ஷேர்லக்: ரிஸ்க் எடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்!

‘‘சுதந்திர தினம் தொடங்கி புதிய வீட்டுக்கு குடிபெயர்கிறேன். எனவே, நான் உமது அலுவலகத்துக்கு வருவதற்குப் பதில் நீர் என் வீட்டுக்கு வந்தால் வசதியாக இருக்குமே!’’ என்று நம்மை அழைத்தார் ஷேர்லக். வெள்ளிக்கிழமை மாலை நேரம் நாம் அவர் வீட்டுக்குப் போனபோது பொருட்களை புதிய வீட்டுக்குக் கொண்டு செல்லும் வேலையை மும்முரமாக செய்துகொண்டிருந்தார். தூசி அதிகமில்லாத ஓர் அறையில் நம்மை உட்கார வைத்து பேசத் தொடங்கியவரிடம் நமது கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘சந்தை ஒரு நிலையில்லாமல் இருப்பதுபோல தெரிகிறதே!’’ என்றபடி ஆரம்பித்தோம்.

‘‘உண்மைதான். அடுத்து மேலே செல்வதா அல்லது கீழே போவதா என்கிற குழப்பத்தில் சந்தை இருப்பதாகவே படுகிறது. அடுத்தவரும் நாட்களில் பாசிட்டிவ் செய்தி வந்தால் சந்தை சிறிது உயரலாம். நெகட்டிவ் செய்தி வந்தால், கணிசமாக இறங்கலாம். இதில் இரண்டாவதாகச் சொன்ன விஷயத்துக்கே வாய்ப்புகள் அதிகம் என்று படுகிறது. அப்படி ஏதும் இறக்கம் வந்தால், கொஞ்சம் பொறுமையாக இருந்து, நம்பிக்கையோடு முதலீடு செய்யத் தொடங்கலாம். நிச்சயம் சந்தை உயரும். அப்போது லாபம் கிடைக்கும்’’ என்றவர், குடிக்க சில்லென்று தண்ணீர் தந்தார்.

‘‘நிஃப்டி நெக்ஸ்ட் 50 பட்டியலில் இருந்து வெளியேறிய, சேர்க்கப்பட்ட பங்குகள் பற்றி...?

‘‘நிஃப்டி நெக்ஸ்ட் 50 பட்டியல் பங்குகளின் மதிப்பு ஏற்றம் மற்றும் இறக்கம் அடைவதைப் பொறுத்து அவ்வபோது மாறுதலுக்கு உட்படுத்தப்படும். அதன்படி தற்போது இந்தப் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்இசி) வெளியேறுகிறது. இதற்குப் பதிலாக, இன்டர்குளோப் ஏவியேஷன், பிரமல் என்டர் பிரைசஸ் பங்குகள் சேர்க்கப் படுகின்றன. செப்டம்பர் 30 முதல் இது அமலுக்கு வருகிறது’’ என்றார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வங்கிப் பங்குகளில் முதலீடுகளை அதிகரிக்க என்ன காரணம்?’’ என்று கேட்டோம்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது போர்ட்ஃபோலியோவை சந்தைக்கு ஏற்றவாறு மாற்றுவது வழக்கம். அதன்படி மே மாதத்தைக் காட்டிலும், ஜூன் மாதத்தில் ஏறக்குறைய 4 ஆயிரம் கோடி கூடுதலாக வங்கிப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தற்போது நிர்வகிக்கும் ஈக்விட்டி மதிப்பில் 20.40% வங்கிப் பங்குகளாக உள்ளன. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் இதுதான் அதிகமாக உள்ளது.

வாராக் கடன் பிரச்னைகளால் ஏப்ரல் - மே மாதங்களில் வங்கிப் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டு வந்தன. ஆனால், வங்கித் துறையைச் சீரமைக்க அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வங்கித் துறை மீண்டும் எழுச்சியடைய வாய்ப்பிருப்பதாக ஃபண்ட் நிறுவனங்கள் நம்புகின்றன.

வங்கிப் பங்குகளில் அதிக முதலீட்டை வைத்திருப்பது தற்போதைய நிலையில் கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனால், இந்த ரிஸ்க்கை ஃபண்ட் நிறுவனங்கள் விரும்புவது ஏன் என்று தெரியவில்லை’’ என்றார்.

‘‘ஆனால், வங்கிகளின் காலாண்டு முடிவுகள் மகிழ்ச்சி அடையும் வகையில் இல்லையே?’’ என்றோம்.

‘‘ஆம், எஸ்பிஐ, ஐஓபி ஆகிய வங்கிகளின் நிகர லாபம் இந்த ஜூன் காலாண்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 31.7% குறைந்துள்ளது. இதன் வருவாயும், செயல்பாட்டு லாபமும் அதிகளவில் குறையாமல் இருந்ததே இந்த பங்கின் விலை உயரக் காரணம் என்கிறார்கள் அனலிஸ்ட்டுகள்.

ஆனால், ஐஓபி வங்கியின் நிலைமை மிகவும் கவலைக்கிடம். கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.15 கோடி நிகர லாபம் அடைந்த ஐஓபி, இந்த ஆண்டு ரூ. 1,450 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. ஆனால், இதன் செயல்பாட்டு லாபம் 24% உயர்ந்துள்ளது. செலவினங்களும் குறைக்கப்பட்டுள்ளது.

யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஜூன் காலாண்டு நிகர லாபமும் கடந்த ஆண்டை விட 27% குறைந்துள்ளது. யூகோ பேங்க் ரூ.440 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடாவின் நிகர லாபம் கடந்த ஆண்டு ஜூன் காலாண்டைவிட 8% குறைந்துள்ளது.

இவை அனைத்துக்கும் காரணம் இவற்றின் வாராக் கடன்கள் அதிகரித்துள்ளது தான். ஐஓபி, யூகோ பேங்க் ஆகியவற்றின் வாராக் கடன், கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது’’ என்று வங்கிப் பங்குகள் பற்றி பேசி முடித்தார்  ஷேர்லக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்