ஷேர்லக்: உஷார்... மூன்று நாட்கள் மட்டுமே சந்தை!

‘வெயிலின் தாக்கம் சென்னையில் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால், பகல் நேரத்தில் வெளியே வருவதை இனி குறைத்துக் கொள்ளப் போகிறேன்!’ என்று நமக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார் ஷேர்லக்.

அவர் இப்படி சொன்னால் என்ன அர்த்தம் தெரியுமா? வெயில் காலம் முடிகிற வரை இனி மாலை 7 மணிக்குப் பிறகுதான் நம்மைப் பார்க்க வருவார் என்று அர்த்தம். அதனால் என்ன, இரவு 7 மணிக்கு தாராளமாக வாருங்கள் என்று அவருக்கு பதில் அனுப்பிவிட்டு, அவரது வருகைக்காகக் காத்திருந்தோம்.

‘‘சந்தை இனி எப்படி இருக்கும் என்கிற கவலையில்தான் எல்லோரும் இருக்கிறார்கள். நிதி ஆண்டு முடிவு, வட்டி விகிதம் குறைப்பு ஆகிய காரணங்களை சொல்லி சந்தையை நன்கு உயர்த்திவிட்டார்கள். இனி சந்தை மேலே செல்வதற்கு முக்கியமான காரணங்கள் வேண்டும்.  ஆனால், இப்போதைய நிலையில் அப்படிப்பட்ட காரணங்கள் எதுவும் கண்ணில் படுகிற மாதிரி தெரியவில்லை. கடந்த வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று ஆர்பிஐ வட்டி குறைத்த அன்று எஃப்ஐஐ-கள் கொஞ்சம் பணத்தை இறக்கினார்கள். ஆர்பிஐ அறிவிப்பினால் சொல்லிக் கொள்கிற எஃபெக்ட் எதுவும் இல்லை என்றவுடன், அவர்களும் விற்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், நம்மூர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களோ பங்குகளை ஓரளவுக்கு விற்றுக் காசாக்கி கையில் வைத்துக்கொள்வதில் குறியாக இருந்தார்கள். இந்த இரண்டு ஜாம்பவான்களும் போட்டி போட்டு விற்றால் சந்தை எப்படி மேலே செல்லும்?

கூடிய விரைவில் மார்ச்சுடன் முடிந்த நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கிறது. இந்த முடிவுகள் அபாரமாக இருக்கும்பட்சத்தில், சந்தை பெரிதாக உயரவில்லை என்றாலும் பெரிய இறக்கத்தை சந்திக்காமல் இருக்கும். எனவே, காலாண்டு முடிவுகள் குறித்த செய்திகளை கண்கொத்திப் பாம்பாக கவனிப்பது டிரேடர்களுக்கு மட்டுமல்லாது, நடுத்தர காலத்தில் முதலீடு செய்ய நினைக்கிற முதலீட்டாளர்களுக்கும் அவசியம். தவிர, சர்வதேச அளவில் ஏதாவது பாதகமான செய்தி வந்தாலும் கரடிகள் பேயாட்டம் போடுவதற்கும் வாய்ப்புள்ளது.

மேலும், வருகிற வாரத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் அம்பேத்கார் பிறந்த தினம், ராம நவமியால் சந்தைக்கு விடுமுறை. எனவே, சந்தை இப்படியும் அப்படியுமாகத்தான் இருக்கும். கையில் பணம் வைத்திருப்பவர்கள் இப்போதிருந்து நல்ல பங்குகளை கவனமாக ஃபாலோ செய்வது நல்லது. நல்ல விலை இறக்கம் வந்தபிறகு அந்தப் பங்குகளை தாராளமாக வாங்கிப் போடலாம்’’ என்றவருக்கு சில்லென்று நன்னாரி சர்பத் கொடுத்தோம். ‘‘ஓ, நாட்டுச் சரக்கா, நல்லா இருக்குமே!’’ என்றபடி ரசித்துக் குடித்தார்.
‘‘ஏர்டெல் நிறுவனம் மேலும் ஸ்பெக்ட்ரங்களை வாங்கி இருக்கிறதே!’’ என்று கேட்டோம்.

‘‘பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரங்களை கையகப் படுத்திக் கொள்வதை பற்றி பங்குச் சந்தைகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறது. அதில் பார்தி ஏர்டெல் மற்றும் அதன் துணை நிறுவனமான பார்தி ஹெக்ஸாகாம் ஆகிய இரண்டு நிறுவனங்கள், ஏர்செல் லிமிடெட், மற்றும் அதன் துணை நிறுவனங்களான டிஷ்நெட் வயர்லெஸ், ஏர்செல் செல்லூலர் ஆகிய நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி, எட்டு வட்டங்களில் 20 மெகாஹெட்ஸ் 2300 பாண்ட் 4ஜி அலை வரிசைகளை ஏர்செல் நிறுவனங்களிடமிருந்து கையகப்படுத்த இருக்கிறது. இதற்காக 3500 கோடி ரூபாயை செலவு செய்ய இருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

ஏர்டெல் நிறுவனம் கையகப்படுத்தும் வட்டங்களில் தமிழ்நாடு (சென்னை உட்பட), பீகார், ஜம்மூ காஷ்மீர், மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஆந்திரப்பிரதேசம், ஒடிஸா மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் போன்ற வட்டங்கள் அடக்கம். இந்த வட்டங்களில் 20 செப்டம்பர் 2030 வரை ஸ்பெக்ட்ரத்தை ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் கடந்த மாதம்தான் வீடியோகான் நிறுவனத்தின் முழு ஸ்பெக்ட்ரத்தையும் ரூ.4,428 கோடி தந்து  வாங்கியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்