிக முதலீடு செய்கிறார்கள்.

இடிஎஃப் தேவை!

2015 மூன்றாவது காலாண்டில் தங்கத்தின் விலை குறைந்ததாலும், உலக நாடுகளில் நிலவும் பிரச்னைகள் காரணமாகவும் கோல்டு இடிஎஃப் மீதான முதலீடுகள் 65.9 டன் குறைந்து உள்ளது. இதுவே 2014 மூன்றாவது காலாண்டில் 41.5 டன் குறைந்திருந்தது.

அதிகரித்த கையிருப்பு!

சென்ற காலாண்டில் பல நாடுகளின் மத்திய வங்கிகள், தனது தங்கத்தின் கையிருப்பை அதிகரித்துள்ளன. அதாவது, சென்ற காலாண்டுடன் ஒப்பிடுகையில், 175 டன் அதிகரித்துள்ளது. இந்தக் கையிருப்பு கடந்த மூன்று ஆண்டு களில் குறைந்த அளவாகும். ஆனால், 2015-ம் ஆண்டில் பார்க்கும் போது, இது தான் அதிக அளவாக உள்ளது.

2009-ம் ஆண்டுக்குப்பிறகு தனது தங்கக் கையிருப்பை சீனா 57% அதிகரித்தது. ஆனால், 2015-ம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் 50 டன் அளவுக்குத்தான் சீனா தனது தங்க கையிருப்பை அதிகரித்துள்ளது. மொத்த கையிருப்பின் 2% அளவுக்குக் குறைந்து, 1,708 டன் தங்கம் சீனாவின் மத்திய வங்கியில் உள்ளது.

உற்பத்திக் குறைவு!

உலோகங்களின் விலை வீழ்ச்சி காரணமாக பல்வேறு சுரங்கங்களின் உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கத்தின் உற்பத்தி 1% அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும், மறுசுழற்சி தங்கத்தின் அளவும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 6% குறைந்து உள்ளது. 2014 மூன்றாவது காலாண்டில் 268 டன்னாக இருந்த மறுசுழற்சி தங்கத்தின் பயன்பாடு 2015 வருடம் மூன்றாவது காலாண்டில் 252 டன்னாக குறைந்தது.

தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என்பது குறித்து மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் டைமண்ட் அசோசியேஷனின் தலைவர் ஜெயந்திலால் ஜே.சலானியிடம் கேட்டோம்.

“சென்னையில் அக்டோபர் மாதம் வரையிலான விற்பனை மிகச் சிறப்பாக  இருந்தது. இதற்கு முக்கிய காரணம், விலை வீழ்ச்சிதான். ஒரு சவரன் தங்கத்தின்  விலை ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு கீழ் இருந்ததால், மக்கள் புதிதாக தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்கள். ஏனெனில் தங்கம்தான் சிறந்த முதலீடு என்று நினைக்கிறார்கள் மக்கள். மேலும், கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தங்கத்தின் விலையில் ஒருவிதமான தேக்கநிலை நிலவுவதால், இதற்கு மேல் விலை குறைய வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் மக்களின் மனதில் உருவாகிவிட்டது. எனவே, தங்கத்தை இப்போதே வாங்கலாம் என நினைத்து வாங்க ஆரம்பித்துள்ளார்கள்.

மேலும், தீபாவளி பண்டிகை இந்த மாத தொடக்கத்திலேயே வந்தததால்,  தீபாவளி போனஸும், சம்பளமும் ஒரே சமயத்தில் கிடைத்து மக்களிடம் அதிக அளவில் பணம் புழங்கியது. இதன் காரணமாக தங்கம் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி இருந்தார்கள்.

விலை அதிகமாக இருக்கும்போதுதான் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கம் வாங்குவார்கள். ஆனால், இப்போது தங்கத்தின் விலை சரிந்து இருப்பதால், பழைய தங்கத்தை மக்கள் விற்கவில்லை. மேலும், புதிதாக தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம்தான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தங்க நகை விற்பனை அதிகமாகவே இருந்தது” என்றார்.

தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், அதை கொஞ்சமாக வாங்கி வைப்பதில் தவறில்லை. ஆனால், மொத்த பணத்தையும் அதில் கொண்டு போய் முடக்கத்தான் வேண்டுமா?

படங்கள்: ப.சரவணகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick