கமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்

மெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என அறிவித்ததும் தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது. இனி தங்கத்தின் விலைப் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்.

தங்கம்!

“செப்டம்பர் 16, 17-ம் தேதியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைந்தபட்ச அளவிலாவது உயர்த்தும் என உலக நாடுகள் அனைத்தும் காத்திருந்தது. ஆனால் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. மேலும், அமெரிக்க வட்டி விகித உயர்வின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை இருக்கும். வட்டி விகிதத்தை ஃபெடரல் வங்கி உயர்த்தாத காரணத்தினால் தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது. அதாவது வட்டி விகித உயர்வு இல்லை என அறிவித்ததும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1123 டாலராக உயர்ந்தது. இந்த உயர்வு அடுத்த நாள்வரை தொடர்ந்துகொண்டே இருந்தது. அதாவது, கடந்த வெள்ளி அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1140 டாலர் வரை உயர்ந்தது. இந்த ஏற்றம் அடுத்த மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவின் வேலையில்லாதவர்கள் விவரம் வெளிவர உள்ளது. அந்த விவரத்தின் அடிப்படையில் மீண்டும் வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புள்ளது.

மேலும் தங்கத்தை உற்பத்தி செய்யும் சுரங்க நிறுவனங்கள் செலவு குறைவு(Cost Cutting) நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. டாலருக்கு நிகரான பிற நாட்டுப் பணத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவிகித நிறுவனங்களின் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 40%-ஆக இருந்தது. இதனால் தங்கத்தின் உற்பத்தி குறைந்து வருகிறது. இந்தியாவில் பண்டிகை நாட்கள் துவங்கி விட்டது. எனவே டிமாண்ட் அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.26,700 - ரூ.26,800-க்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கச்சா எண்ணெய்!

அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பது உலக நாடுகள் அனைத்துக்கும் சாதகமான விஷயம்தான். உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சீனாவின் பொருளாதாரம் மற்றும் சில நாடுகளின் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதால் வட்டி விகித உயர்வின் உண்மையான பயன் அமெரிக்காவுக்குக் கிடைக்காது என்பதால்தான் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை 20 -25 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இனிவருவது குளிர்காலம் என்பதால் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை உயர வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு தங்களின் சந்தை பங்களிப்பைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. அதாவது எவ்வளவு விலை குறைந்தாலும் விற்பனையைக் குறைத்துக்கொள்ளக் கூடாது என ஒபெக் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையானது வருடத்துக்கு 5 டாலர் வீதம் விலை உயர்ந்தால் 2020-ம் ஆண்டுக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 80 டாலராக உயர வாய்ப்புள்ளது எனவும் ஒபெக் தெரிவித்துள்ளது. ஒபெக் நாடுகள் அல்லாத நாடுகளின் உற்பத்தி குறைந்து வருகிறது. வரும் வாரத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலையானது ரூ.3,400 –  3,500 வரை வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

கரன்சி!

கரன்சியின் போக்கு குறித்து இந்தியா சிமென்ட் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ கே.சுரேஷ் கூறுகிறார்...

“அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி உயர்வு இல்லை என அறிவித்ததன் விளைவாக கடந்த வெள்ளியன்று மட்டும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து 65.82-ஆக இருந்தது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத காரணத்தினால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகம் வருவதற்கான சூழல் உள்ளது. ஆனால், இது நிரந்தரமான சூழல் கிடையாது. வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் புதிதாக வேலை கிடைத்தவர்களின் விவரம் வெளிவர உள்ளது. அதில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு நிறைவேறினால் வட்டி வகிதம் மீண்டும் உயருவதற்கான வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 65.50 என்ற அளவிலே வர்த்தகமாக வாய்ப்பு உள்ளது.”

வெள்ளி!

தங்கத்தின் விலை உயருவதற்கு முன்பே வெள்ளியின் விலை உயர ஆரம்பித்து உள்ளது. ஆபரணப் பயன்பாட்டைவிட தொழிற்சாலைகளின் பயன்பாடு அதிகம். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவராததால் வெள்ளியின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 14.35 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 15.26 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த புதன் அன்று மட்டும் வெள்ளியின் விலை 4 % உயர்ந்துள்ளது. வரும் வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.37,500-38,000 வரை வர்த்தகமாகலாம்.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

இரா.ரூபாவதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick