வியாபார சிறுகதை - ராமநாதனும் ரொட்டேஷனும்!

பார்த்தசாரதி ரெங்கராஜ்

நாலாவது மாடி... லிஃப்ட் கதவுகள் தானாக திறந்து என்னை உள்ளே அழைத்தது. உள்ளே சென்றதும் யோசிக்க ஆரம்பித்தேன்.

எனக்கும் தெரியும், ஆனால்... அதை எப்படி புரியும்படி எடுத்துச் சொல்வது என்றுதான் தெரியவில்லை.

ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்தான் அறிவாள். இல்லை,  இல்லை. இதுகூட சரியான உதாரணம் கிடையாது. ஒரு பாம்பைப் பிடிக்க பாம்பாட்டி யால் மட்டுமே முடியும்.   இப்படி அப்படி கையை ஆட்டி, தலையை திருகி பாம்பைப் பிடிக்க வேண்டுமென்று நமக்கும் தெரியும்.  ஆனால், பாம்பாட்டி அதை எளிதாக பிடித்துவிடுவான்.

நான் ஏன் இப்படி உளறிக் கொண்டிருக்கிறேன்...? ஆம், உண்மைதான், நேற்று மாலை முதலே நான் குழப்பத்தில்தான் இருக்கிறேன்...

லிஃப்டில் நின்றுகொண்டு இப்படி நிறைய நேரம் யோசித்த பிறகுதான் தெரிந்தது, நான் இன்னும் அதே ஃப்ளோரில் நின்றுகொண்டிருக்கிறேன் என்று. அதாவது, நான் லிஃப்டில் உள்ளே போனபின் எந்த பொத்தானையும் அழுத்தவே இல்லை. இவ்வளவுக்கும் காரணம், இப்போது நடக்கப் போகும் ஒரு சந்திப்பை பற்றி நான் கொண்ட பயத்தினால்தான்.

பை த பை , நான் யார் என்பதை சொல்ல மறந்து விட்டேன். என் பெயர் பிரகாசம். ஆனால், எனது நண்பர்கள் என்னை ‘டியூப் லைட்’ என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு நான் பிரகாச மானவன். படித்தது, இன்ஜினீயரிங் என்றாலும், நானும் எல்லா இந்தியனைப் போல, வேறு ஒரு துறையில்தான் வேலை செய்துவருகிறேன். ஒரு பன்னாட்டு எஃப்.எம்.சி.ஜி நிறுவனத்தின், அதாவது,  தினவாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் விற்கும் பிரிவில் நான் ஒரு விற்பனைப் பிரதிநிதி. என் வேலை, எனக்கு ஒதுக்கப்பட்ட வட்டாரத்தில், எனது நிறுவனத்தால் அமர்த்தப்பட்ட ஒரு விநியோகஸ்தர் (டிஸ்ட்ரிபியூட்டர்) மூலமாக சோப்பு விற்பதுதான். திருச்சி நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள சிறு, பெரு ஊராட்சிகளில்தான் எனது வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது. ஆனால், இன்று போல் என்றும் எனக்கு குழப்பம் வந்ததில்லை. இதற்கு காரணம், எனது விநியோகஸ்தர் திரு.ராமநாதன்தான். அவர் இருப்பது சென்னையில். ஆனால், தமிழ்நாடு முழுவதும் அவருக்கு பல தொழில்; பல நிறுவனங்களுக்கு விநியோகஸ்தர்; உண்மையில் அவர் ஒரு அரசியல்வாதி. வட சென்னை பகுதியில் சில வருடங்கள் கவுன்சிலராகவும், பின் படிப்படியாக தேர்ச்சி பெற்று, எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். கிடைத்த பணத்தில், பல தொழில்களைஆரம்பித்தவர். மற்றவர் போல் அல்லாமல் தரமான படித்த இளைஞர்களை வேலைக்கு வைத்ததால் வியாபாரம் மென்மேலும் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அரசியல்வாதி என்கிற கடந்த காலத்தை முற்றிலுமாக மறந்து போகிற அளவுக்கு முழுநேர பிசினஸ்மேனாகிவிட்டார். 

அரசியலில் இருந்தவர் என்பதாலோ என்னவோ, அவர் யாரையும் எளிதில் நம்புவதில்லை. தவிர, நல்ல வியாபார புத்தி வேறு. நேற்று திருச்சி வந்த அவர், அவருடைய பல அலுவல்கள் மத்தியில் எனது விற்பனையில் அவருக்குக் கிடைக்கும் லாபத்தைப் பார்த்து பதறிப் போய்விட்டார். சொல்லப் போனால், விற்பனையில் எந்த பிரச்னையும் இல்லை. அவரது விற்பனையாளர்கள் ஒரு கடை  விடாமல் அனைத்து மளிகை மற்றும் பெட்டிக் கடைகளிலும் சோப்பை விற்று அதிகமான விற்பனை செய்கிறார்கள். ஆனாலும் அவர் அதிர்ச்சியாகக் காரணம், எங்கள் நிறுவனம் தரும் கமிஷன்தான்.

நேற்று மாலை, இது குறித்து அவர் என்னிடம் பேச விரும்புவதாக சொல்லி என்னை அழைத்திருந்தார். அவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். சில நிமிட நலம் விசாரிப்புகள் முடிந்தபின் ஒரு கேள்வி கேட்டார். மிகச் சாதாரணமான கேள்விதான். ஆனால், என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியாத கேள்வி. 

“தம்பி, நான் உங்களுக்கு கொடுக்கற வசதிகள், முதலீடு, வேலை செய்யும் ஆட்கள், குடோன் அளவு எல்லாமே என்னோட எலெக்ட்ரானிக் பொருட்கள் விக்கிற ஏஜென்சியைவிட 20% அதிகம்.  ஆனா, எலெக்ட்ரானிக் கம்பெனி எனக்கு 10% மார்ஜின் தருது. நீங்க 5% மார்ஜின்தான் தர்றீங்க, ஏன்?”

இந்தக் கேள்வி சரியானதுதானே! எனக்கு தெரியும், என்னோட கம்பெனியின் மூலம்தான் அவருக்கு அதிகம் லாபம் கிடைக்கிறது என்று. ஆனால், அதை எப்படி சொல்லிப் புரிய வைப்பது? என்னென்னவோ சொல்லிப் பார்த்தேன். எல்லாம் கேட்டுவிட்டு, மீண்டும் அதே கேள்வியைத்தான் கேட்டார். 

“தம்பி, நான் ரெண்டு தொழில் பண்றேன். ரெண்டுலயுமே சமமான அளவு முதலீடு செய்றேன். ஒண்ணு, எனக்கு 5% மார்ஜின் தருது. இன்னொன்னு எனக்கு 10% மார்ஜின் தருது.  இதுல எது நல்ல தொழில் அல்லது இந்த இரண்டு தொழில்களை எடுத்துக்கிட்டு பார்த்தா யார் நல்லா செய்றாங்க? நீங்களே சொல்லுங்க’’.

ராமநாதன் அங்கு தொட்டு, இங்கு தொட்டு எங்கே வருகிறார் என்று புரிந்தது. நாங்க அதிக மார்ஜின் தரவில்லை என்று சொல்ல வருகிறாரா?

இந்தக் கேள்வியை நான் உணர்ந்த மாத்திரத்தில் என் கை, கால் உதற ஆரம்பித்தது. நாளை மதியம் என் ஏரியா மேனேஜர் குருநாதனுடன் வந்து சந்திப்பதாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.

நேராக போய் குருநாதனை சந்தித்தேன். சிலரை பார்த்தவுடனேயே நமக்கு எல்லா பிரச்னையும் தீர்ந்துபோனது போல் இருக்கும். அந்த சிலரில் குருவும் ஒருவர். என்னதான் அவர் மேலாளர் பதவியில் இருந்தாலும், அவர் தன்னை பெயர் சொல்லி அழைப்பதையே விரும்புவார். சார் என்று கூப்பிட்டால் அவருக்கு சுத்தமாக பிடிக்காது. அனைவருமே சமம் என்பார். என்னிடம் எவ்வளவு நீ கற்றாயோ, அவ்வளவு உன்னிடமும் கற்கிறேன் என்பார். மொத்தத்தில் அவர் பெயரில் மட்டுமல்ல, அவரே ஒரு அருமையான குருதான். அவரிடம் பிரச்னையை சொன்னேன்.

‘‘நாளை மதியம்தானே! அவரைப் பார்த்து விளக்கம் தந்தாப் போச்சு’’ என்று வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

இதோ மறுநாள் மதியம் வந்தேவிட்டது. நான்காவது மாடியிலிருந்து ஒரு வழியாக லிஃப்ட் கீழே வந்திருந்தது. கீழே லாபியில் எனது ஏரியா மேனேஜர் குருநாதன் அமர்ந்திருந்தார். நான் அவரை நெருங்கியவுடன் சிரித்தபடியே கைகுலுக்கி, ‘‘பிரகாசம், போலாம் கிளம்புங்க, சிங்கத்த அதோட குகையிலேயே சந்திப்போம்’’ என்றார். அவரை அழைத்துக் கொண்டுபோய் ராமநாதன் முன்பு உட்கார வைத்தேன்.

“பிரகாசம் சொன்னாரு, உங்களுக்கு நாங்க தர்ற மார்ஜின் கம்மியாப் படுதுன்னு...’’ என்று நேராகவே விஷயத்துக்கு வந்தார் குரு.

ராமநாதன் இதை எதிர்பார்க்கவில்லை. “அது இருக்கட்டுங்க, எப்பிடியும் அதப் பத்தி பேசத்தானே போறோம், நீங்க என்ன சாப்பிடுறீங்க, மொதல்ல அத சொல்லுங்க...’’ என்று தனக்கே உரிய பாணியில் சமாளித்தார் அவர். 

“இல்லைங்க, கண்டிப்பா நாம மதிய சாப்பாடே சேர்ந்து சாப்பிடலாம். இந்தப் பிரச்னையை முதல்ல முடிச்சிரலாம். ஏன்னா, இது ஒரு அடிப்படை கேள்வி. இதுல உங்களுக்கு சந்தேகம் இருந்திச்சின்னா, கொஞ்சம் கொஞ்சமா உங்க இண்டரஸ்ட் கொறஞ்சி, நீங்க வேற முடிவு எடுக்குற மாதிரி சந்தர்ப்பங்கள் வர வாய்ப்பிருக்கு’’ என்றார் குரு விடாமல்.

ராமநாதன், சிறிது யோசனைக்குப்பிறகு, ‘‘சரி சார், பிரச்னை என்னன்னு உங்களுக்கு தெரியும். என்னோட முதலீடு ரெண்டு கம்பெனிக்கும் ஒண்ணா தந்்திருக்கிறேன்.  அதனால மார்ஜினும் ஒண்ணா வேணும்ன்னு கேட்கிறேன். என்னோடோ கேள்வியில் ஏதாவது தப்பிருக்கா?”

“தப்பே இல்லைங்க, மிகச் சரியான கேள்வி. காசு போடுற நீங்க அவசியம் கேக்க வேண்டிய கேள்வி’’ என்று குரு சொல்ல, எனக்குள் படபடப்பு கூடியது.

“ஆனா, நீங்க ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெளிவா சொல்லீருங்க. உங்களுக்கு மார்ஜின் முக்கியமா, இல்ல லாபம் முக்கியமான்னு சொல்லிடுங்க. அத வச்சுதான் நான் மேற்படி பேச முடியும்’’  என்று ஒரு கொக்கி போட்டார் குரு.

ராமநாதன் யோசிக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் குழப்பத்தை பார்த்த எனக்கு சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. குரு தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார் .

“ரெண்டுமே ஒண்ணுதானே குரு சார். மார்ஜின் அதிகம் கொடுத்தீங்கன்னா, என்னோட லாபம் அதிகமாகும், சரிதானே ?” என்றார் ராமநாதன்

“அதெப்படி ஒண்ணாகும்? மார்ஜின் என்பது சேல்ஸ் கமிஷன். லாபம் என்கிறது நீங்க போட்ட முதலீடு மேல கிடைக்கிறது’’ என்றார் குரு. இந்த இடத்தில் எனக்கே சற்று குழப்பம் வரத்தான் செய்தது. மனுஷன் என்னதான் சொல்ல வர்றார்?

“சார், எனக்கு புரியிற மாதிரி தெளிவா சொல்லுங்க’’ என்று உடைத்துக் கூறினார் ராமநாதன். ஒரு மெல்லிய புன்னகையுடன் ஆரம்பித்தார் குரு. “சார், எங்க நிறுவன பொருட்களுக்கான உங்க மாச சேல்ஸ் எவ்வளவு?” என்று முதல் கேள்வியை கேட்டார் குரு.

“30 லட்சம் ரூபாய்’’ என்றார் பொறுமையாக.

“எவ்வளவு ஸ்டாக் வச்சிருக்கீங்க மார்கெட்ல...  எவ்வளவு கடன் கொடுத்து இருக்கீங்க?’’ குருவின் அடுத்த கேள்வி இது.

“ரெண்டும் சேர்த்து ரூ. 10 லட்சம்.அதுதான் என்னோட முதலீடு” என்றார் ராமநாதன்.

“அதாவது, உங்களோட 10  லட்ச ரூபாய் முதலீட்ட மூணு தடவ ரொட்டேஷன் பண்ணியிருக்கீங்க, சரியா?” குரு தூண்டில் போட்டுவிட்டார்.

“ஆமா, 30 லட்சம் ரூபாய் சேல்ஸ் ஆயிருக்குன்னா, மூணு தடவ என்னோட பணம் ரொட்டேஷன் ஆயிருக்குன்னுதான் அர்த்தம்’’ என்றார் ராமநாதன்.

“அப்படின்னா, ஒரு ரொட்டேஷனுக்கு நாங்க தருகிற 5 சதவிகித கமிஷன், மூணு ரொட்டேஷனில் 15% ஆயிருமில்லையா?” என்று அர்த்தத்துடன் சிரித்தார் குரு.

“சார், புரியிற மாதிரிதான் இருக்கு ஆனா... இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க’’ என்றார் ராமநாதன் உண்மை யான ஒரு உந்துதலுடன்.

“சார், மாச சேல்ஸ் ரூ. 30 லட்சத்தில், 5% லாபம் என்பது 1.5 லட்சம் ரூபாய் சரிதானே! அதாவது, ரூ. 10 லட்சம் முதலீட்டில் நீங்கள் சம்பாதித்த மொத்த லாபம் 1.5 லட்சம் ரூபாய். அதே உங்கள் எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் அதே ரூ. 10 லட்சம் முதலீட்டில் 10% மார்ஜினில் நீங்கள் சம்பாதித்தது ரூ. 1 லட்சம். இப்போ நீங்களே சொல்லுங்க, எலெக்ட்ரானிக் கம்பெனி தர்ற 1 லட்சம் ரூபாய் லாபம் பெருசா, இல்ல எங்க கம்பெனி தர்ற 1.5 லட்சம் ரூபாய் பெருசா?” - சக்கைப் போடு போட்டார் குரு.

ராமநாதன் வியப்பில் இருந்தார். இப்படி ஒரு விஷயம் இருப்பதை நான் எப்படி கவனத்தில் கொள்ளவில்லை என்று வெட்கியது அவர் முகத்தில் நன்றாக தெரிந்தது.

“என்ன சார், நீங்க சொன்ன மாதிரி எலெக்ட்ரானிக் கம்பெனி தர்ற லாபத்தையே நாங்களும் தரவா?” என்றார் குரு புன்னகையுடன்.

அங்கிருந்த எல்லோருமே வாய் விட்டு சிரிக்க, சட்டென அங்கிருந்த ஒரு இறுக்கமான நிலையையும் மாற்றினார் குரு. இதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். ஆனால், எப்படி சொல்வது என்று தெரியாமல் முழிக்க, நல்லவேளை என்னைக் காப்பாற்றிவிட்டார் குரு.
மதிய உணவு முடிந்தவுடன், நாங்கள் இருவரும் அலுவலகம் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது நான் எனது சந்தேகத்தை கேட்டேன்.

“குரு,  ஏன் அந்த   எலெக்ட்ரானிக் கம்பெனியால மூன்று  ரொட்டேஷன் தர  முடியல?”

“பிரகாசம், அதற்கு காரணம் கமாடிட்டி மூவ்மென்ட்.  சோப்புங்கறது வேகமா விற்கக்கூடிய பொருள். வர்ற ஸ்டாக் உடனே வித்திடும். மாசத்தில மூணு ரொட்டேஷன் ஆகுற பொருளுக்கு 5% அதிக மார்ஜின்தான். ஆனா, எலெக்ட்ரானிக் பொருட்கள் அவ்வளவு சீக்கிரமா மூவ் ஆகாது. ஸ்டாக் நெறைய வைக்கணும். நெறைய நாளுக்கு வைக்கணும். அதனால ரொட்டேஷன் கம்மி. அதனால 10 சதவிகித மார்ஜின் தருவாங்க. இந்தியாவின் மிகப் பெரிய சிகரெட் விக்கிற கம்பெனி கொடுக்குற மார்ஜின் 1.2 சதவிகிதம்தான்.  ஏன்னா சிகரெட்ல போட்ட முதலீடு 10 தடவையாவது ரொட்டேஷன் ஆயிரும். ஆனா, செருப்பு, ஷூ  விக்கிற கம்பெனிகள் நிறைய மார்ஜின் தருவாங்க. ஏன்னா அது எப்போ விக்கும்னு யாருக்குமே தெரியாது. அதனால எவ்வளவு மார்ஜின்னு மட்டும் பார்க்காம, எவ்வளவு ரொட்டேஷன்னு சேர்ந்து பார்க்கணும்’’ என்றார் குரு அர்த்தத்துடன்.

பெரிய விஷயத்தைக் கத்துக் கிட்ட திருப்தியுடன் காரை விட்டு இறங்கி அலுவலகத்துக்குள் நுழைந்தோம்.


தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 1.15 கோடி சந்தாதாரர்கள்!

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும்,  இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இப்போது 1.15 கோடி சந்தாதாரர்கள் இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 16,11,020 பேரும், மாநில அரசு ஊழியர்கள் 28,59,094 பேரும், தனியார் குடிமக்களாக 5,76,993 பேரும், பெரு நிறுவன துறையைச் சார்ந்தவர்கள் 4,48,509 பேரும், அமைப்புசாரா தொழிலாளர்கள் 1,28,484 பேரும் உள்ளனர். இதில் என்பிஎஸ் லைட்டில் 44,63,637 பேரும், அடல் ஓய்வூதிய யோஜனாவில் 19,48,811 பேரும் இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick