பருவ மழை எழுப்பும் கேள்விகள்!

ஹலோ வாசகர்களே..!

ந்த ஆண்டில் நம் நாட்டில் பெய்யப் போகும் பருவ மழையானது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகவே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உற்சாகத்தில் துள்ளிக் குதித்திருக்கிறார். இந்த கணிப்பு நிஜமானால், நம் ஜி.டி.பி. 7.5 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயரும் என்று சொல்லி இருக்கிறார்.
மழை செய்தியானது நமக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றாலும் பல கேள்விகளும் எழத்தான் செய்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டிருப்பது ஒரு கணிப்பு மட்டுமே. இந்த கணிப்பு அப்படியே நடந்துவிடும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஒருவேளை இந்த கணிப்பு நிஜமாகாமல் போகும்பட்சத்தில் பொருளாதாரம் தங்கு தடை இல்லாமல் முன்னேற மத்திய அரசாங்கம் என்ன திட்டம் வைத்திருக்கிறது?

இப்போது வந்திருக்கும் கணிப்பு நிஜமாகி, நல்ல பருவ மழை பெய்தாலும் அதனால் இந்தியாவின் எல்லா பகுதிகளும் பயன் அடையுமா என்றால், இல்லை. காரணம், பரந்த நிலப்பரப்பு கொண்ட நம் நாட்டில் மழை அளவு என்பது எல்லா பகுதி களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு பகுதியில் பெரிய மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும், இன்னொரு பகுதியில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலையை எப்போதும் பார்க்க முடியும். எனவே, பெய்யும் மழை நீரை எல்லோரும் பயன்படுத்த மத்திய,  மாநில அரசாங்கங்கள் என்ன செய்யப் போகின்றன?

நல்ல மழை பெய்தாலும் அதனை முறையாக தேக்கி வைத்து, அனைத்து மக்களும் சரியாகப் பயன்படுத்தும்  அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நம் நாட்டில் முழுமையாக இல்லை. சென்னையில் கடந்த டிசம்பரில் 100 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்து, வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. ஆனால், நான்கு மாதங்கள் கழித்து இப்போது குடிநீருக்காக நாம் திண்டாடுகிறோம். அவ்வளவு பெரிய மழை பெய்தும் அதை பயன்படுத்திக் கொள்ளாத நாம், இனி பெய்யும் மழையை எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

மேலும், விவசாயத் துறையை மத்திய அரசாங்கம் இரண்டாம்பட்சமாக நடத்துகிறது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைக்கு தரப்படும் மரியாதை விவசாயத்துக்கு தருவதில்லை  என்பதினால்தான், நமது ஜி.டி.பி.யில் விவசாயத்தின் பங்கு 1.1 சதவிகிதமாக இருக்கிறது. நம் ஜி.டி.பி.யில் விவசாயத்தின் பங்கு சரிபாதியாக இருந்தால் மட்டுமே நமது பொருளாதாரம் தடை இல்லாமல் முன்னேறும். இதற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

ஆக மொத்தத்தில், கடந்த காலங்களில் பெரு மழை பெய்தபோதெல்லாம் அதைக் கடலில் கலக்கவிட்டு வீணடித்ததுபோல, இந்த ஆண்டும் செய்யாமல் இருப்பதற்கான செயல்திட்டங்களைத் தீட்டாமல், மழையை நினைத்து வெறும் மகிழ்ச்சி எதிர்பார்ப்பில் கும்மாளம் போடுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை!       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்