கோரஸை விற்கும் டாடா... இனியாவது நஷ்டத்திலிருந்து தப்பிக்குமா டாடா ஸ்டீல்?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues)

மீபத்தில் இந்தியாவின் முன்னணி தொழில் வர்த்தகக் குழுமமான டாடா குழுமத்தின் டாடா ஸ்டீல் நிறுவனம் இங்கிலாந்திலுள்ள தனது எஃகு (Steel) தொழிற்சாலைகளை முழுவதுமாகவோ அல்லது பகுதிகளாகவோ விற்க இருப்பதாக வெளிவந்த செய்தி, பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே பரபரப்பை உண்டாக்கியது. டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த பல  வருடங்களாக கடுமையான நெருக்கடியில் தத்தளித்து வந்ததே இதற்குக் காரணம்.

தொழில் துறை ஜாம்பவானான டாடா நடத்தும் நிறுவனத்துக்கே நெருக்கடியா என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் தெரிய வேண்டும் எனில், டாடா ஸ்டீல் - கோரஸ் நிறுவனத்தின் இணைப்புக்கு முந்தைய, பிந்தைய வரலாற்றை கொஞ்சமாகவாவது தெரிந்துகொள்ள வேண்டும்.

கோரஸ் வாங்கும்முன்...!

இந்தியாவில் 1990-களில் வித்திடப்பட்ட பொருளாதாரத் தாராளமயமாக்குதல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக 2000-களில் இந்திய நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சி அபாரமான வேகத்தில் வளரத் தொடங்கியது. எதிர்பார்த்தபடி பொருளாதாரமும் தொழில் துறையும் வளர்ந்தும் வந்தது. அந்த அபாரமான வளர்ச்சி காரணமாக பல இந்திய நிறுவனங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்களது தொழிலை விரிவுபடுத்தப் பல்வேறு சவாலான முயற்சிகளை மேற்கொண்டன. அந்தக் காலகட்டத்தில் பல இந்தியத் தொழில் நிறுவனங்கள் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களை வாங்க அதிக ஈடுபாடும் முனைப்பையும் காட்டின.

டாடா குழுமமும் இதற்கு விதிவிலக்கல்ல. சரியாக 2000-மாவது ஆண்டில் டாடா குழுமத்திலுள்ள டாடா டீ நிறுவனம், இங்கிலாந்து நாட்டின் டெட்லீ என்ற டீ தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கி சரித்திரம் படைத்தது. ஒரு இந்திய நிறுவனம் பெரும் தொகை கொடுத்து ஒரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்தை முழுவதுமாக வாங்குவது அதுவே முதல் முறை.  டாடா டீயின் இந்்த தைரியமான முயற்சியினால் டாடா குழுமம் முதல் முறையாக பெரிய அளவில் வெளிநாட்டில் கால்பதிக்கவும் அதுவும் இங்கிலாந்தில் கால்பதிக்க முதல்படியாக அது அமைந்தது.

அதற்குப்பிறகு பல இந்திய நிறுவனங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பல வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிவந்த வேளையில், டாடா குழுமத்தின் டாடா டீ வெற்றிக்குப் பிறகு, டாடா ஸ்டீல் 2007-ல் இங்கிலாந்திலுள்ள கோரஸ் என்ற மிகப் பெரிய எஃகு நிறுவனத்தை வாங்க முற்பட்டது. கடும் போட்டிக்கிடையே 53,000 கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமாக தந்து அந்த நிறுவனத்தை முழுவது மாக வாங்கி மற்றுமொரு சாதனை படைத்தது.

ஏன் வாங்கியது?

இவ்வளவு விலை கொடுத்து டாடா குழுமம் ஏன் கோரஸ் நிறுவனத்தை வாங்கியது?

2000-களில் இந்தியப் பொருளாதாரம் எப்படி அபாரமாக வளர்ந்து வந்ததோ, அதைக் காட்டிலும் அபாரமாக சீனப் பொருளாதாரமும் மிக வேகமாக வளர்ந்து வந்தது. சீனாவின் அந்த அபார வளர்ச்சி காரணமாக உலகில் பொருட்களின் தேவை (commodities) அளவுக்கதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக, சீனாவின் அதிவேக பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சியால் பொருட்களின் தேவை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக உலகத்தில் பொருட்களின் விலை, அதிலும் குறிப்பாக, தொழில் துறை உலோகங்களின் விலை குறுகிய காலத்திலேயே பன்மடங்காக உயர்ந்தது. எஃகின் விலை எல்லாவற்றையும்விட கூடுதலாக இருந்துவந்தது.

இரும்பு விலை உயர இன்னொரு முக்கிய காரணம், சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் 2008-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி காரணமாக சீனாவில் பல உட்கட்டமைப்பு வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் பெரிய அளவில் நடைபெற்றது.

உலகப் பொருளாதார வளர்ச்சி, அதிலும் குறிப்பாக சீனாவின் அதிவேக பொருளா தார வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் எஃகின் தேவை பன்மடங்காக உயரும்; அதன் விலையும் பன்மடங்காக உயரும் என்ற அடிப்படையிலேயே டாடா ஸ்டீல் நிறுவனம் கோரஸ் நிறுவனத்தை அதிகமான பிரீமியத் தொகை கொடுத்து வாங்கியது. மேலும், அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவின் பொருளாதாரம் நல்ல ஒரு வளர்ச்சிப் பாதையில் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்