இலக்குகளை அடைய இன்னும் என்ன செய்யவேண்டும்?

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

குறைவாக சம்பாதிப்பவர்களில் சிலர் சிக்கனமாக இருந்து நிறைய சேமிப்பார்கள். நிறைய சம்பாதிப்பவர்கள் சிலர் சராசரியாகவே சேமிப்பார்கள். ஆனால், எதிர்கால தேவைகளுக்கு போதுமான அளவுக்கு சேமிக்கிறார்களா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஜி.பார்த்தசாரதி தன்னுடைய இலக்குகளை அடைய தனது சேமிப்பு, முதலீடு எந்த அளவுக்கு இருக்கவேண்டும் எனக் கேட்டு, தனது நிதி குறித்த விவரங்களை நமக்கு மெயில் அனுப்பியிருந்தார்.

‘‘எனக்கு 36 வயது. சென்னை பெரம்பூர் எனக்கு பூர்வீகம். வேலைக்காக பெங்களூருவில் இருக்கிறேன். மாதம் சம்பளம் ரூ.85,000. என் மனைவி, என் மகன் சென்னை பெரம்பூரில் என் பூர்வீக வீட்டில் என் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். வாரம் ஒருமுறை சென்னைக்கு வந்து செல்கிறேன். மனைவி யமுனா தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசி ரியராக இருக்கிறார். மாதம் அவருக்கு சம்பளம் ரூ.23,000. எங்கள் மகன் தீபனுக்கு மூன்றறை வயது ஆகிறது. இந்த வருடம் எல்கேஜி சேர்க்க உள்ளோம்.

என் அப்பா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு பென்ஷன் வருகிறது. என் பெற்றோரைப் பொறுத்தவரை, பொருளாதார ரீதியான அவர்களின் தேவைகளை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். அப்பாவுக்கு மிலிட்டரி மருத்துவமனை சிகிச்சை வசதி இருப்பதால், மெடிக்ளெய்ம் எதுவும் எடுக்கவில்லை. எனக்கு என் அலுவலகத்தில் ரூ.5 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி கொடுத்திருக்கிறார்கள். தனியாகவும் ரூ.3 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துள்ளேன். டேர்ம் பாலிசி ரூ.25 லட்சத்துக்கு வைத்துள்ளேன்.
எனக்கு ஒரு தங்கை. ஒரு தம்பி. தம்பிக்கு வரன் பார்த்து வருகிறோம். வீட்டுக்கு மூத்தவர் என்ற பொறுப்பு எனக்கு இருக்கிறது. திருமணச் செலவு பற்றாக்குறைக்கு பர்சனல் லோன் போடலாமா என யோசித்து வருகிறேன். என் தங்கையின் மகன் எதிர்கால படிப்புச் செலவுகளுக்காக மாதம் ரூ.2,500 பிபிஎஃப் செலுத்தி வருகிறேன்.

திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டையில் எட்டு வருடத்துக்கு முன்பே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியுள்ளேன். பெரம்பூர் பூர்வீக வீட்டை இன்னொரு வீட்டுக் கடன் மூலம் சீரமைப்பு செய்தேன். செவ்வாய்பேட்டை வீடு என் பெயரில் உள்ளது. பெரம்பூர் வீடு பொதுவானது. இரண்டு வீட்டுக் கடனுக்கும் சேர்த்து மாதம் இஎம்ஐ ரூ. 27,000 செலுத்துகிறேன். செவ்வாய்பேட்டை வீட்டை உறவினர் ஒருவருக்கு ரூ.1,800-க்கு வாடகைக்கு விட்டுள்ளேன். அது பராமரிப்பு செலவுக்கே சரியாக உள்ளது.

நான் இதுவரை என் எதிர்கால இலக்குகளுக்கு துல்லியமாக முதலீடு செய்து வருகிறேனா, இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை கணக்கிட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“மிஸ்டர் சாரதி, நீங்கள் முதலீட்டு விவரங்களை புரிந்துகொண்டு சில முதலீடுகளை செய்து வருகிறீர்கள். டேர்ம் பாலிசி, ஹெல்த் பாலிசியெல்லாம் எடுத்துள்ளீர்கள். ஆனால் பலரையும் போல, பிஎஃப் தொகையை திரும்ப எடுத்து வேறு செலவுக்கு பயன்படுத்தியுள்ளீர்கள். இதை தவிர்த்திருக்கலாம். அடுத்து பல லட்சம் லோன் போட்டு வீடு வாங்கி வெறும் 1,800 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளீர்கள். இஎம்ஐ பல ஆயிரங்கள் செலுத்துகிறீர்கள். கொஞ்சம் யோசனை செய்திருக்கலாம். பரவாயில்லை இனி சிறப்பாக என்ன செய்யலாம் என பார்ப்போம்.

உங்களுக்கு இன்னும் 22 வருடங்கள் பணிபரியும் வாய்ப்பு இருப்பதால், ரிஸ்க் அதிகம் எடுக்காமலேயே ஈஸியாக உங்கள் இலக்குகளுக்கு முதலீடு செய்ய முடியும். பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை புரிந்துகொள்ளாமல் எடுத்து வைப்பதுதான். நீங்கள் வைத்துள்ள சில பாலிசிகள் 30% வருமான வரி வரம்புக்குள் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் பயன் தரும். நம் தேவை அறிந்து பாலிகளை எடுப்பதே சரியாக இருக்கும்.

உங்கள் மகனின் மேற்படிப்புக்கு அடுத்த 14 வருடத்தில் ரூ.75 லட்சம் கேட்டுள்ளீர்கள். நீங்கள் வைத்துள்ள யூலிப், மணிபேக் பாலிசிகள் மூலம் உங்களுக்கு ரூ.30.48 லட்சம் கிடைக்கக்கூடும். மீதமுள்ள தொகை ரூ.44.5 லட்சத்துக்கு நீங்கள் மாதம் ரூ.10,300 முதலீடு செய்ய வேண்டும்.

உங்களுடைய சகோதரர் திருமணம் முடிந்ததும், உங்கள் மகனுடைய திருமணத்துக்கான முதலீட்டை ஆரம்பியுங்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ.6,000 முதலீடு செய்ய ஆரம்பித்தால், 12% வருமானமாகக் கொண்டால், ரூ.69 லட்சம் கிடைக்கும். நீங்கள் ரூ.75 லட்சம் தேவை எனக் கேட்டுள்ளீர்கள். உங்கள் மகன் படிப்பு முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பார் என்பதால், பற்றாக்குறையை அவருடைய சம்பளத்தை சேமிப்பதன் மூலம் சமாளிக்கலாம்.

உங்களுடைய ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 22 வருடங்கள் உள்ளது. இப்போது மாதாந்திர செலவுகள் ரூ.22,500 ஆகிறது எனில், 7% பணவீக்க அடிப்படையில் அன்றைய நிலையில் நீங்கள் கேட்டுக்கொண்டபடி, உங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் தேவைப்படும். அதற்கு கார்பஸ் தொகையாக ரூ.2.85 கோடி தேவைப்படும். உங்களுடைய பிஎஃப், உங்களுடைய மனைவியின் பிஎஃப் மூலமாக ரூ.59.25 லட்சம் கிடைக்கும்.

உங்களுடைய சம்பளம் உயரும்போது பிடிக்கப்படும் பிஎஃப் தொகையும் உயரும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். மீதம் தேவைப்படும் தொகைக்கு மாதம் ரூ.17,500 முதலீடு செய்ய வேண்டும். தற்போது பிபிஎஃப் மூலம் முதலீடு செய்யும் ரூ.7,500 தவிர, கூடுதலாக ரூ.10,000 இதற்காக முதலீடு செய்யவேண்டும். 

உங்கள் தங்கையின் மகன் பெயரில் ரூ.2,500 பிபிஎஃப் செலுத்தி வருவதாக சொல்லியுள்ளீர்கள். பாசத்துக்கு கைகொடுக்கும் உங்கள் குணத்தை பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் அந்தக் குழந்தையின் படிப்புக்கு அந்தத் தொகையைப் பயன்படுத்தவும். நீங்கள் தற்போது வைத்துள்ள ரூ.25 லட்சத்துக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியம் மிக அதிகம். அதே பிரீமிய தொகையைச் செலுத்தும் வகையில் ரூ.75 லட்சத்துக்கு ஆன்லைனில் பாலிசி எடுக்க முடியும்.

அனைத்து முதலீட்டுக்கும் தொகை ஒதுக்கியது போக, 3,500 ரூபாயை ஆர்.டி மூலம் சேமித்து வரவும். அந்தத் தொகையை பிறகு மொத்தமாக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யவும். இதற்கு 50,000 ரூபாய்க்கான வருமான வரி சேமிப்புக்கு உதவும்.

உங்களின் தற்போதைய வருமானத்தின்படியே தாராளமாக முதலீடு செய்யலாம். இன்னும் சம்பளங்கள் உயரும்போது முதலீடுகளை அதிகரித்துக்கொள்ளலாம். வளமாக வாழ வாழ்த்துகள்”.

பரிந்துரை:

யூடிஐ ஈக்விட்டி: ரூ.6,000, மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.6,000, டாடா பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.4,000, எஸ்பிஐ மேக்னம் பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.4,000.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick