ஷேர்லக்: ஜிஎஸ்டி வந்தால் நிஃப்டி 9000 புள்ளிகள்!

வெள்ளிக்கிழமை மாலை ஷேர்லக் நம் கேபினுக்குள் நுழைந்ததுமே, ‘‘வரும், வராது என எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்த ஜி.எஸ்.டி. அடுத்த வாரத்தில் வந்துவிடும் போலிருக்கிறதே!’’ என்றபடி வரவேற்றோம்.

‘‘ஆமாம், வருகிற வாரத்தில் ராஜ்ய சபையில் ஜி.எஸ்.டி. மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள பட்டியல் இடப்பட்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி. குறித்து மாநிலங்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாகவே முடிந்திருக்கிறது. காங்கிரஸும் சில மாநிலங்களும் முன் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு, மசோதாவில் மாற்றம் செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி மாநிலங்களுக்கிடையிலான ஒரு சதவிகித வரி விலக்கப்பட உள்ளது. இது காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி என அந்தக் கட்சி சொன்னதன் மூலம் ஜி.எஸ்.டி.

மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ்  தயாராகிவிட்டது என்றே தெரிகிறது. ஆனாலும் கடைசி கட்டத்தில் காங்கிரஸ்  ஏதாவது ஒரு குளறுபடி செய்து, இந்த மசோதாவை நிறைவேற்றாமல் செய்து விடலாம் என ஆளுங்கட்சியினர் சந்தேகப்படுகின்றனர். அப்படி எதுவும் நடக்காமல் நல்லபடியாக ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறினால்,   பங்குச் சந்தை உயரும். நிஃப்டி குறுகிய காலத்திலேயே 9000 புள்ளிகளுக்குப் பக்கத்தில் சென்றுவிட வாய்ப்புண்டு’’  என்று உற்சாகமாகப் பேசிய வருக்கு இஞ்ஜி டீ கொடுத்தோம்.

‘‘ஆனால், சந்தை எப்போது வேண்டுமானாலும் இறங்கலாம் என்றும் சிலர் பயமுறுத்து கிறார்களே!’’ என்று கொஞ்சம் பயந்தபடி கேட்டோம்.

‘‘உண்மைதான். கடந்த வாரத்தில் நிஃப்டி 15 மாத உச்சத்தை எட்டியது. நிஃப்டி 8600 புள்ளிகளையும் சென்செக்ஸ் 28 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டியது. ஜிஎஸ்டி நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பாசிட்டிவான சென்டிமென்டை உருவாக்கியுள்ளது. கடந்த திங்களன்று மட்டும் எஃப்.ஐ.ஐ.கள் பங்குச் சந்தையில் ரூ.8,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

ஆனால், இந்தியப் பங்குச் சந்தையில் மதிப்பீடுகள் அதிகமாக உள்ளது.  நிஃப்டி பீஇ மிக அதிகமாக இருப்பதால் கரெக்‌ஷன் ஏற்பட வாய்ப்புள்ளது. சந்தை ஏற்றத்தில் இருப்பதால், ஃபண்டமென்டல் எதையும் பார்க்காமல் பலரும் முதலீடு செய்துவிட அதிக வாய்ப்புள்ளது. சந்தை சரியத் தொடங்கும் பட்சத்தில்,  அதிக அளவில் முதலீடுகள் வெளியேறலாம்.  சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சரிவு எப்போது வரும் என்று சரியாக சொல்ல முடியாது. சந்தை சரியும்பட்சத்தில் சுமார் 12-15 சதவிகித கரெக்‌ஷன் வரலாம். எதற்கும்  முதலீட் டாளர்கள் உஷாராக இருப்பது நல்லது” என்றார்.

‘‘வாராக் கடன்கள்  பிரச்னை உச்சத்தில் இருக்க, வங்கிப் பங்குகள் தொடர்ந்து விலை உயர்கிறதே!’’ என்று ஆச்சரியப் பட்டோம்.

‘‘வாராக் கடனை சமாளிக்க பல வங்கிகள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு திரும்ப வராத கடன்களை ‘ரைட் ஆஃப்’ செய்திருக்கிறது.  2015 - 16-ல் மட்டும் கிட்டத்தட்ட 59,547 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் வாராக் கடன்களை ‘ரைட் ஆஃப்’ செய்திருக்கின்றன. என்றாலும், முதலீட்டாளர்கள் வங்கிப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிஎஸ்இ பேங்க் இண்டெக்ஸ் திங்களன்று 1.65% உயர்ந்திருக்கிறது. காரணம்  அரசின் மீது உள்ள நம்பிக்கை. இந்த நிதி ஆண்டில் ரூ.70 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால் இது போதாது என்கின்றன வங்கிகள்’’ என்று உதட்டைப் பிதுக்கினார் ஷேர்லக்.

‘‘காலாண்டு முடிவுகள் தினமும் வந்துகொண்டு இருக்கிறதே,...” என்று இழுத்தோம். 

‘‘ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் கடந்த வருடம் ஜூன் காலாண்டைக் காட்டிலும் 37.4% அதிகரித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் கடன் வாங்குவோ ரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதே காரணம். இதன் வட்டி வருவாயும் 7.5% உயர்ந்துள்ளது.
ஏர்டெல் நிகர லாபம் கடந்த வருட ஜூன் மாத காலாண்டைக் காட்டிலும் 31% குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அதிக பட்ச வட்டி விகிதமும், அந்நிய செலாவணி இழப்பும்தான்.

கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த வருட ஜூன் காலாண்டைவிட 23% கூடுதல் நிகர லாபத்தைப் பதிவு செய்து உள்ளது. நிகர விற்பனை 12.1%  அதிகரித்துள்ளது.

ஃபைனான்ஸ் நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் கடந்த வருட ஜூன் காலாண்டைக் காட்டிலும் 54% உயர்ந்து ரூ.424 கோடியாக உள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குப் பிரிப்பு மற்றும் போனஸ் தருவதற்கு அதன் இயக்குனர் குழு அனுமதி அளித்துள்ளது.

 ஐசிஐசிஐ வங்கியின் ஜூன் மாத காலாண்டில் நிகர லாபம் 25% கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. வாராக் கடன் அதிகரித்ததே முக்கிய காரணம். முந்தைய காலாண்டில் 5.82 சதவிகிதமாக இருந்த அதன் வாராக் கடன் ஜூன் காலாண்டில் 5.87 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இன்ஜீனியரிங் மற்றும் கட்டுமான துறையின் முன்னணி நிறுவனமான எல் அண்ட் டி ஜூன் காலாண்டில் 46 சதவிகித நிகர லாப வளர்ச்சியை கடந்த ஆண்டைக் காட்டிலும் பதிவு செய்துள்ளது. இந்தக் காலாண்டில் ரூ. 29702 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்கள் இந்த நிறுவனத்துக்கு கிடைத்ததே  காரணம்’’ என நீண்ட பட்டியலை வாசித்தவர், ‘‘வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. எனவே, நான் கிளம்புகிறேன்’’ என்றவர் ஒரு துண்டுச் சீட்டைத் தந்தார்.  அதில் இருந்த கவனிக்க வேண்டிய பங்குகள்:

‘‘ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் ஃபைனான்ஸ், வாப்கோ இந்தியா லிமிடெட் - இந்தப் பங்குகளை மூன்று முதல் ஆறு மாத கால அடிப்படையில் கவனிக்கலாம்”.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்