பிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்!

இராம சீனுவாசன் - பொருளாதார அளவியல் துறை, இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்

ணத்துக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு - ஒன்று, அது எந்த நாட்டைச் சேர்ந்தது; இரண்டு, அந்த நாட்டு அரசால் அல்லது மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டது என்பதாகும். ஆனால் எந்தவொரு நாட்டையும் சேராமல், எந்தவொரு நிறுவனத்தையும் சேராமல் கணினி மூலம் அடையாளம் தெரியாத சிலரால் உருவாக்கப்படும் பிட்காயின் என்கிற பணம்தான் இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப் படுகிறது.

நேரில் பார்க்க முடியாத இந்த பிட்காயின், கணினி மென்பொருளில் மறைந்து கொண்டிருக்கிறது.
 
பிட்காயின் சூத்ரதாரிகள்! 

மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல் இரு நபர்கள், தங்களிடையே பணப் பரிவர்த்தனை செய்வதையும்,  அந்தப் பரிவர்த்தனையை உறுதி செய்து, அதே நேரத்தில் இருவரின் அடையாளங்களைப் பாதுகாத்து வைக்கவும் ஒரு கணினி முறையை உருவாக்கியுள்ளதாக ‘Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System’ என்ற கட்டுரை மூலமாக சதோஷி நகமொடோ (Satoshi Nakamoto) என்பவர் 2008-ல் அறிவித்தார். இது ஒரு புனைப்பெயர் என்று அறியப்பட்ட பிறகு இதனை ஒருவர் அல்லது ஒரு சிலர் எழுதி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் ஆர்வலர்கள் இந்தக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு கணினி மென்பொருளை உருவாக்கி வெளியிட்டனர். பிட்காயினுக்கான இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

பிட்காயினை ‘மைனிங்’ மூலம் பெறலாம். மாறாக, இதற்காக உள்ள சந்தைகளில் எந்தவொரு நாட்டின் பணத்தையும் கொடுத்து பிட்காயினை பெறலாம். பிட்காயின் வாட்ச் (Bitcoin Watch) என்ற இணையதளத்தில், இந்த சந்தைகளில் நிலவும் மாற்று விகிதங்கள் தரப்பட்டிருக்கும். தற்போது 16 மில்லியன் பிட்காயின்கள் இருப்பதாகவும், அவற்றின் அமெரிக்க டாலர் மதிப்பு 11 பில்லியன் என்றும் இந்த இணையதளம் கூறுகிறது.

மைக்ரோசாஃப்ட், விக்கிபீடியா, டெஷ்லா (Tesla) போன்ற பல நிறுவனங்கள் பிட்காயினை பணமாக ஏற்றுக்கொண்டுள்ளன.  ஒவ்வொரு நாளும் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. அதேபோன்று பிட்காயினின் பயன்பாடு புதிதாக பல நாடுகளுக்கு விரிவடையலாம்.
 
ஸ்பெஷல் அம்சங்கள்!

கணினி பணத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இன்றும் கணினி முறையில்தான் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதிலும் அசல் பணம் கைமாறுவதில்லை. உதாரணமாக, ஒரு  டெபிட் கார்டை பயன்படுத்தி கடையில் பணம் செலுத்தினால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் கடைக்காரரின் வங்கி கணக்குக்கு செல்ல இடையில் ஒரு விசா, மாஸ்டர் கார்டு போன்ற ஒரு மூன்றாம் நிறுவனம் இருக்கிறது. இவ்வகையான எந்த ஒரு மூன்றாம் நிறுவனத்தின் துணை இல்லாமல், ஒரு நபர் நேரடியாக மற்றொரு நபருக்கு பணத்தை கணினி மூலம் அனுப்புவது பிட்காயினின் சிறப்பு (Peer to Peer transfer).

எங்கேயும் எப்போதும்!

இவ்வாறான பிட்காயின் பணப் பரிவர்த்தனைக்குக் கட்டணம் கிடையாது அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் (தற்போது உள்ள வங்கிக் கட்டணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைவிடக் குறைவு) பத்து நிமிடங்களில்  அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் பிட்காயின் மூலம் அனுப்பலாம்.

நாடுகளுக்கிடையே பிட்காயின் அடிப்படையில் வர்த்தகம் நடைபெறும் போது அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தைப் பற்றி கவலைப்படாமல் வியாபாரம் செய்ய முடியும். இது பன்னாட்டு வர்த்தகத்துக்கு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

உருவமில்லா பணம்!

கணினிப் பணம் என்பதால், பிட்காயினுக்கு உருவம் கிடையாது; ஆனால், எண்ணிக்கை உண்டு. ஒரு பிட்காயின் என்பதை  என்று குறிப்பிடலாம். ஒரு பிட்காயினின் ஆயிரத்தில் ஒரு பகுதியை ஒரு மில்லி பிட்காயின் (0.001) என்றும், பத்து லட்சத்தின் ஒரு பகுதியை மைக்ரோ பிட்காயின் (0.000001)  என்றும், பத்து கோடியின் ஒரு பகுதியை சதோஷி (0.00000001) என்றும் குறிப்பிடுகின்றனர்.  ஒரு பொருளின் மதிப்பை மிகத் துல்லியமாக பிட்காயின் மூலம் தெரிவிப்பது எளிது.

பிட்காயின் அளவைக் கணக்குவழக்கு இல்லாமல் உயர்த்த முடியாது. அதிகபட்சம் 21 மில்லியன் பிட்காயின்களைத்தான் உருவாக்க முடியும். 

யாருக்கும் தெரியாது!

சட்ட ரீதியான அரசின் அங்கீகாரம் பெறாத பிட்காயினை எப்படிப் பணம் என்று பலர் பயன்படுத்துகின்றனர்?

காரணம், அதன் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே. ஒரு பணத்தின் மீது எவ்வாறு நம்பிக்கை வருகிறது? போலிப் பணத்தை உருவாக்க முடியாது என்றால் உண்மைப் பணத்தின் மீது நம்பிக்கை தானாகவே வரும். பிட்காயினை உருவாக் கும் தொழில்நுட்பத்தில் அதன் உண்மை தன்மையும், அதன் அடிப்படையில் அதன் மீதான நம்பிக்கையும் உருவாகிறது.

இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் யாராலும் போலி பிட்காயினை உருவாக்க முடியாது. அதே நேரத்தில் ஒருவரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்பதை யாராலும் அறியமுடியாது. இதனால் ஒருவர் சேர்த்த சொத்தினை  மறைத்து வைப்பதற்கு பிட்காயின் ஒரு சிறந்த முறையாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்