தவறான தகவல் கொடுத்தால்... பாலிசி ரத்தாகும் ஜாக்கிரதை!

ண்மையில் நண்பர் ஒருவர் இன்ஷூரன்ஸ் பாலிசியில், பிரீமியத்தை குறைக்க தவறான விவரம் கொடுத்ததால் அவருக்கு க்ளெய்ம் ரத்து செய்யப்பட்டது. இதுபோல பலர் சில ஆயிரங்களை மிச்சப்படுத்த வேண்டுமென்றே தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார்கள்.

பாலிசி எடுக்கும்போது எந்த மாதிரியான தகவல்களை பாலிசிதாரர்கள் தவறாகத் தருகிறார்கள் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்திடம் கேட்டோம்.

“பெரும்பாலான பாலிசிதாரர்கள் தங்களின் வயதை தவறாகக் கொடுக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது பெரும்பாலும் 45 வயதுக்குப் பிறகுதான் மருத்துவப் பரிசோதனை இருக்கும். எனவே, மருத்துவப் பரிசோதனையைத் தவிர்ப்பதற்காக பாலிசி எடுக்கும்போது வயதை 44 எனக் குறிப்பிடும்  தவறை பலரும் செய்கிறார்கள். இந்த ஒரு காரணத்தை வைத்தே க்ளெய்மை நிராகரிக்க முடியும்.

அடுத்ததாக, ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு எப்போதுமே கவரேஜ் கிடைக்காது என பாலிசிதாரர்கள் நினைக்கிறார்கள். இதன் விளைவாக, பாலிசி எடுக்கும்போது ஏற்கெனவே உள்ள நோய்களின் தகவல்களை மறைத்துவிடுகிறார்கள். இதுவும் தவறு. ஏற்கெனவே உள்ள நோய்களுக்குப் பெரும்பாலும் காத்திருப்புக் காலம்தான் இருக்கும். இன்னும் சில நோய்களுக்குக் குறிப்பிட்ட சதவிகிதம் கோ-பேமென்ட் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிபந்தனைகளுடன் கவரேஜ் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றார்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நீங்கள் கொடுத்த தகவல் குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குச் சந்தேகம் எழுந்தால், அது குறித்த சரியான தகவல்களை பாலிசி எடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பாலிசிதாரரிடம் கேட்டுப் பெறுவது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடமையாகும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஷூரன்ஸ் நிறுவனமானது, தவறான தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள் என க்ளெய்மை நிராகரிக்க முடியாது. பாலிசி எடுத்தவர்களும் ஏதாவது மாற்றம் அல்லது தகவல்கள் சேர்க்க வேண்டும் எனில் அதை உடனடியாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்துவது முக்கியம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பொறுத்தவரை, க்ளெய்ம் நிராகரிக்கப்படும் போது பாலிசி எடுத்தவருக்குத் தான் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது இதுபோன்ற பிரச்னைகளினால் க்ளெய்ம் நிராகரிக்கப்பட்டால் பாதிக்கப்படுவது குடும்ப உறுப்பினர்கள்தான். ஏனெனில் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகு கிடைக்கும் காப்பீட்டுத் தொகையாகும். அந்தச் சமயத்தில் தவறான தகவல் தந்து பாலிசி எடுத்திருப்பதாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்மை காலம் தாழ்த்தியோ அல்லது வழங்காமலேகூட போக வாய்ப்புள்ளது. இதனால் சிக்கலில் சிக்குவது உங்களின் குடும்ப உறுப்பினர்கள்தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது ஒருவருக்கு உள்ள நோய்களை உள்ளபடி மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளெய்ம் வழங்குவதற்குமுன் மருத்துவரின் அறிக்கையைப் பார்க்கும். அதில் ஒரு குறிப்பிட்ட நோய் எவ்வளவு காலமாக உள்ளது, அதற்கு என்ன சிகிச்சை எடுத்திருக்கிறீர்கள், பாலிசி எடுத்து எவ்வளவு நாள் ஆகியுள்ளது என்பதையெல்லாம் ஆராயும்.

அப்படிப் பார்க்கும்போது பாலிசி எடுப்பதற்குமுன்பே அந்த நோய் இருப்பது தெரிந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளெய்மை நிராகரிப்பது மட்டும் இல்லா மல் பாலிசியை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இப்படி இன்ஷூரன்ஸ் நிறுவனம் பாலிசியை ரத்து செய்வதை எந்த அமைப்பிலும் முறையிட முடியாது என்பதை மறக்கக்கூடாது. எனவே, பாலிசி எடுக்கும்போது சரியான, உண்மையான தகவல்களை மட்டுமே சொல்ல வேண்டும்.

இரா.ரூபாவதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick