டிரேடர்களே உஷார் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.ஹெட்ஜிங் விளையாட்டு!

“ஹலோ ஏபிசி கமாடிட்டியா... நான் சிவபிரகாசம் பேசறேன். கிளையன்ட் கோட் S007. எனக்கு கோல்டு மினி 2 லாட் வாங்கணும்.”

“ஆகஸ்ட் கான்ட்ராக்ட்  இப்ப விலை ரூ.31,800, வாங்கலாமா?”

“ஓகே.”

“வாங்கியாச்சி சார். நாளைக்கு கான்ட்ராக்ட் நோட்டை செக் பண்ணிக்குங்க.”

சிவபிரகாசத்துக்கு வயது 27. ஒரு பிபிஓ கம்பெனியில் நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர். அதே கம்பெனியில வேலை பார்க்கும் தினேஷ் என்பவர்தான், சிவபிரகாசத்துக்கு கமாடிட்டி டிரேடிங்கை அறிமுகப் படுத்தினார். முதலில் தயங்கித் தயங்கி வியாபாரத்தை ஆரம்பித்தார். மேலும், வாங்கி விற்கும் முறையான – லாங் என்கிற முறையையே முதலில் பின்பற்றினார். 

நேரம் கிடைக்கும்போதெல் லாம், ஒரு லாட் வாங்குவார், விற்பார்.  சில சமயம் கொஞ்சம் லாபம், சில சமயம் கொஞ்சம் நஷ்டம் என்று போய்க்கொண்டு இருந்தது.

பொதுவாக, 50 பாயின்ட் முதல் 100 வரை லாபம் வந்தால் எடுப்பார். அதேபோல், 50 பாயின்ட் முதல் 100 வரை நஷ்டம் வந்தாலும் வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வருவார்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் சிவபிரகாசம் தற்போது கோல்டு ஆகஸ்ட் கான்ட்ராக்ட்டில் 2 மினி லாட்டை ரூ.31,800-க்கு வாங்கி இருக்கிறார். விலை நன்கு ஏறும் என்பது அவர் கணிப்பு.

அவ்வப்போது விலை நகர்வை கவனித்து வந்தார். கோல்டு 10 – 20 புள்ளிகள் ஏறுவதும், இறங்குவது மாக இருந்தது. அந்த நேரம் பார்த்து, சிவபிரகாசத்தின் டீம் லீடர், அவருக்கு ஒரு முக்கியமான வேலை தந்துவிட்டார்.  வேலைப் பளுவில், சிவபிரகாசம் கோல்டு விலையைப் பார்க்க முடியவில்லை. வேலை முடிய இரண்டு மணி நேரம் ஆயிற்று. வேலையை முடித்துவிட்டு, விலையைப் பார்த்தார்.

சிவபிரகாசத்திற்கு ஒரே ஷாக்.  கோல்டு விலை ரூ.31,400 என்று சரிந்திருந்தது. சிவபிரகாசத்துக்குத்  தலை சுற்றியது. ஒரு லாட்டுக்கு ரூ.4,000 நஷ்டம்.  இரண்டு லாட்டுக்கு ரூ.8,000 நஷ்டத்தில் உள்ளது. என்ன செய்வதென்று  தெரியவில்லை. கொஞ்சம் நேரம் தலையைப் பிடித்துக் கொண்டு  அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

ஒரு மாதம் வேலை செய்தால், அவருக்கு வரும் சம்பளமே ரூ.15,000-தான். ஆனால், இப்போது இரண்டு மணி நேரத்தில் சம்பள பணத்தில் பாதி அவுட். 

அவர் மனம் வேலையில் ஈடுபட மறுத்தது. அப்போதுதான் அவருக்கு, தினேஷ் ஞாபகம் வந்தது. கமாடிட்டி டிரேடிங்கை கற்றுத் தந்த குரு அல்லவா? அவரிடம் கேட்டால் ஏதாவது ஐடியா தருவார் என்று நினைத்து,  அவரது ஆபிஸிலேயே, வேறு ஒரு தளத்தில் வேலை செய்யும்  தினேஷுக்குப்  போனை போட்டார் சிவபிரகாசம்.

“கோல்டு பொசிஷன் எடுத்தேன். நல்லா இறங்கிடுச்சி. அதான் என்ன பண்றதுனே தெரியல. மினி வாங்கினேன் ரூ.31,800-க்கு. திடீரென்று ரூ.31,400-க்கு இறங்கிடுச்சி.” “அச்சச்சோ... கோல்டு சாதாரணமா இப்படி ஒரே நாள்ல 400 பாயின்ட் இறங்காதே. அப்படின்னா, இன்னும் நல்லா இறங்க வாய்ப்பு இருக்கு.”

“ஐயோ... என்ன தினேஷ் சொல்றீங்க. இப்பவே நான் இரண்டு லாட் எடுத்து ரூ.8,000 நஷ்டத்தில் இருக்கிறேன். இதுல இருந்து வெளியே வர ஒரு வழி சொல்லுங்க.”

“அப்படியா... எனக்கு தெரிந்து,  இன்னும் இறங்க வாய்ப்பிருக்கு. நீங்களும் விற்கத் தயாராக இல்ல. அதனால ஹெட்ஜ் பண்ணிடுங்க.”

“ஹெட்ஜ்ஜா... அப்படின்னா?”

“இப்ப நீங்க கோல்டு ஆகஸ்ட் கான்ட்ராக்ட் வாங்கி வைச்சிருக்கீங்க இல்லயா... அடுத்து செப்டம்பர் மாச கான்ட்ராக்ட்ல போய் வித்து வெச்சிடுங்க.”

“நான் ஏற்கெனவே செப்டம்பர் மாச கான்ட்ராக்ட்ல எதுவுமே வாங்கவே இல்லையே தினேஷ்?”

“ஆமாங்க... வாங்கலதான். நீங்க செப்டம்பர் மாச கான்ட் ராக்ட்ல போய் வித்துடுங்க. இதுக்குப் பேருதான் ஷாட் போறதுன்னு சொல்றாங்க.’’

“சரி, அப்படி ஷாட் போனா..?’’

“இனி கோல்டு இறங்கி ஆகஸ்ட் மாசத்தில நஷ்டம் வந்தா, செப்டம்பர் மாசம் அடிச்ச ஷாட்ல வர்ற லாபம் அதை ஈடுகட்டும். அதாவது, இப்ப ஹெட்ஜ் பண்ணா இனிமே நஷ்டம் வராது?”

“அப்படியா! உடனே ஹெட்ஜ் பண்றேன்...’’

சிவபிரகாசம், உடனே கம்ப்யூட்டரில், செப்டம்பர் கான்ட்ராக்டின் விலையைப் பார்த்தார். கோல்டு விலை  ரூ.31,600 என்று காட்டியது. அதில் இரண்டு மினி லாட்டை விற்றார். அப்பாடா... இனிமே நமக்கு நஷ்டம் கூடாது. நைட் ஷிப்ட் முடிந்து காலையில் வீட்டுக்கு வந்து படுத்துவிட்டார்.
சிவபிரகாசம் நிம்மதியாகத் தூங்கினார். வழக்கம்போல மதியம் இரண்டு மணிக்கு எழுந்தார். மனசு பரபரத்தது. கோல்டு விலை இப்ப என்னவாக இருக்கும் என்று டிவியைப் போட்டுப் பார்த்தார். கோல்டு ஆகஸ்ட் மாத விலை ரூ.31,200 என்று காட்டியது.

அப்படின்னா ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட்ல,  ஒரு லாட்டுக்கு ரூ.2,000 நஷ்டம் கூடி இருக்கும். இரண்டு லாட்டுக்கு ரூ.4,000 கூடியிருக்குமே! மனது  வலித்தது. அதே மனது அப்புறம் சொன்னது,  ஏன் கவலைப்படறே, அதே ரூ.4,000 செப்டம்பர் மாத கான்ட்ராக்ட்ல லாபமா இருக்கும். அப்புறம் எதற்கு  கவலை?

மாலையில் ஜம்முன்னு ரெடியாகி நைட் ஷிப்ட் வேலைக்கு புறப்பட்டார். சிவப்பிரகாசம் வேலை செய்து கொண்டு இருக்கும்போதே, மனதில் கோல்டு விலை ஓடிக் கொண்டு இருந்தது. ஆகஸ்ட் மாசத்தில் வாங்கி வைத்திருக் கிறோம்.  செப்டம்பரில் வித்திருக் கிறோம். ஆகஸ்ட் மாத நஷ்டத்தை விட, செப்டம்பர் மாத லாபம் இனித்தது.

தினேஷுக்கு ஒரு போனை போட்டார். “சொல்லுங்க சிவபிரகாசம், நா இப்ப கொஞ்சம் பிசியாக இருக்கிறேன்.”

“இல்ல... இப்ப செப்டம்பர் மாச கான்ட்ராக்ட்ல ரூ.4,000 லாபம். ஆகஸ்ட்ல...”

“ஏங்க இப்படி இழுக்கிறீங்க. லாபம் இருந்தா, அதை எடுங்க முதல்ல.”

சிவபிரகாசம் மடமடவென்று கம்ப்யூட்டரை ஆன் பண்ணி,  செப்டம்பர் மாத கான்ட்ராக்டை விற்றார். அதில் ரூ.4000 லாபத்தை காட்டியது. பின்பு வேலையில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். வழக்கம்போல வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கினார்.  அன்று மதியம் எழுந்து, கோல்டு என்ன விலை என்று பார்த்தார். ஆகஸ்ட் கோல்டு மினி ரூ.30,800 என்று காட்டியது. சிவபிரகாசத்துக்கு  பகீரென்று இருந்தது.

ஆகஸ்ட் மாத கான்ட்ராக்ட் வாங்கிய விலை ரூ.31,800, இப்ப ரூ.30,800. ஒரு லாட்டுக்கு ரூ.10,000 நஷ்டம். இரண்டு லாட்டுக்கு ரூ.20,000 நஷ்டம். புரோக்கர் ஆபிசல இருந்து போன். “சார், நான் டீலர் ரமேஷ் பேசறேன். உங்க கோல்டு மினி பொசிஷன்ல மார்ஜின் ஷாட், விக்கிறீங்களா அல்லது மார்ஜின் பணம் கட்றீங்களா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்