ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்!

கம்ப்ளீட் ரிப்போர்ட்மு.சா.கெளதமன்

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நாணயம் விகடன் பிப்ரவரி 1, 2-ம் தேதிகளில் முதல் ‘ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்’  என்னும் சிறப்புக் கருத்தரங்கத்தை சென்னையில் நடத்தியது. பொதுவாக, மும்பையிலும், புது டெல்லியிலும் பெங்களூரிலும் ‘கான்க்ளேவ்’கள் நடப்பது வழக்கம். ஆனால், சென்னையில் ‘ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ ஒன்றை முதல்முறையாக நடத்தியது நாணயம் விகடன்.

இந்த சிறப்புக் கருத்தரங்கத்தின் தொடக்கமாக குத்துவிளக்கேற்றினார் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தென் மண்டல இயக்குனர் டி.ரவிக்குமார். அவரைத் தொடர்ந்து விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்டின் துணைத் தலைவர் கே.எஸ்.ராவ், இன்வெஸ்டார் ஆர் இடியட்ஸ் டாட்காம் நிறுவனத்தின் நிறுவனர் அர்ஜுன் பார்த்தசாரதி ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றினார்கள்.

ஏன் இந்த கான்க்ளேவ்?

ஏன் இந்த சிறப்புக் கருத்தரங்கத்தை நடத்துகிறோம் என்பது குறித்து முதலில் எடுத்துச் சொன்னார் நாணயம் விகடனின் ஆசிரியர் தி.இ.மணவாளன். ‘‘சர்வதேச அளவில் நம் இந்திய நாடு வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டுவருவதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 2015-16-ம் நிதி ஆண்டில் 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று சொல்லி  இருக்கிறது. இந்தியா முழூ வீச்சில் முன்னேறிவரும் காலத்தில் பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, நிதித் திட்டமிடல், பிசினஸ், ஸ்டார்ட் அப், சர்வதேச பொருளாதாரம் போன்றவை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்த கான்க்ளேவ்’’ என்றார் அவர்.

இந்தக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றுவதற்கு பல்வேறு சிறப்புப் பேச்சாளர்களையும், கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த முதலீட்டாளர்களையும் வாசகர்களையும் வரவேற்றுப் பேசினார் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்.

‘‘நாணயம் விகடன் ஆரம்பிப்பதற்கு முன்பே பொருளாதாரம் குறித்தும் பிசினஸ் குறித்தும் ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலும் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம். ஆனால், ஒரு வீட்டின் ‘பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜர்’ என்றால் அது அம்மா அல்லது மனைவிதான். நம் வாழ்வின் ஒவ்வொரு அடியையும் செதுக்கும் அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ தன் குடும்பத்தின் நிதி நிலையை உயர்த்த சரியான வழி தெரியவில்லை எனில், ஒரு குடும்பத்துக்கே தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இந்த வெற்றிடத்தை நிரப்பி, குடும்பங்கள் தங்கள் நிதி நிலைமையை சரியாக தெரிந்துகொள்வதற்கென்றே பத்தாண்டுகளுக்கு முன் டிசம்பர் 2005-ல் விதைக்கப்பட்ட விதைதான் நாணயம் விகடன்.

தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் நாணயத்தின் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியது. இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் பர்சனல் ஃபைனான்ஸ் பத்திரிகை நாணயம் விகடன். பர்சனல் ஃபைனான்ஸ் பத்திரிகை ஒன்று வாரம் தோறும்  வெளிவருவது இந்தியாவிலேயே நாணயம் விகடன் மட்டும்தான்.

நாணயம் விகடன், ஒரு பத்திரிகை என்கிற அளவில் நின்றுவிடாமல், மக்களை விழிப்பு உணர்வு அடையச் செய்யும் ஒரு ஆசானாக தன் சமூகப் பொறுப்பை உணர்ந்து செய்து வருகிறது. நாணயம் விகடன் இதுவரை 120-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை தமிழகத்தின் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்தி இருக்கிறது.  பெங்களூரு மற்றும் மும்பை போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களிலும் நடத்தி இருக்கிறோம்.

பர்சனல் ஃபைனான்ஸ் என்பதைத் தாண்டி, தற்போது நாணயம் விகடன் தொழில்முனை வோர்களுக்குமான ஒரு இதழாகவும் பரிணமித்து வருகிறது. நாணயம் விகடனின் குறிக்கோள், ‘நாம் பணத்துக்காக உழைக்கிறோம்; நம் பணம் நமக்காக உழைக்க வேண்டும்’ என்பதுதான். இந்த குறிக்கோளை நிறைவேற்றும் ஒரு பகுதியாகவே இந்த ‘கான்க்ளேவ்’  நடத்தப்படுகிறது’’ என்று கூறினார்.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் தென் மண்டல இயக்குநர் டி.ரவிக்குமார் இந்த கான்க்ளேவ்-யை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

‘‘ஆங்கிலத்தில் ‘ஃபர்ஸ்ட் அப்பியரன்ஸ் இஸ் தி பெஸ்ட் அப்பியரன்ஸ் என்று சொல்வார்கள்’ அந்த வாசகத்துக்கு தகுந்தாற் போல நாணயம் விகடனின் முதல் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சரியான தலைப்பு!

ஒரு நாட்டுக்கு, ஒரு மாநிலத்துக்கு, ஏன் ஒரு மாவட்டத்துக்குகூட பிசினஸ் என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு நாட்டில் பிசினஸ் நன்றாக செழித்து வளர்கிறது எனில்,  அந்த நாட்டை வளர்ந்த நாடு என்று சொல்கிறோம். அப்படி பிசினஸ் வளரவேண்டும் எனில், அதற்கு ஃபைனான்ஸ் என்று சொல்லப்படும் நிதி மிகவும் அவசியம். மனித உடலுக்கு  ரத்தம் எவ்வளவு அவசியமோ, அதேபோல் தொழிலுக்கு ஃபைனான்ஸ் மிக அவசியம். எனவே, நாணயம் விகடனின் முதல் கான்க்ளேவ்-வின் தலைப்பும் “ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ்” என்று வைத்திருப்பது பொருத்தமாகவே இருக்கிறது.

செபி எனும் பாதுகாவலன்!

ஒரு பிசினஸுக்கு தேவையான பணத்தை பல வழிகளில் திரட்டலாம். அப்படித் தேவையான பணத்தை பங்குச் சந்தை மூலம் திரட்டுவது அதில் மிகவும் முக்கியமானது. அப்படி திரட்டப்படும் பணம் எப்படி, எங்கு முதலீடு செய்யப்படுகிறது, யாரால் நிர்வகிக்கப்படுகிறது என்று தொடர்ந்து கருத்தாக கண்காணித்து வருகிறது செபி. 2014-ம் ஆண்டுக்குப்பின் உலக அளவில் மிக சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக இந்தியாவின் செபி தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் உலக முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியப் பங்குச் சந்தைகள் நன்கு நெறிமுறைப்படுத்தப்பட்ட சந்தைகள் என்னும் எண்ணம் நிலைத்துள்ளது.

பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக இதுவரைக்கும் 30,000-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். இந்தக் கூட்டங்களில் நெறிப்படுத்தப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியத்தை விளக்கி சொல்லி வருகிறோம். முதலீட்டில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கி, செபி போன்ற அமைப்புகளை எப்படி அணுகவேண்டும் என்பதையும் விளக்குகிறோம். இதனால் முன்பைவிட இப்போது பங்குச் சந்தை வர்த்தகத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

கவனமான விதிமுறைகள்!

இந்தியாவில் தாராளமயமாக்கல் வந்த 1990-91 காலகட்டங்களில் ஒரு நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்காக (IPO) சந்தைக்கு வரும்போது கொடுத்த விவரங்களைவிட இப்போது அதிக விவரங்களை தெரிவிக்கவேண்டும். இந்த குறைந்தபட்ச தேவைகளை நிறைவேற்றினால்தான் இப்போது ஐபிஓ வரமுடியும். தற்போது ஐபிஓ வருவதற்கான விதிமுறைகள் கவனத்தோடு வகுக்கப்பட்டிருக்கின்றன. செபி நிர்வகிக்கும் அல்லது நெறிமுறைப்படுத்தும் ப்ரைமரி மார்க்கெட், செகன்டரி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்தும் இப்படித்தான் நெறிமுறை படுத்தப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளைவிட நம் இந்தியப் பங்குச் சந்தை மிகவும் நெறிப்படுத்தப் பட்டிருக்கிறது. 

நாட்டை உயர்த்தும் செபி! 

எம்.எஸ்.எம்.இ துறையானது இந்தியாவின் மொத்த ஜிடிபியில் சுமார் 15% வரை பங்களிக்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி துறையில் 45%, ஏற்றுமதியில் 40% பங்களிக்கிறது. இந்தத் துறை மூலம் மட்டும் இந்தியாவில் ஏறத்தாழ 7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சிறிய அளவில் இருக்கும் இந்த எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பட்டியலிடுவதன் மூலம் எதிர்காலத்தில் பெரிதாக வளர வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கோ அல்லது சந்தையில் தங்கள் நிறுவனத்தை பட்டியலிட விரும்பும் நிறுவனங்களுக்கோ தங்களுக்கு தேவையான விஷயங்களை, எங்கள் அலுவலகத்தில் கேட்டு தெரிந்துகொள்ளலாம். எங்களைத் தேடிவரும் நிறுவனங்களை ஒரு குழந்தையை அன்பாக வழிநடத்துவது போல வழிகாட்டி நிறுவனங்களையும் உயர்த்தி, நாட்டையும் உயர்த்தத் தயாராக இருக்கிறோம்” என்று உற்சாகமாக முடித்தார் அவர். (செபியின் தென் மண்டல இயக்குநர் டி.ரவிக்குமார் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துக்களே!)

நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்!

தொடக்க விழா முடிந்து தேநீர் இடைவெளிக்குப் பின், அடுத்த அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் இன்வெஸ்டார் ஆர் இடியட்ஸ் டாட்காம் மற்றும் ஐஎன்ஆர் பாண்ட்ஸ் டாட்காம் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் அர்ஜுன் பார்த்தசாரதி பேசினார். உலக அளவில் நெருங்கிய தொடர்பு கொண்ட சந்தையில் முதலீடு செய்வது எப்படி (Investing your savings in this dynamic & globally interlinked market) என்பது குறித்துப் பேசினார்.

‘‘உலக அளவிலும் நம் நாட்டிலும்  ஏதோ ஒரு மாற்றம் தினமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்த மாற்றங்களால் நாம் செய்துள்ள முதலீடுகள் பாதிப்படையக்கூடும். தற்போது இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கக் குறியீடு (சிபிஐ) குறைந்துகொண்டே வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கிறது. இருப்பினும் நம் அன்றாட வீட்டுச் செலவுகள் குறைந்திருக்கிறதா என்றால் இல்லை. என் மகளின் கல்விக் கட்டணம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 100% அதிகரிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி நிலக்கரியை கொண்டு உற்பத்தி செய்யப்படுபவை. சரியாக சொல்லப்போனால், நிலக்கரியின் விலைகுறைவால், மின்சாரத்தின் விலையும் குறைய வேண்டும். மாறாக, இந்தியாவில் மின்சாரத்தின் விலை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

ஏன் குறையவில்லை?

2000-08 காலங்களில் உலக அளவில் ஒரு கமாடிட்டி சூப்பர் சைக்கிள் உண்டானது. இந்தக் காலத்தில் சீனாவின் வளர்ச்சி சுமாராக 10 சதவிகிதத்தில் வளர்ந்தது. இந்த சமயத்தில் தனக்கு தேவையான அனைத்து கமாடிட்டிகளையும் (நிலக்கரி, கச்சா எண்ணெய்....) வழக்கத்தைவிட அதிகமாக வாங்கத் தொடங்கியது சீனா. எனவே, அனைத்து கமாடிட்டி பொருட்களின் விலையும் அதிகரித்தது.

பொதுவாக, கமாடிட்டியின் விலை அதிகரித்தால், மக்கள் அதிக விலை தந்து வாங்கவேண்டியிருக்கும். மக்களால் அதிக விலை தந்து வாங்க முடியாது என்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த திடீர் விலை உயர்வை சுமந்துகொண்டது. அதாவது, அரசு உண்மையான விலையைவிட குறைவான விலைக்குப் பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்தது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடனில் தத்தளித்தது.

இப்படி மானிய விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்கியதால்தான், இன்று மாநில மின்சார வாரியங்களின் கடன் 4,00,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. தற்போது இந்தக் கடனை குறைக்க உதய் (UDAY) என்கிற திட்டத்தின் மூலம் பாண்டுகளை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து, தன் கடனை சரிகட்ட முயற்சித்தன. எனவேதான், வருடா வருடம் மின்சாரத்தின் விலை குறையாமல் அதிகரித்து வருகின்றன. 

உலகில் எந்த நாடெல்லாம் மானியம் வழங்காமல் விலை உயர்வை அப்படியே மக்களுக்கு தந்ததோ, அந்த நாடுகள் எல்லாம் தற்போது விலை குறைவை அனுபவிக்கின்றன. இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கவனித்துப் பார்த்துதான் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இப்படித்தான் உலக அரங்கில் நடக்கும் ஒரு சம்பவம்  சாதாரண இந்தியனை பாதிக்கிறது’’ என்று முடித்தார்.

அடுத்து பேசினார் யுனிஃபை கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.மாறன். இந்தியப் பங்குச் சந்தையை நகர்த்தும் காரணி எது (What drives Indian Equity Markets) என்பது குறித்துப் பேசினார் அவர்.

‘‘பொதுவாக, ஒரு பங்குச் சந்தை எனில் எஃப்ஐஐ ஃப்ளோ, சீனப் பொருளாதாரம், உலகப் போர்கள், சிரியா பிரச்னை, உலகப் பொருளாதார பிரச்னைகள், கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித முடிவு, அதிகப்படியான பணப்புழக்கம் என பல விஷயங்கள்  கண்டிப்பாக இருக்கும்.

அப்படி இல்லை எனில், இந்திய தேர்தல், ரிசர்வ் வங்கி வட்டி விகிதம், ஆர்பிஐ நிதிக் கொள்கை, செபி, பட்ஜெட், வரி அறிவிப்புகள், கார்ப்பரேட் கவர்ஜென்ஸ் போன்று ஏதாவது இருக்கும். உண்மையில் இவைதான் சந்தையை இயக்குகிறதா என்றால் இல்லை என்பதே என் பதில்.

பொதுவாக, நாம் ஒரு பங்கை வாங்கினால், நாமும் அந்த நிறுவனத்தில் ஒரு பார்ட்னர், அதாவது ஒரு முதலாளியாக மாறுகிறோம். ஒரு நாளுக்காகவோ அல்லது ஒரு வாரத்துக்காகவோ நாம் ஒரு நிறுவனத்தை தொடங்குவோமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வோம். அப்படி எனில், ஒரு பங்கை மட்டும் ஏன் ஒரு நாளுக்கோ அல்லது ஒரு வாரத்துக்கோ வாங்க வேண்டும்?

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து பணம் சம்பாதிப்பவர்கள், நிறுவனங்களின் புரமோட்டர்கள் தவிர வேறு யாரும் கிடையாது. கடந்த 15 வருடங்களில் 2001-02 ஆண்டுகளில் ஐ.டி மெல்ட் டவுன், அமெரிக்க ட்வின் டவர் தகர்ப்பு, கேத்தன் பரேக் ஊழல் என்று பல செய்திகள் பங்குச் சந்தையை புரட்டி எடுத்தன. ஆனால், அதே 2001-ம் ஆண்டில்தான் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் புரமோட்டர் ஷேர் ஹோல்டிங்ஸ் மிக அதிகமாக இருந்தது. இந்த சமயத்தில் மேற்கூறிய காரணங்களால் முந்தைய ஆண்டுகளைவிட
50 - 60% இறக்கத்தில் வர்த்தகமானது சந்தை என்பது கவனிக்கத்தக்கது.

அதே நேரத்தில் 2007-ம் ஆண்டில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு, ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிப்பு, அதிகமான அந்நிய முதலீடுகள், 8 - 9% ஜிடிபி வளர்ச்சி என பல பாசிட்டிவ்-ஆன விஷயங்கள் நடந்தபோதும், அடுத்த ஆண்டு சந்தை சரிந்தது. பங்குகளை யார் விற்றார்கள், புரமோட்டார்கள். 2005, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் நிறுவனங்களின் புரமோட்டார்கள் தங்கள் பங்குகளை விற்று லாபம் பார்த்தார்கள். 2007-ம் ஆண்டில் மட்டும் 127 ஐபிஓக்கள்,இந்தியப்  பங்குச் சந்தையின் நிலவரம் நன்றாக இருந்ததால் வெளியாயின.

2008 ஜனவரியில் இந்தியப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 8000 புள்ளிகளை தொட்டு வர்த்தகமானது. ஆனால், இந்த சமயத்தில் (அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2008-ல்) டாப் 500 இந்திய நிறுவனங்களில் 168 நிறுவனங்களின் புரமோட்டார்கள் தங்கள் ஷேர் ஹோல்டிங்கை மீண்டும் அதிகரித்துக் கொண்டார்கள். அடுத்த காலாண்டில் தங்களது நிறுவனத்தின் பங்கு விலை என்னவாகும், அது எப்போது அதிகரிக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. நிறுவனம் நன்றாக செயல்படும் என்கிற நம்பிக்கை அவர்களிடம்  இருந்தது.

வருவாய் (Earnings) அதிகரித்த ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்கவில்லை என்று ஒரு நிறுவனத்தையாவது சொல்ல முடியுமா..? முடியாது. எனவே, நம் இந்தியப் பங்குச் சந்தைகளின் திசையை நிஜமாக நிர்ணயிப்பது நிறுவனங்களின் வருவாய்தான். அதை சரியாக கவனித்தாலே போதும்,  பங்குச் சந்தையில் நீண்ட காலத்தில் நிச்சயம் லாபம் பார்க்க முடியும்’’ என்று பேசி முடித்தார்.

நாணயம் விகடனின் கான்க்ளேவ்-ல் அடுத்தடுத்து நடந்த அமர்வுகளில் சிறப்புப் பேச்சாளர்கள் பேசிய விவரங்கள் அடுத்தடுத்த இதழ்களில் வெளியாகும்.

படங்கள்: கே.கார்த்திகேயன், 

ஆ.முத்துக்குமார்.


விருந்து படைத்த நாணயம்!

நாணயம் விகடன் இரண்டு நாட்கள் நடத்திய இந்த கான்க்ளேவுக்கு வந்திருந்த அனைவருக்கும் அருமையான மதிய உணவும் பரிமாறப்பட்டது. ‘‘இந்த கான்க்ளேவ்-ல் நிபுணர்கள் பேசிய அனைத்தும் எங்கள் அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தது. இந்த விருந்துடன் இரண்டு நாளைக்கும் நல்ல விருந்து வைத்து திகைக்க வைத்துவிட்டீர்களே!’’ என பல பங்கேற்பாளர்கள் புகழ்ந்தார்கள்.

‘’அருமையாக நடத்தி இருக்கிறீர்கள்!’’

எஸ்.ரமேஷ், நிர்வாக இயக்குநர், போத்தீஸ்.

“நாணயம் விகடன் நடத்திய கருத்தரங்கில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள், பிசினஸ், ஸ்டார்ட் அப், மற்றும் உலகப் பொருளாதாரம் போன்றவைகளைப் பற்றி புதிய கோணங்களில் பேச்சாளர்கள் பேசியது சிறப்பாக இருந்தது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட கருத்தரங்குகளை பெரிய நிதி நிறுவனங்கள்தான் நடத்தும். ஆனால் அதற்கு மாறாக ஒரு பத்திரிகை இவ்வளவு அருமையாக நடத்தி இருக்கிறது; அதில் நான் கலந்துகொண்டேன் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பினை அளித்த விகடன் குழுமத்துக்கு நன்றி.’’

கலக்கிய விகடன் டிஜிட்டல்!

நாணயம் விகடன் கான்க்ளேவ் அரங்கின் ஒருபகுதியில் ஆனந்த விகடன் நிறுவனம் தனது டிஜிட்டல் படைப்புகளைப்பற்றி அனைத்து முதலீட்டாளர்களுக்கும் எடுத்துச் சொல்ல ஒரு தனி கேலரியை அமைத்திருந்தது. இதில் விகடன் டாட் காம், விகடன் டிவி, விகடன் பதிப்பகம், தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் என்பது 60 வார்த்தைகளில் எல்லா செய்திகளையும் சுருக்கமாக எடுத்துச் சொல்லும் ஆப்ஸ். இந்த ஆப்ஸைப் பற்றி தெரிந்துகொண்ட முதலீட்டாளர்கள் அங்கேயே தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்துகொண்டு, ஆஹா, அருமையா இருக்கே என்று புகழ்ந்தனர். விகடனின் சமீபத்தில் வெளியிட்ட பிரமாண்ட வரலாற்று படைப்பான சந்திரஹாசத்தை வர்ச்சுவலாக பார்க்கும் படியும் செய்திருந்ததை பலரும் பார்த்து ரசித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick