ஃபைனான்ஷியல் பிளானிங்: தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

பா.பத்மநாபன், நிதி ஆலோசகர், ஃபார்ச்சூன் பிளானர்ஸ்

நாம் பாடுபட்டு உழைத்து, பணம் சேர்க்கிறோம். ஆனால், சில சமயங்களில் நாமே சில தவறுகளை செய்வதாலும், பல சமயங்களில் மற்றவர்கள் சொல்லும் தவறான வழிகளில் நாம் முதலீடு செய்து, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இழக்கிறோம்.

நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள், நாம் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொண்டால், எதிர்காலத்தில் நாம் அந்தத் தவறை செய்ய மாட்டோம். ஃபைனான்ஷியல் பிளானிங்கில் நாம் செய்யக்கூடாத 10 தவறுகள் என்னென்ன?

லைஃப் இன்ஷூரன்ஸ்!

நம்முடைய ரிஸ்க்கை நாமே சுமப்பது கடினம். ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு சிறிய பிரீமியம் செலுத்தி, அந்த ரிஸ்க்கை அவர்களிடம் மாற்றுவதே புத்திசாலித்தனம். வந்தால் லட்ச ரூபாய், போனால் நூறு ரூபாய் என்கிற ரீதியில்தான் நாம் இன்ஷுரன்ஸை அணுக வேண்டுமே ஒழிய, அதை ஒரு முதலீடாக கருதுவது அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது கார் இன்ஷூரன்ஸுக்கு சமம். கார் இன்ஷூரன்ஸில் நாம் கட்டக்கூடிய பிரீமியம் திரும்பி வரவேண்டும் அல்லது அதன் மூலம் முதிர்வுத் தொகை திரும்பக் கிடைக்க வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. ஆனால், டேர்ம் இன்ஷூரன்சில் போட்ட பணம் திரும்பி வராது. எனவே, எனக்கு இந்த இன்ஷூரன்ஸ் வேண்டாம் என்று பலரும் சொல்வதைக் கேட்கிறோம். இது தவறு. குறைவான பிரீமியத்தில், நிறைவான கவரேஜ் தரும் டேர்ம் பிளான்தான் பெஸ்ட். இதனை பல காலமாக புரிந்துகொள்ளாமலே நாம் இருந்துவிட்டோம். இனியாவது டேர்ம் இன்ஷூரன்ஸ் மட்டுமே வேண்டும் என்று சொல்லத் தொடங்குவோம். குறைந்த பணத்தை டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரிமீயமாக செலுத்தி, மீதமாகும் பணத்தை நீண்ட காலத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பார்ப்போம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

‘நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் எனக்கு தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துத் தந்திருக்கிறார்கள். எனவே, நான் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க தேவையில்லை’ என்று சிலர் நினைக்கிறார்கள். இன்று எந்த வேலையும் நிரந்தரம் இல்லை. மேலும், பலர் தங்களுடைய வளர்ச்சிக்காக அடிக்கடி வேலையை மாற்றுகிறார்கள். இந்த இடைவெளியில் நமக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் நம்முடைய தனிப்பட்ட பாலிசி மட்டுமே நமக்கு உதவும். அந்த வகையில், அலுவலக குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தாலும், தனியே ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. ஆபீஸ் தந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை மட்டுமே நம்பி இருப்பது தவறு.

முதலீட்டு ரிஸ்க்!

முதலீட்டு ரிஸ்க்-க்கு பயந்து அதிக வருமான வாய்ப்பை நம்மவர்கள் இழக்கும் தவறை நாம் செய்யக் கூடாது. இன்றைய நிலையில் எந்த முதலீட்டுத் திட்டத்திலும் நிலையான மற்றும் உத்தரவாத வருமானம் கிடைக்காத நிலை உருவாகி இருக்கிறது. தபால் அலுவலக முதலீட்டுத் திட்டங்களுக்கான வட்டிகள்கூட இந்த ஏப்ரல் முதல் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகிறது. எனவே, முதலீட்டு வட்டி மற்றும் வருமானம் என்பது அது காலத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். ரிஸ்க் எடுக்கும் அதே நேரத்தில், முதலீட்டை நீண்ட காலத்துக்கு மாற்ற வேண்டும். அப்போது ரிஸ்க் பரவலாக்கப்படுவதால், அதிக வருமானமும் கிடைக்கும். இது போன்ற ஒரு முதலீடாகத்தான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன.

ரிஸ்க், ஏற்ற-இறக்கம் வேறு!

ரிஸ்க்குக்கும் ஏற்ற இறக்கத்துக்கும் (Volatility) நிறைய வித்தியாசம் உள்ளது. ஏற்ற இறக்கம் என்பது வாழ்க்கை நடைமுறை. பெரும்பாலான முதலீடுகளின் வளர்ச்சி மற்றும் வருமானம் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் விளம்பர முடிவில் மட்டுமே இதை வெளிப்படையாக சொல்வதால் பலரும் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். திருமணத்துக்கு தங்கம் தேவை  என்பதால் அதை தங்கமாகவே வேண்டும் என்ற நிர்பந்தமில்லை. இதை புரிந்துகொண்டால் பலரும் தங்கச் சீட்டில் சேர மாட்டார்கள். தங்கச் சீட்டில் கிடைக்கும் தங்கத்தைவிட, மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் நீண்ட காலத்தில் முதலீடு செய்வதன் மூலம் இரண்டு மடங்கு தங்கம் கூடுதலாக உங்கள் மகளுக்குப் போட வாய்ப்புண்டு.

நீண்ட கால ட்ராக் ரெக்கார்ட்!

எந்த முதலீட்டு திட்டத்திலும் நீண்ட கால ட்ராக் ரெக்கார்ட் கிடையாது. ரியல் எஸ்டேட் பெரிதாக லாபம் தரும் என்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு ஏரியாவில் எவ்வளவு லாபம் தந்திருக்கிறது என்பதை அறிய ட்ராக் ரெக்கார்ட் இல்லை. ஆனால், கடந்த 36 ஆண்டுகளில் 25 ஆண்டுகளுக்கு மும்பை பங்குச் சந்தை பாசிட்டிவ் ரிட்டர்ன்ஸ் கொடுத்துள்ளது. இதை புரிந்துகொண்டவர்கள் நீண்ட கால முதலீட்டுக்கு பங்குச் சந்தை சார்ந்த  திட்டத்தை தவிர, வேறு எந்தத் திட்டத்திலும் முதலீடு செய்ய மாட்டார்கள். மேலும், இந்த திட்டத்தில் கிடைக்கும் வருமானத்துக்கு ஒரு வருட காலத்துக்கு பின்பு நமக்கு எந்த விதமான வருமான வரியும் கிடையாது. எனவே, நீண்ட கால ட்ராக் ரெக்கார்ட் உள்ள முதலீடுகளில் முதலீடு செய்வதே சரி!

பணவீக்க விகிதம் பார்ப்பது அவசியம்!

வங்கி எஃப்.டி. பாதுகாப்பான முதலீடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாதுகாப்பு என்பது முதலீட்டுக்குத்தான்; பணவீக்கத்துக்கு, அதாவது விலைவாசி உயர்வுக்கு அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி என்பது உயர்ந்துகொண்டே இருக்கும். ஆனால், எஃப்.டி. மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் என்பது குறையும் அல்லது உயராமல் ஒரே அளவில் இருக்கும். அப்போது செலவுக்கேற்ற தொகை, வட்டி வருமானத்திலிருந்து கிடைக்காது. கூடுதலாக செய்யப்படும் செலவு அசலிலிருந்து எடுக்க ஆரம்பித்தால், அடுத்த சில வருடங்களில் அதுவும் கரைந்து ஜீரோ ஆகிவிடும். எனவே, பணவீக்கம் என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ் எதிரியை நாம் சரியான முதலீட்டின் மூலம் போராடி ஜெயிக்க வேண்டும். குறைந்தபட்சம் பணவீக்கத்தை ஈடு செய்கிற அளவுக்குக்கூட இல்லாத முதலீடு நிச்சயம் தவறான முதலீடுதான்.

கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது!

கடன் வாங்கி முதலீடு செய்வது மிகத் தவறான விஷயம். இதை பலரும் பின்பற்றுவதில்லை. அனைவரும் கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறார்கள். ஒரு வீடு என்பது எல்லோருக்கும் தேவை. அதைத் தாண்டி மேலும் மேலும் கடன் வாங்கி முதலீடு செய்வது தவறு.

எல்லா முதலீடும் ரியல் எஸ்டேட்டில் கூடாது!

நமது எல்லா முதலீட்டைப் போல ரியல் எஸ்டேட்டும் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது. கடந்த ஐந்து வருடத்தில் எந்தவித ஏற்றமும் இந்த முதலீட்டில் இல்லை. மேலும், ஒரு முதலீடு என்பது நாம் வேண்டும்போது அதை விற்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்; அப்படி விற்க முடியாவிட்டால் அதனால் பயன் இல்லை. ரியல் எஸ்டேட்டில் நினைத்த நேரத்தில் நம்மால் இடத்தை விற்க முடியாது. எனவே, எல்லா முதலீட்டையும் ரியல் எஸ்டேட்டில் போடக்கூடாது.

முதலீட்டு ஒழுக்கம்!

கூட்டு வட்டியின் வலிமை நீண்ட கால முதலீட்டில் மட்டுமே புலப்படும். என்னிடம் அதிகம் பணம் இல்லை என்று முதலீடு செய்யாமல் தவிர்ப்பதைவிட, என்னால் முடிந்த அளவு முதலீடு செய்வேன் என்பது ஒரு முதலீட்டு ஒழுக்கத்தை தருவதுடன் அதன் மீது ஈடுபாடு கொள்வதற்கும் வழிவகுக்கிறது. அதுதான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்ஐபி. இந்த முதலீட்டு முறையில் மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.500கூட முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு மாதமும் ரூ.500 ஆர்.டி.யில் போடுவதைவிட, நீண்ட காலத்தில் மீயூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே சரி!

வருமான வரி சேமிப்பு..!

வருமான வரியை மிச்சப்படுத்த மேற்கொள்ளும் முதலீட்டுக்கு வருடத்தின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை கால அவகாசம் உள்ளது என்று பலரும் கடைசி நிமிடத்தில் முடிவு செய்யும்போது தவறான முடிவே எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. மியூச்சுவல் ஃபண்டில் இஎல்எஸ்எஸ் (ELSS) முதலீடுதான் குறைந்த  மூன்றாண்டு கால முதலீட்டுத் திட்டம். ஒருவர் முதல் மூன்று ஆண்டுகள் இதில் முதலீடு செய்தால், நான்காம் ஆண்டு முதல், முதலீட்டுத் தொகையை  வரி கட்டாமலே திரும்பப் பெறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்