சென்ட்ரல் கேஒய்சி விதிகளில் மாற்றம் அவசியமா?

ந.ஆசிபா பாத்திமா பாவா

மியூச்சுவல் ஃப்ண்ட் அல்லது பங்குச் சந்தையில் இனி நாம் முதலீடு செய்ய விரும்பினால், நிரந்தர கணக்கு எண் (PAN) அல்லது ஆதார் அட்டை அடிப்படையிலான கேஒய்சி (Know Your Customer) போதுமானதாக இருக்காது.

செபி புதிதாக கொண்டு வந்திருக்கும் சென்ட்ரல் கேஒய்சி விதிமுறைகளின்படி, (central KYC norms), மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கமாடிட்டி  முதலீட்டாளர்கள் மற்றும் டிரேடர்கள் இனி தங்கள் ‘தாயின் பெயர்’ மற்றும் நிரந்தர முகவரிக்கான சான்றுகளை வழங்க வேண்டும். மேலும், முதலீட்டாளர் பெண்ணாக இருக்கும்பட்சத்தில் புதிய விதிமுறையின் கீழ்  திருமணத்துக்குமுன்  அவரது பெயர் என்னவாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். இதனை ஆங்கிலத்தில் ‘மெய்டன் நேம்’ (maiden name) என்பார்கள். 2016 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் புதிய முதலீட்டாளர்கள் மேற்கூறிய விவரங்களை அளிப்பது அவசியமாகும் என்று செபி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த ஆவணங்களை வழங்க வேண்டிய தேதி குறித்து எந்தத்  தகவலும் சொல்லப்படவில்லை.
குழப்பமான செயல்!

சென்ட்ரல் கேஒய்சி தகவல்கள் குறித்து சென்னையை சேர்ந்த டைமென்ஷனல் செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிட் இயக்குநர் ஷங்கர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம்.

“தற்போது கேஒய்சி-ல் அம்மாவின் பெயர் மற்றும் ‘மெய்டன்’ பெயரை சேர்க்க வேண்டும்; ஆதார் அட்டை மற்றும் பான் எண் மட்டும் ஒரு நபருக்கு அடையாளமாகப் பிறப்பிக்கப்பட போதுமானதாக இருக்காது எனக் கூறுகிறார்கள். தவிர, நம் தகவல் தொடர்புக்கான முகவரி, நிரந்தர முகவரி வெவ்வேறாக இருப்பின், இரண்டுக்கும்  தனித் தனியாக ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
 
இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம். எளிய  முறையில் முதலிடுவது மற்றும் தொழில் செய்வதை நோக்கி இந்தியா விரைந்து செல்லும் நிலையில் இது மிகவும் குழப்பமான ஒரு செயலாக உள்ளது.

சென்ட்ரல் கேஒய்சி!

தற்போதுள்ள நிலையில் முதலீட்டாளர்கள்,  பங்குத் தரகர் அலுவலகத்துக்குச் சென்று கேஒய்சி படிவத்தை நிரப்ப மிகவும் சிரமப்படுகிறார்கள். பிறகு, அதே நபர்  மியூச்சுவல் ஃபண்ட்-ல் முதலீடு செய்ய போகும்போது, அங்கு மீண்டும் கேஒய்சி படிவம் நிரப்ப வேண்டும்; வேறு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் என்றால், அதற்கு மீண்டும் ஒரு கேஒய்சி என இப்படி பல  கேஒய்சி படிவம் நிரப்பியே சோர்ந்து போகின்றனர் முதலீட்டாளர்கள்.

இதற்குப் பதிலாக, சென்ட்ரல் கேஒய்சி-ன் குறிப்பை (reference) அனைத்து இடங்களிலும் தந்தால் போதும்; அந்த கேஒய்சி-யைப்  பெற ஒருமுறை ஆதார் அட்டை மற்றும் பான் எண் ஆகிய ஆவணங்களை வழங்கினால் போதும் என்ற முறையைக் கொண்டு வந்தால் மட்டுமே முதலீட்டாளர்களுக்கு நல்லது. இந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்திவிட்டால், மற்ற எல்லா குழப்பங்களும், பிரச்னைகளும் தீர்ந்து போகும். அதை விடுத்து, தற்போதைய அறிவிப்பின்படி கேஒய்சி விதிகளில் மாற்றம் செய்வது  தேவை யற்றது; இதனால் குழப்பமே ஏற்படும்” என்றார்.

இதுநாள் வரை இ-கேஒய்சி சார்ந்த திட்டம், தனி நபர் முதலீட்டாளர்களை அங்கீகரிக்க ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு  அனுப்பப்படும் ஒருமுறை கடவுச் சொல்லை (OTP) உபயோகித்து வந்தன. ஆனால், புதிய செபி விதிகளால் இ-கேஒய்சியிலும் மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இ-காமர்ஸ் இணைய தளங்கள் மூலம் மியூச்சுவல் ஃப்ண்ட் விற்பனை செய்யும் திட்டங்களும் பல மாத காலம் தாமதமாகலாம்.

தற்போது பான் எண் ஒரு முதலீட்டாளரின் தனிப்பட்ட அடையாள ஆவணமாக உள்ளது. ஆனால் புதிய விதிமுறைகள்படி, பான் எண் அங்கீகரிக்கப்படாது என சொல்லப்பட்டு இருப்பது பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். 

இந்தியா அனைத்துத் துறைகளிலும் மிக வேகமாக முன்னேறிவரும் இந்த சூழ்நிலையில் இதுபோன்ற குழப்பங்கள் தேவையா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்