பென்ஷன் திட்டம் வைத்திருப்பவர்களின் கவனத்துக்கு... மாற்றம் இருந்தால் உடனே தெரியப்படுத்துங்கள்!

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், Fundsindia.com

ன்ஷூரன்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ பென்ஷன் திட்டங்களின் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. உடனடியாக பென்ஷன் பெறும் திட்டம், காலம் தாழ்த்தி பென்ஷன் பெறும் திட்டம் என இரண்டு வகையான பென்ஷன் திட்டங்கள் உள்ளன.

இந்த இரு திட்டங்களில் உடனடியாக பென்ஷன் பெறும் திட்டத்தில் பிரீமியம் செலுத்திய அடுத்த மாதத்திலிருந்தே பென்ஷன் கிடைக்கும். ஆனால், காலம் தாழ்த்தி பென்ஷன் வழங்கும் திட்டத்தில் பாலிசி தாரரின் 60 வயதுக்கு பிறகுதான் பென்ஷன் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் பாலிசி தாரர்கள் செலுத்தும் பிரீமியம் தொகையை முதலீடு செய்து, அதன் பின்னர் பாலிசி முடிவடை யும் தருவாயில் கிடைக்கும் முதிர்வுத் தொகையை முதலீடு செய்து அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தை பாலிசிதாரர்களுக்கு பென்ஷனாக வழங்குவார்கள்.

இந்தத் திட்டத்தில்  பென்ஷன் எப்படி பெறவேண்டும் என்பதை பாலிசிதாரரே முடிவு செய்யலாம்.  அதாவது,

(1) வாழ்நாள் முழுவதும் பென்ஷன்

(2) 5, 10, 15 மற்றும் 20  ஆண்டுகளுக்கு பென்ஷன்

(3) வாழ்நாள் முழுவதும் பென்ஷன், இறப்புக்கு பிறகு முதிர்வுத் தொகை

(4) ஒவ்வொரு வருடமும் பென்ஷன் தொகையை அதிகப்படுத்துவது

(5) கணவன், மனைவி இருவரின் வாழ்நாள் முழுவதும் பென்ஷன்... என ஐந்து வகை களில் பென்ஷன் பெறும் வசதி உள்ளது. இதில்  3-வது திட்டத்தை பாலிசிதாரர் தேர்வு செய்வது புத்திசாலித்தனம். 

ஐஆர்டிஏ அமைப்பு செய்த ஆய்வின் முடிவில், பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், பாலிசிதாரர்களின் முதிர்வுத் தொகையை முதலீடு செய்யாமல் வைத்திருக்கிறது. இதனால் பாலிசிதாரர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த பென்ஷன் திட்டங்களை வாங்கும் சில பாலிசிதாரர்கள்  சில விஷயங்களை கவனிக்காமலே விட்டுவிடுகிறார்கள். அதாவது,  எந்த வகையான பென்ஷன் திட்டம் தங்களுக்குத் தேவை என்பதை சொல்லாமலே விட்டுவிடுகிறார்கள். இதன் அடிப்படையில்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டை மேற்கொள்ளும். பாலிசிதாரர் எந்த வகையான பென்ஷன் தேவை என்பதை தேர்வு செய்யவில்லை. அதனால் நாங்களும் முதலீடு செய்யவில்லை என்று கூறிவிடுகிறது.

ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இனி அப்படி செய்ய முடியாது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசியை விநியோகிக்கும்போதே, பாலிசி தாரரிடம் எந்த வகையான பென்ஷன் தேவை என்பதை கட்டாயம் பூர்த்திசெய்து தரும்படி சொல்ல வேண்டும்.  ஒருவேளை பாலிசிதாரர் எந்தத் திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை எனில்,  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதை பாலிசிதாரரிடம் கேட்டு பெற வேண்டும்.

பென்ஷன் பிளான் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பாலிசிதாரரிடம் தொடர்புகொண்டு அவர் தேர்வு செய்துள்ள பென்ஷன் முறையை கூறி, அதில் ஏதாவது மாற்றம் உள்ளதா என்பதைக் கேட்பது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கடமை. பென்ஷன் வழங்கும் முறையில் ஏதாவது மாற்றம் உள்ளதா என்பதை கேட்டு, 90 நாட்கள் வரை பாலிசிதாரரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை எனில், ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள பென்ஷன் வழங் கும் முறையில் பென்ஷன் தரலாம். 

இந்த மாற்றம் வருகிற 2016 ஏப்ரல் 1-ம் தேதியில் முதிர்வு அடையும் அனைத்து பென்ஷன் பாலிசிகளுக்கும் பொருந்தும். பென்ஷன் பிளான்களை வைத்திருப்பவர்கள் தங்களின் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அணுகி பென்ஷன் பெறும் முறையில் மாற்றம் ஏதும் இருந்தால் அதை உடனே தெரியப்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick