மாற்று முதலீட்டுத் திட்டங்கள்... அதிக ரிஸ்க்... அதிக லாபம்!

த.ராஜன் இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்

முதலீட்டுத் திட்டங்கள் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள்தான். இதில் சில முதலீடுகள் பாதுகாப்பானவை. சில சற்று ரிஸ்க் மிகுந்தவை. தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் மாற்று முதலீடுகளில் முதலீட்டாளர்கள் தங்களுடைய மொத்த முதலீட்டில் ஒரு பகுதியை முதலீடு செய்கிறார்கள். மாற்று முதலீட்டுத் திட்டங்கள் என்ன என்பது குறித்து இனி பார்ப்போம்.

மாற்று முதலீடுகள் எனில்..?

பங்குகள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரெகுலர் முதலீட்டுத் திட்டங்கள் அல்லாமல், அரிய வகை நாணயங்கள், வென்சர் கேப்பிட்டலில் முதலீடு செய்வது மாற்று முதலீடுகள் ஆகும்.

ஏன் மாற்று முதலீடு?

சில முதலீட்டாளர்கள் தங்களுடைய ரெகுலர் இன் வெஸ்ட்மென்ட் திட்டங்களை விட மாற்று முதலீட்டுத் திட்டங்கள் அதிக லாபம் கொடுக்கும் என்ற நோக்கத்தில் முதலீடு செய்கின்றனர். சில வகை முதலீட்டாளர்கள் ஒரே மாதிரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து சலிப்பு ஏற்பட்டு, இந்த வகையான மாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய ஆரம்பிக்கின்றனர். இன்னும் சில முதலீட்டாளர் களோ, இந்த வகை யான முதலீட்டில் ஒரு பரபரப்புக்காக முதலீடு செய்கின்றனர்.

என்ன ரிஸ்க்?

மாற்று முதலீடுகளைப் பொறுத்தவரை, அதில் பல பிரச்னைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மாற்று முதலீட்டுத் திட்டங்கள், ரெகுலர் திட்டங்களைப் போல, ஒப்பீடு செய்து முதலீடு செய்ய இயலாது என்பது முக்கியமான விஷயம். மாற்று முதலீட்டுத் திட்டங்களில் நமக்கு தேவைப்படும்போது விற்று பணமாக்கி கொள்வது  சாத்தியமில்லை. பங்குச் சந்தை/மியூச்சுவல் ஃபண்ட் போல முதலீடு செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் எளிதானது அல்ல.  தவிர, மாற்று முதலீடுகளில் சரியான விலை நிர்ணயம் மற்றும் வெளிப்படையான மதிப்பீடு முறை கிடையாது.

மாற்று முதலீடுகளில் ஏற்ற இறக்கம் (Volatility) அதிகளவு இருக்கும். சந்தை நிலவரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது. பங்குச் சந்தை போல மாற்று முதலீடுகள் வரைமுறைப் படுத்தப்பட்டவை (Regulated) அல்ல. அதனால் மோசடித் திட்டங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

மேலும், பங்குச் சந்தை திட்டங்களைப் போல் மாற்று முதலீட்டுத் திட்டங்களில் கிடைக்கும் வருமானத்துக்கு என்ன மாதிரியான வரி செலுத்த வேண்டும் என்று தெளிவான விதி இல்லை. தற்போதுதான் மாற்று முதலீட்டுத் திட்டங்களுக்கு வரி விதிப்பு முறையை கொண்டு வருவதற்கு செபியிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டியவை..!

மாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் அது நன்கு கட்டமைக்கப்பட்ட (Structured Investment Products) திட்டம்தானா என்பதை உறுதி செய்து கொள்ளவும். மாற்று முதலீட்டுத் திட்டங்களிலுள்ள ஏற்ற இறக்கத்தைத் தவிர்ப்பதற்கு மூலதன பாதுகாப்புத் திட்டமாக (Capital protection or capital guaranteed schemes) தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது நல்லது.

எளிதில் விற்று வெளிவர இயலாதபடிக்கு உள்ள மாற்று முதலீட்டுத் திட்டங்களில் முதலீட்டைத் தவிர்க்கவும். கண் மூடித்தனமாக எந்த மாற்று முதலீட்டுத் திட்டத்திலும் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வதை தவிர்க்கவும். பங்குச் சந்தையைப் போல, மாற்று முதலீட்டுத் திட்டங்கள் ஒரு வரைமுறைபடுத் தப்பட்ட முதலீட்டுத் திட்டம் கிடையாது. அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டும் இந்த வகை முதலீட்டில் முதலீடு செய்வது நல்லதல்ல. நன்கு விசாரித்து, ஆராய்ந்தறிந்த பின்பே இது மாதிரியான திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick