கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

மஞ்சள் (TURMERIC)

இந்த வாரத்தில் தேவை குறைந்து காணப்பட்டதால், மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமானது. இருப்பினும் ஏற்றுமதி தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும், உள்நாட்டில் விழாக்காலம் என்பதால் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பினாலும் விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது. நடப்புப் பருவத்தில் மஞ்சள் விளைச்சல் குறைவு மற்றும் உற்பத்திக் குறைவு போன்ற காரணங்களாலும் இனிவரும் காலங்களில் மஞ்சள் விலை அதிகரித்து வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நிலவரப்படி, தெலங்கானாவில் மஞ்சள் விளைச்சல் ஏரியா 40,830 ஹெக்டேராக காணப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 44,364 ஹெக்டேராக இருந்தது என அந்த மாநில வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் மஞ்சள் பயிர் விளைவதற்கான சாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தினால் நடப்புப் பருவத்தில் விளைச்சல் குறையும்; இதனால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக்காய் (CARDAMOM)

ஏலக்காய் வரத்து சந்தைக்கு அதிகரித்துக் காணப்பட்டதால், விலை குறைந்து வர்த்தகமானது. வியாழக்கிழமை அன்று 76 டன் ஏலக்காய் வரத்து காணப்பட்டது. அன்றைய தினத்தில் ஒரு கிலோ ஏலக்காய் விலை குறைந்தபட்சமாக ரூ.686-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.958-க்கும் வர்த்தகமானது.

நறுமணப் பொருட்கள் வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, சிறிய ரக ஏலக்காய்களுக்கு தேவை அதிகரித்துக் காணப்படுவதால், அதன் விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

வெள்ளிக்கிழமை அன்று செப்டம்பர் மாத கான்ட்ராக்ட் ஏலக்காய் ஒரு கிலோவுக்கு ரூ.824.20-க்கு விலை குறைந்து வர்த்தகமானது. இனிவரும் நாட்களிலும் சந்தைக்கு வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விலை குறைந்தே வர்த்தக மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீரகம் (JEERA)

உள்நாட்டுத் தேவை குறைவின் காரணமாக ஜீரகத்தின் விலை குறைந்து காணப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி முக்கிய வர்த்தக சந்தைகளில் குறைவான வர்த்தகமே காணப்பட்டது. சந்தை நிலவரப்படி, சீனாவில் ஜீரகம் பயிர் சேதம் அதிகரித்துக் காணப்படுவதாலும், ஜீரகத்தை அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடான சிரியா மற்றும் துருக்கியில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாகவும் இந்தியாவுக்கு ஏற்றுமதி தேவை அதிகரிக்கும் என்றும், இதனால் ஜீரகத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் ஜீரகம் விளையும் ஏரியாக்களில் நல்ல மழை பெய்துள்ளதால், வரவிருக்கும் ராபி பருவத்தில் தரமான ஜீரகம் விளைச்சல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொத்துமல்லி (CORIANDER)

நடப்புப் பருவத்தில் உற்பத்தி அதிகரித்துக் காணப்படுவதால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, இதனால் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. கொத்துமல்லி அதிகம் விளையும் குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங் களில் நல்ல மழைப்பொழிவு காணப்படுவதால், விளைச்சல் மட்டுமல்லாமல் கொத்துமல்லியின் தரமும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை நிலவரப்படி, 2014-15-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலத்தின் கொத்துமல்லி உற்பத்தி, இதற்கு முந்தைய ஆண்டைவிட 23% அதிகரித்து காணப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் சென்ற ஆண்டின் கொத்துமல்லி உற்பத்தி 40,000 டன்னாக காணப்பட்டது.

நடப்பு ஆண்டில் இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்திலும் சென்ற ஆண்டின் உற்பத்தியைவிட 10% அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி நிலவரப் படி, என்சிடிஇஎக்ஸ் கிடங்குகளில் இருப்பு நிலை 42,318 டன். இது இதற்கு முந்தைய வாரத்தில் 42,037 டன்னாக காணப்பட்டது.

செ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick