கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

ச்சா எண்ணெய்யின் விலைப்போக்குக் குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் விளக்குகிறார்.

கச்சா எண்ணெய்!

“கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. பல்வேறுவிதமான செய்திகள் மாறி மாறி வருவதால் சந்தையும், முதலீட்டாளர்களும்  ஒரே திசையில் பயணிக்க முடியாமல், ஒருவிதமான எச்சரிக்கையுடன் அணுகுவதைப் பார்க்க முடிகிறது.

அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதால், விலை ஏற்றமானது தடுக்கப்படுகிறது. சமீபத்தில் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகள் வரும் காலத்தில் கச்சா எண்ணெய்யின் தேவையை அதிகரிக்கச் செய்யுமா என்று சந்தைகள் எதிர்பார்க்கின்றன.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகள் விலைச் சரிவைத் தடுப்பதற்காக ஒன்று சேர்ந்து விவாதிக்க வேண்டும் என்று வெனிசுலா யோசனை தெரிவித்திருந்தது. அதை சவுதி அரேபியா நிராகரித்ததை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலையானது மீண்டும் சரியத் தொடங்கி இருக்கிறது.

ரஷ்யாவின் எரிபொருள் அமைச்சர் தங்கள் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவைக் குறைக்க வாய்ப்பில்லை என்றும், அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி அளவு குறைந்தால் மட்டுமே விலை ஏற்றத்தைப் பார்க்க முடியும் என்றும் கூறியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பெட்ரோலியம் அமைப்பு (API) செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில், அமெரிக்காவின் கையிருப்பானது 2.1 மில்லியன் பேரல்கள் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமில்லாமல், ஈரான் அடுத்த ஆண்டில் ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் உற்பத்தி செய்யக்கூடும் என்பது கச்சா எண்ணெய் சந்தையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் விலைச்சரிவு அரேபிய நாடுகளின் பொருளாதாரத்தில் பெரிய அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டுக்கு  ஒரு பேரல் விலை 80 டாலர்களாகவும், சவுதி அரேபியாவுக்கு 105 டாலர்களாகவும், ஈரானுக்கு  130 டாலர்களாகவும் இருந்தால்தான் அவர்களால் பட்ஜெட் போட முடியும் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.”

தங்கம்!

கடந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,125 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால், அடுத்த நாளே 1,102 டாலர் அளவுக்கு விலை சரிந்து வர்த்தக மானது. அடுத்தடுத்த நாட்களில் அதிக விலையில் வர்த்தகமாகி வந்தது.

தங்கத்தின் விலையானது அமெரிக்க வட்டி விகித உயர்வு அறிவிப்பின் அடிப்படையில்தான் இருக்கும். கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் அளவுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதே காலாண்டின் உற்பத்தி 4% குறைந்துள்ளது. இதற்கு  காரணம், தங்கம் உற்பத்தி செய்வதற்கான முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருவதே. இதன் விளைவாக, அடுத்து வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் தங்கத்தின் உற்பத்தியானது 7 - 10 சதவிகித அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது.

மேலும், எரிபொருளின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், அமெரிக்காவின் பணவீக்க விகிதம் அதிகரிக்கவில்லை. பணவீக்க விகிதம் அதிகரித்தால்தான் வட்டி விகிதத்தை உயர்த்த முடியும். கடந்த ஆறு வருடமாக அமெரிக்காவின் பணவீக்க விகிதம் 1.3 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கவில்லை.

2008-ம் ஆண்டுப் பொருளாதாரச் சரிவு ஏற்பட்ட போது, அமெரிக்கா இரண்டு இலக்குகளை வைத்திருந்தது. பணவீக்க விகிதத்தை 2 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்த வேண்டும்; வேலை இல்லாதவர்களின் விவரத்தை 6 சதவிகிதத்துக்குக் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதாகும். இதில் வேலை இல்லாதவர்களின் சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது.

இந்த நிலையில், வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி அடுத்த வாரம் உயர்த்துமா என்கிற சந்தேகம் எழுந்திருப்பதால், தங்கத்தின் விலை உயரவே வாய்ப்புள்ளது.

கரன்சி!

''66.50 என்கிற நிலையே வர்த்தகமாகும்!'' 

கடந்த வார தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.70-யைத் தாண்டி வர்த்தகமானது. ஆனால், வார இறுதியில் 66.54 என்ற நிலையில் வர்த்தகமானது. எனவே, வரும் வாரத்தில் கரன்சி வர்த்தகம் எப்படி இருக்கும் என்று சொல்கிறார்  இந்தியா சிமென்ட் கேப்பிட் டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ கே.சுரேஷ். 

“ரூபாய் மதிப்பு அதிகமாகச் சரிவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இந்திய சந்தையில் இருந்து எஃப்ஐஐகள் வெளியேறுவது குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த கூட்டம் வருகிற 16, 17-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில்தான் எதிர்கால நிகழ்வுகள் அனைத்தும் இருக்கும். அதாவது, வட்டி விகிதத்தை 3 - 4 சதவிகித அளவுக்கு உயர்த்தினால் தான், எஃப்ஐஐகளுக்கு லாபகரமாக இருக்கும்.

1 - 2 சதவிகித உயர்வினால் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. ஆனால், வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில், சீனாவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. அதேபோல, உலகப் பொருளாதாரமும் மந்த நிலையிலே உள்ளது. இதன் காரணமாக வட்டி விகித உயர்வு இருக்க  வாய்ப்புக் குறைவு.

எனவே, வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 66.50 என்ற நிலையிலே வர்த்தகமாகும். ஒருவேளை 66.50-க்கு மேல் உயர்ந்து வர்த்தகமானாலும், மீண்டும் குறைந்துவிடும்”.

இரா.ரூபாவதி

படம்: ஹரிகரன்


கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick