மார்க் சக்கர்பெர்க்... தனியொரு தலைவன்!

ச.ஸ்ரீராம்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர் களுக்கு இடையேயான தொடர்புக்கு ஏற்படுத்தப் பட்ட ஃபேஸ்புக், இன்று உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவரை தனது பயன்பாட்டாளர் ஆக்கியுள்ளது. மார்க் சக்கர்பெர்க் எனும் 33 வயது இளைஞனால் உலகில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்ற ஆளுமையோடு ஃபேஸ்புக்கைக் கட்டி ஆளும் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். ஒரு சிஇஓ-வாக வருமானத்தைப் பெருக்கும் முதலாளியாக மட்டும் இல்லாமல், ஒரு தலைவனாக எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தெரிந்துகொள்ள மார்க் மிகச் சரியான நபர்.

 தலைமைப் பண்பு!

ஒரு டெக் நிறுவனம் வருமானம் ஈட்டுவது மட்டும் வேலை என்று இருக்காமல், அலுவலகத்தை எப்படி கூலாக வைத்திருப்பது, உலகின் பிரச்னைகள் குறித்த விவாதம், சர்வதேசத் தலைவர் களுடனான விவாதம் என தன்னை அனைத்து விதங்களிலும் உலகத்தோடு தொடர்பில் வைத்திருப்பது, ஒரு இன்ஃப்ளுயென்ஸராக இருப்பது... இவையெல்லாம்தான் மார்க்கை ஒரு சிறந்த தலைவனாக அடையாளப்படுத்துகிறது. தவறுகளைச் செய்யாமல் இருப்பது மட்டும் தலைவனுக்கான தகுதி அல்ல; தவறுகளை ஏற்றுக் கொண்டு அதற்கான தீர்வுகளை வழங்குவதும்  ஒரு தலைவனுக்கு முக்கியம் என்பதற்கு மார்க் ஒரு சிறந்த உதாரணம்.

 பேச்சுத்திறன்!

விவாத மேடை, பேட்டி, ஃபேஸ்புக் லைவ் என எதில் பேசினாலும் ‘கனெக்ட்’ என்ற வார்த்தையின்றி, மார்க்கின் உரை இருக்காது. சில விஷயங்களைத் தொடர்ந்து பேசுவது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும். ஆனால், ஒரே விஷயத்தைத் தொடர்ந்து கேட்பவர்கள் சலிப்படையாத வண்ணம் பேசுவது ஒரு கலை. அதனை மார்க் சிறப்பாகவே செய்கிறார். மார்க்கின் உரைகளில் ஃபேஸ்புக் என்ற வார்த்தை மிகக் குறைவாக பயன்படுத்தப்படுவதும், அதேசமயம் ஃபேஸ்புக்கின் பணிகள் உலக மக்களை இணைப்பதற்காக என்ற நோக்கம் தெளிவாக வெளிப்படுத்தப்படுவதும்தான் மார்க்கை தனித்துவப்படுத்திக் காட்டுகிறது.

 தனி ஒருவன்!

ஒரு துறையில் அல்லது குறிப்பிட்ட வேலையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரது கனவு. ஆனால், மார்க் இவற்றில் இருந்து வேறுபட்டவர். தனது ஃபேஸ்புக் என்கிற ஒரு சமூக வலைதளத்தின் கீழ் அனைத்து வசதிகளையும் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தவர். வெறும் பொழுதுபோக்கு மற்றும் தகவல் பரிமாற்றக் களமாக ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக், இன்று வர்த்தகம் செய்யும், வேலை பார்க்கும், பொருட்களை வாங்கி விற்க உதவும் ஓர் இடம் என பன்முகங்களைக் கொண்ட தளமாகவும், உலகின் தவிர்க்க முடியாத சந்தையாக வும் மாறிவிட்டது. உலகின் எல்லாத் தேவை களுக்குமான ஒரே இணையதளம் என்பதை அடைவதே மார்க்கின் இலக்கு. ஒருவர் ஏதாவது ஒரு துறையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கும், தனக்குத் தெரிந்த துறைகள் எல்லாவற்றிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான் மார்க்.

நடை, உடை, பாவனை!

மார்க் சக்கர்பெர்க்... இந்தப் பெயரை கேட்டதும் அனைவரது மனதிலும் பழுப்பு நிற டி-ஷர்ட் வருவதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல, அவரது பேச்சு, உடல்மொழி அனைத்தும் ஒரு பர்ஃபெக்ட் டெக் தலைவரை கண்முன் நிறுத்துவ தாக அமையும். ஸ்டீவ் ஜாப்ஸை முன் மாதிரியாகக் கொண்டு செயல்படும் மார்க், அவரைப் போலவே மினிமலிச மேடைகளில் பேசுவது, ஒற்றை ஆளாக மேடையை ஆதிக்கம் செய்வது போன்றவற்றில் தேர்ந்தவர்.

ஒருவரின் ஒரே மாதிரியான நடை, உடை, பாவனை, அவர் மேற்கொண்ட கொள்கையில் உறுதியானவர் என்பதை உணர்த்தும்‌. தலைமைப் பதவியை எதிர்நோக்கி இருக்கும் ஒருவர் தனக்கான அடையாளங்களைத் தெளிவாகவும், அவர் பெயரைச் சொன்னதும் அவரது குணங்கள் நினைவுக்கு வரும்படியும் நடந்துகொள்வது அவசியம். இந்த விஷயத்தில் மார்க் படுகெட்டி.

மார்க்கின் தலைமை இன்னும் சிறக்கட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்