ஆதித்யா பிர்லா நுவோ - கிராசிம் இணைப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

மு.சா.கெளதமன்

டந்த வாரக் கடைசியில் சந்தையில் மிகப் பெரிதாக அலசி ஆராயப்பட்ட விஷயம் ஆதித்யா பிர்லா நுவோ - கிராசிம் இணைப்புதான். இந்த இணைப்பு பற்றி பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம். 

இணைப்பும், சேர்ப்பும்!

‘‘இரண்டு முக்கியமான விஷயங்கள் நடக்கப் போகின்றன. முதலில் ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கப் படும். ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கப் பட்டபின், ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடப் படும் (குறிப்பு: தற்போது ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் என்கிற நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளையும், ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் தான் வைத்திருக்கிறது.)

இப்படி முதலில் சேர்ப்பது, பிறகு பிரிப்பது (Merger and Demerger) போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் மிகவும் அபூர்வம். 

ஏன் இந்த இணைப்பு?


பல நிறுவனங்களாகப் பிரிந்து கிடக்கும் பிசினஸ்களை ஒன்று சேர்த்து இந்தியாவின் ஒரு நல்ல, வலுவான, அதிக வருவாயை ஈட்டக்கூடிய, பல துறைகளில் செயல்படக்கூடிய வணிக சாம்ராஜ்ஜியம் (Conglomerate) உருவாக்கவே இந்த இணைப்பு மற்றும் பிரிப்பு என்று ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் இந்த இணைப்பு மற்றும் பிரித்தல் தொடர்பாக மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

எப்போது நிறைவேறும்?

இந்த இணைப்பு 2016 - 17 நிதி ஆண்டின் இறுதிக்குள் நிறைவேறும் என்றும், ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பிரிப்பு 2017 - 18 நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்குள் முடியலாம் என்றும் பிர்லா நிறுவன அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். இந்த இணைப்பு மற்றும் பிரிப்பிற்கு  பங்குதாரர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநில உச்ச நீதிமன்றம், சிசிஐ என்று அழைக்கப்படும் காம்பெட்டீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா போன்ற அரசு அமைப்பு களிடம் அனுமதிகள் வாங்க வேண்டியிருக்கிறது.

பங்குதாரர்களுக்கு என்ன பிரச்னை?

1. ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனத்தை, கிராசிம் நிறுவனத் துடன் இணைப்பதால், கிராசிம் நிறுவனத்தின் இபிஎஸ் மதிப்பு (Standalone)248.41-ல் இருந்து  சுமாராக 7% வரை குறைய வாய்ப்புண்டு.

2. சம்பந்தமே இல்லாத டெலி கம்யூனிகேஷன், ஃபைனான்ஸ் போன்ற துறைகளை இன்னும் சம்பந்தம் இல்லாத சிமென்ட் மற்றும் கெமிக்கல்களைத் தயாரிக் கும் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கிறார்கள். இதனால் ஒரு நிலையில்லா தன்மையே பிர்லா சாம்ராஜ்ஜியத்தில் நிலவும்.
அதாவது, பிர்லா தயாரிக்கும் சிமென்ட் (அல்ட்ராடெக்) மற்றும் விஎஸ்எஃப் எனப்படும் விஸ்காஸ் ஸ்டேபிள் ஃபைபர் தொழில் களுக்கு பிரதிநிதிப் பங்காக கிராசிம் இருக்கிறது. ஆதித்யா பிர்லா நுவோ நிதிச் சேவைகளின் பிரதிநிதிப் பங்காக இருக்கிறது. தற்போது இந்த இரண்டையும் சேர்ப்பதால், இரண்டு பிரதிநிதிப் பங்குகளும், நிலையில்லா தன்மையில்தான் வர்த்தகமாகும்.

அதுமட்டுமின்றி கடந்த மூன்று மாதங்களில் நல்ல விலை ஏற்றம் கண்டுவந்த பங்குகள், தற்போது இந்த அறிவிப்புக்குப் பிறகு இறக்கத்தை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. மேலும்,  அதிக ஆர்.ஓ.இ இருக்கும் நிதிச் சேவைகள் துறையை கிராசிம் நிறுவனத்திலிருந்து பிரிப்பதால், கிராசிம் முதலீட்டாளர்களுக்கு பலத்த நஷ்டமே.

3. பெரிய வணிக சாம்ராஜ்ஜியம் அமைக்க இந்த இணைப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். அதே அளவுக்கு கடனும் பெரிதாகவே இருக்கிறது. ஐடியா செல்லூ லருக்கு மட்டும் இருக்கும் கடன் 37,658 கோடி ரூபாய். ஆதித்யா பிர்லா நுவோவிடம் 23.2 சதவிகித ஐடியா செல்லூலர் நிறுவனப் பங்குகள் இருக்கிறது.

எனவே கணக்கிட்டு பார்த்தால், 8,736 கோடி ரூபாய் கிராசிம் நிறுவனத்துக்குக் கடனும் சேர்ந்து கிடைக்கும். கடந்த மார்ச் 2016 காலத்திலேயே கிராசிம் நிகர கடனாக 7,307 கோடி ரூபாய் இருக்கிறது. எனவே, கடன் பெரிதாக இருக்க இருக்க, நிறுவனத்தின் மதிப்பீடுகள் குறைந்த வண்ணமே இருக்கும்.

இந்த இணைப்பிற்குப் பின்னர் கிராசிம் நிறுவனத்தின் புரமோட்டர் ஷேர் ஹோல்டிங் 31 சதவிகிதத்தில் இருந்து 39 சதவிகிதமாக உயரும். எனவே, மொத்தக் கடனும் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

4. ஐடியா செல்லூலர் நிறுவனத்துக்குத் தேவையான பணத்தை, இந்த இணைப்பின் மூலம் பெறுவதாகவும் முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த பேச்சு இருக்கிறது. அதே போல், ஐடியா நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கலந்துகொள்வதற்கு தேவையான பணத்தைக்கூட இந்த இணைப்பின் மூலம் மற்ற நிறுவனங்களிலிருந்து பெறுவதற்காகத்தான் இப்போது இந்த நடவடிக்கை என்கிற பேச்சும் இருக்கிறது.

பங்குதாரர்களுக்கு..?

10 ஆதித்யா பிர்லா நுவோ பங்கை வைத்திருப்பவர்களுக்கு, இந்த இணைப்புக்குப் பிறகு 3 கிராசிம் பங்கு கிடைக்கும். அதன்பிறகு ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தை கிராசிம் நிறுவனத் திலிருந்து பிரிக்கும்போது 1 கிராசிம் பங்குக்கு 7 ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கு கிடைக்கும்.

இணைப்பிற்குப் பிறகு!

இந்த இணைப்பிற்குப் பிறகு பிர்லா குழுமத்துக்கு கிராசிம் நிறுவனத்தின் வருவாயில் 42 சதவிகிதத்தை சிமென்ட் துறையும், 17 சதவிகிதத்தை டெக்ஸ்டைல் துறையும், 16 சதவிகித வருமானம் டெலிகாம் துறையிலிருந்தும், நிதி சேவை மூலம் 15 சதவிகிதமும், கெமிக்கல் துறையில் இருந்து 9 சதவிகிதமும் கிடைக்கும். மீதமுள்ள 1 சதவிகிதம் சோலார் மற்றும் இன்சுலேட்டர் துறையிலிருந்து கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்