கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

ந்த வாரம் சோயா பீன் விலைப்போக்கு குறித்து சொல்கிறார் இண்டிட்ரேடு கமாடிட்டீஸ் அண்ட் டெரிவேட்டிவ்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் முருகேஷ்குமார்

சோயா பீன் (Soybean)

“உலக அளவில் இந்தியா அதிகமாக சோயாவை இறக்குமதி செய்கிறது. வட இந்தியா முழுவதும் ஆர்எம் சீட் ஆயிலும், சோயா ஆயிலும்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அரசு சோயா இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. மேலும், தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால், சோயாவுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதுபோக, சோயா பயிரிடப்படும் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், கடந்த நிதி ஆண்டைக் காட்டிலும் இந்த நிதி ஆண்டில் சோயா உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளதால் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. ஒரே வாரத்தில் ஒரு குவிண்டால் சோயாவின் விலை ரூ.600 அதிகரித்து, ரூ.3,200 லிருந்து ரூ.3,850-ஆக வர்த்தகமானது.

ஆனால், சோயாவை அதிகளவில் உற்பத்தி செய்யும் அமெரிக்கா, உலகளவில் சோயா உற்பத்தி உயர்ந்துள்ளதாக குறிப்பிடுகிறது. வெள்ளி அன்று அந்த நாட்டின் விவசாயத் துறை அக்டோபர் மாதத்துக்கான அறிக்கையை வெளியிட இருக்கிறது.

இந்தியாவில் மழைப்பொழிவு குறைந்து, சோயா உற்பத்தி குறையும் என்ற காரணத்தி னாலும், பண்டிகைகள் காரணமாக சோயாவின் தேவை அதிகரித்திருப்பதாலும் வரும் வாரத்தில் சோயாவின் விலை சற்று உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

இறக்குமதி வரி அதிகரித்தாலும் தேவை யான சோயா இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், ரூ.3,900 - 3,950 என்ற அளவில் வர்த்தகமாகலாம்.” 

ஜீரகம் (Jeera)

இந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஜீரகம் வரத்து அதிகரித்ததால், விலை குறைந்து வர்த்தகமானது.  மேலும், நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஜீரக ஏற்றுமதி கடந்த ஆண்டில் 49,000 டன்னாக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 45% குறைந்து 27,000 டன்னாக உள்ளது. இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் நறுமணப் பொருளான ஜீரகத்தின் ஏற்றுமதி குறைந்துள்ளது விவசாயிகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களில் ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமானதால், விவசாயிகளுக்கு 2015-16-ன் ராபி பருவத்தில் ஜீரக விளைச்சலை மேலும் அதிகரிக்கலாம் என்ற உற்சாகத்தைக் கொடுத்தது. அக்டோபர் மாதத்தில் ஜீரக சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஜீரகம் விளையும் பகுதிகளில் மழைப்பொழிவும் நன்றாக இருப்பதால், உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் முக்கியச் சந்தைகளில் வரத்து அதிகரித்து காணப்படும் என்பதால், ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமாவதற்கு வாய்ப்பில்லாமல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ஜீரக உற்பத்தியில் முன்னணி நாடான சீனாவில் உற்பத்தி குறைந்துள்ளதாலும், சிரியா மற்றும் துருக்கியில் நிலவும் அரசியல் பதற்றங்களாலும் ஜீரகத்துக்கான தேவையும், ஏற்றுமதி ஆர்டர்களும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜீரகத்துக்கான தேவை குறையும்பட்சத்தில் ஜீரகத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

மஞ்சள் (Turmeric)

சந்தைகளில் வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரித்து காணப்பட்டதாலும், கடந்த வாரத்தில் மஞ்சள் விலை உயர்ந்து வர்த்தகமானது. கடந்த வாரம் குவிண்டால் ரூ.7,512 என்ற நிலையில் வர்த்தகமான மஞ்சள், இந்த வாரத்தில் என்சிடிஇஎக்ஸ் கிடங்கு தகவலின்படி, ரூ.7,969-ஆக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாடுகளிலும் மஞ்சளுக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது.

அரசு வேளாண் துறையின் சமீபத்திய அறிக்கையின்படி, மஞ்சள் அதிகம் விளையும் தெலங்கானா பகுதியில் செப்டம்பர் 26-ம் தேதி நிலவரப்படி, விளைச்சல் ஏரியா 40,830 ஹெக்டேராக உள்ளது. இது கடந்த வருடத்தைக் (44,623 ஹெக்டேர்) காட்டிலும் குறைவு. வழக்கமாக அங்கு 49,691 ஹெக்டேருக்கு மஞ்சள் விளைச்சல் இருக்கும். மஞ்சள் விளையும் பிற பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களிலும் மழைப்பொழிவு குறைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மஞ்சளுக்கான தேவை அதிகரித்திருப்பதால், மஞ்சள் விளைச்சல் குறைவு குறித்த கவலை உருவாகியுள்ளது. இதனால் வரும் வாரத்தில் மஞ்சள் விலை குறைய வாய்ப்பு இல்லை.

ஜெ.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick