டூவீலர் இன்ஷூரன்ஸ்... மூன்றாண்டு பாலிசி லாபமா?

சோ.கார்த்திகேயன்

ரு சக்கர வாகனங்களுக்கு பாலிசி எடுப்பவர்களில் பலரும் தொடர்ந்து அதை புதுப்பிப்பது இல்லை. இந்தியாவில் சுமார் 75% பேர் இரு சக்கர வாகன இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பதாக 2015, மே மாதத்தில் ஐ.ஆர்.டி.ஏ. நடத்திய சர்வே ஒன்றில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களைவிட கிராமப் புறங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக உள்ளது. பாலிசிக் காலம் முடிந்தபின்பு, அந்த பாலிசியை தொடர முடியாமல் போவதற்கு முக்கியக் காரணம், விழிப்பு உணர்வின்மையும் நேரமின்மையும்தான். இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வாக, மூன்றாண்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டும் நடைமுறை இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன பாலிசி களில் இரு வகைகள் உள்ளன. ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான ஓன் டேமேஜ் பாலிசி (Own Damage Policy). அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான மூன்றாம் நபர் பாலிசி (Third Party Insurance).  இந்த பாலிசிகளை ஒருவர் தனியாகவோ அல்லது குரூப்  பாலிசியாகவோ எடுக்கலாம்.  இந்த இரு பாலிசிகளை ஓராண்டுக்கு பதிலாக தற்போது மூன்றாண்டுகளுக்கு எடுக்கலாம்.  

ஒரு வருட பாலிசிக்கும், மூன்று வருட பாலிசிக்கும் என்ன வித்தியாசம், எதற்காக இந்த மூன்று வருட பாலிசி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது, இதனால் என்ன பயன் என்பது குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் கேசவனிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“இரு சக்கர வாகனக் காப்பீடு பாலிசிகளை ஒரு வருட பாலிசியாகத்தான் வழங்கி வந்தோம். இப்போது நீண்ட கால பாலிசியாகவும் மூன்றாண்டுகளுக்கு கவரேஜ் இருக்கும்படியும் வழங்கி வருகிறோம். இருசக்கர வாகனங் களுக்கான இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போதும், அல்லது வாகன விபத்து ஏற்படும் போதுதான் பாலிசியைப் புதுப்பிக்கவில்லை என்ற எண்ணமே நினைவுக்கு வருகிறது. இதுவே மூன்று வருட பாலிசி என்கிறபோது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கத் தேவை இல்லை. ஒருமுறை புதுப்பித்து விட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு அந்த பாலிசியை வைத்திருக்கலாம்.

ஆண்டுதோறும் மூன்றாம் நபர் பாலிசியின் பிரீமியம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணத்துக்கு, ரூ.50,000 கவரேஜ், 150 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்துக்கு 2012-13-ல் ரூ.357 -ஆக இருந்த மூன்றாம் நபர் பாலிசி பிரீமியம், 2013-14-ல் ரூ.422-ஆகவும், 2014-15-ல் ரூ.464-ஆகவும், 2015-16-ல் 538 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மூன்றாண்டு கால பாலிசியை எடுக்கும்போது அதிகரிக்கும் பிரீமியத்தை செலுத்த தேவையில்லை என்பது பாசிட்டிவ்-ஆன விஷயம்” என்றவர் சற்று நிறுத்தி, ஓராண்டு பாலிசிக்கு பதில் மூன்றாண்டு பாலிசி எடுத்தால், எவ்வளவு பிரீமியம் மிச்சமாகும் என்பதைச்  சொன்னார். 

‘‘ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 150சிசி திறன் கொண்ட புதிய வாகனம் அல்லது 5 ஆண்டுகள் ஆன பழைய வாகனம் என்றால், ஒரு வருட பாலிசியில் ஓன் டேமேஜ் பிரீமியம் முதல் ஆண்டுக்கு 854 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 683 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 640 ரூபாயும் என மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.2,177 செலுத்த வேண்டும். இந்த  மூன்று ஆண்டுகளுக்கும் க்ளெய்ம் எதுவும் இல்லை என்கிற கணக்கில் (நோ க்ளெய்ம் போனஸ் சலுகை அளிக்கப்பட்டுள்ள நிலையில்) செலுத்தும் மொத்த பிரீமியம் ஆகும்.

இதுவே மூன்று ஆண்டு பாலிசி என்றால் 30%  தள்ளுபடியுடன் ரூ.1,793 செலுத்தினால் போதும். பாலிசி எடுப்பவர்கள் அதிகமான சலுகையை எதிர்பார்த்தால், கூடுதலாக 20% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உண்டு.  இந்தத் தள்ளுபடியும் கிடைத்தால், மூன்று ஆண்டு பாலிசிக்கு பிரிமீயம் ரூ.1,281 மட்டும் செலுத்தினால் போதும். ஆக, மூன்று ஆண்டு பாலிசி பிரீமியத்தில் குறைந்தது 18 % முதல் 41% வரை, அதாவது ரூ.384 முதல் ரூ.896  வரை சேமிக்க முடியும்.

மூன்றாண்டு பாலிசியை புதுப்பிக்கும்போது எந்த க்ளெய்மும் செய்யவில்லை என்றால் 30% நிச்சய தள்ளுபடி மற்றும் 20% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இதுவே ஒருமுறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடியுடன், 10% சிறப்புத் தள்ளுபடி கிடைக்கலாம். இரண்டு முறை க்ளெய்ம் செய்திருந்தால், 30% நிச்சய தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். ஒரு வருட பாலிசியில் ஆண்டுக்கு ஒரு க்ளெய்ம் செய்திருந்தால், நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்காது. தவிர, ரெனிவல் பிரீமியம் அதிகரிக்கும்.   தற்போது, ஐ.ஆர்.டி.ஏ. மூன்றாண்டு பாலிசியை இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதித்து உள்ளது. விரைவில் நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த பாலிசி தரப்படலாம்” என்றார்.

மூன்றாண்டு பாலிசியில் பணம் மிச்சமாவதோடு, நேரமும் மிச்சமாகிறது. இனி பாலிசியை புதுப்பிக்க நேரமில்லை என்று சொல்ல மாட்டீர்கள்தானே?

படம்:  மீ.நிவேதன்


ஓன் டேமேஜ் பாலிசி -  பிரீமியத்தில் எவ்வளவு லாபம்?

ஒரு வருட பாலிசி - (மூன்றாண்டுகளுக்கு சேர்த்து மொத்த பிரீமியம்) - ரூ.2,177

3 ஆண்டு பாலிசி  (நிச்சயம் 30% தள்ளுபடி, 20% சிறப்புத் தள்ளுபடி) - ரூ.1,281

லாபம் - ரூ.896(வாகனத்தின் மதிப்பு ரூ.50,000, 150 சிசி, புதிய அல்லது பழைய வாகனம்.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick