பட்ஜெட் ஆலோசனை... கல்விக் கடனுக்கு தனி வங்கி!

பேரா.ஆர்.வைத்தியநாதன், இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM), பெங்களூரு.

ட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் மத்திய நிதி அமைச்சருக்கு பலரும் பல யோசனைகளை சொல்வது வழக்கம். அந்த வகையில் நானும் சில யோசனைகளை நிதி அமைச்சர் முன்வைக்கிறேன். இப்போது நான் சொல்லும் யோசனைகளை கடந்த ஆண்டே நிதி அமைச்சருக்கு சொல்லிவிட்டேன். ஆனால், நிதி அமைச்சரோ அந்நிய நேரடி முதலீட்டாளர்களையும் (FII) நிதிச் சந்தைகளையும் கவனிப்பதிலே பிஸியாக இருப்பதால், அவருக்கு நம் யோசனையை விலாவாரியாக படிக்க நேரமிருந்திருக்காது. எனவே, ஏற்கெனவே சொன்ன யோசனைகளுடன் சில புதிய யோசனைகளையும் சேர்த்து இப்போது சொல்கிறேன்.

கல்விக் கடனுக்கு வங்கி!

வீட்டுக் கடன் வழங்குவதற்கு என ஹெச்டிஎஃப்சி வங்கி இருப்பது போல, கல்விக் கடன் தருவதற்கென்று ஒரு தனியார்  வங்கி அமைத்திட வேண்டும். இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் ரூ.5,000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை ஆரம்ப மூலதனம் வழங்கப்பட வேண்டும். அனைத்து கல்வி மற்றும் திறன் மேம்பாடு குறித்த படிப்புகளுக்கும் இந்த சிறப்பு வங்கி மூலம் கடன் உதவி தரப்பட வேண்டும். இந்த வங்கியின் மூலம் ஆரம்பப் பள்ளி கல்வி தொடங்கி  ஐடிஐ, எம்பிஏ வரை எல்லாப் படிப்புகளுக்கும் கடன் உதவி செய்யப்பட வேண்டும். உள்நாட்டில் படிக்கும் படிப்பு களுக்கு மட்டுமே இந்த வங்கிகள் மூலம் கடன் தரப்பட வேண்டும். இந்த வங்கியின் டெபாசிட் மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். இந்தக் கடனை வாங்குபவர்கள் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து பணத்தை செலுத்திவிடுகிற மாதிரியான இ.எம்.ஐ. வசதி செய்துதர வேண்டும். இந்தக் கடன் பெற்று படிக்கும் மாணவர்கள் பெறும்  சான்றிதழில் தவணைத் தொகை குறிப்பிடப்பட வேண்டும். இதனால் கல்விக் கடன் தொகை மீண்டும் வங்கிக்கு சரியாக வந்து சேரும்.

இன்றைய நிலையில், வாராக் கடன் தொகை அதிக அளவில் இருப்பதற்கு ஒரு காரணம் கல்விக் கடன் தொகை சரியாக திரும்ப வராததே. கல்வி நிலையை உயர்த்திக் கொள்ளவும், திறனை வளர்த்துக் கொள்ளவும் நிதி உதவி செய்யவில்லை எனில், மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறாது.

சிறு நிறுவனங்களுக்கு முதல் மரியாதை!

இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கார்ப்பரேட் அல்லாத துறைகளின் பங்களிப்பு ஏறத்தாழ 50 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. குறிப்பாக, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 18 சதவிகிதமும், அரசு 18 சதவிகிதமும் காணப்படுகிறது. ஆனால், கார்ப்பரேட் துறையின் பங்களிப்பு 14% முதல் 15% மட் டுமே.   எனவே, நிதி அமைச்சர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 % உள்ள கார்ப்பரேட் துறையில் மட்டும் அதிக கவனம் செலுத்தாமல் மற்ற துறைகளிலும் சற்று அக்கறை காட்ட வேண்டும்.

சேவைத் துறையில் கட்டுமான பொருட்கள், வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், போக்குவரத்து, தொழில் வணிக சேவைகளின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இது நமது பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 67% என்கிற அளவில் பங்களிப்பு அளித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்த துறையின் வருடாந்திர வளர்ச்சி 8 - 9 சதவிகிதத்துக்கும் அதிகமாக வேகமாக வளர்ந்து வருகிறது.

கார்ப்பரேட் அல்லாத துறைகளில், கூட்டு மற்றும் தனி உரிமை நிறுவனங்களைக் கொண்டிருக்கும் சேவைத் துறையின் பங்களிப்பு 70 சதவிகிதத்துக்கும் மேலாக உள்ளது. கடந்த 1990-ல் 58 சதவிகிதமாக இருந்த வங்கிகளின் நிதி உதவியானது, 2011-ல் 36 சதவிகிதமாக குறைந்துள்ளது. இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு எளிதாக கடன் உதவி கிடைப்பதற்கு தனி நிதி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு எவ்வளவு கடன் தரவேண்டும், அந்தக் கடனை எவ்வளவு வட்டிக்கு தரவேண்டும் என்பது பற்றி அதுவே முடிவு செய்துகொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். இந்த அமைப்புக்குத் தேவையான பணத்தை திரட்டிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட வேன்டும்.

மேம்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள்!

இந்தியாவில் மேற்கொள்ளப் படும் ஒட்டுமொத்த முதலீட்டில் எஃப்ஐஐ மற்றும் எஃப்டிஐ-ன் முதலீடு இதுவரை 8 சதவிகிதத்தை தாண்டியதில்லை. மீதமுள்ள 92 சதவிகித முதலீடும் உள்நாட்டு சேமிப்புகளில் இருந்துதான் வருகிறது. இந்த உள்நாட்டு சேமிப்பில், கிட்டத்தட்ட 75% குடும்ப சேமிப்பிலிருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிதி அமைச்சகம் புரிந்துகொண்டு, இந்த பட்ஜெட் டில் உள்நாட்டு சேமிப்பாளர் களுக்கு வரிச் சலுகை வழங்குவதற் கான திட்டங்களை முடிவெடுக்க வேண்டும். எனவே, 80சி வரி விலக்கு சேமிப்பு வரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க வேண்டும். தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும்.

மேலும், உலக நிதி சந்தைகளில் புழங்கும் ஓய்வூதிய நிதி மட்டுமே சுமார் 18 டிரில்லியன் டாலர் ஆகும். எனவே, இந்திய அரசு அந்நிய நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் போக்குக்கு சாதகமாக செயல்படாமல், இத்தகைய பெரும் நிதியை இந்தியாவுக்குள் கொண்டு வரும் முதலீட்டுத் திட்டங்களில் நிதி அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நாம் நம்முடைய அரசியல் சூழ்நிலைகளை முடிந்தவரை நமக்கு சாதகமானதாக மாற்றி அமைக்க வேண்டும்.

டிவிடெண்ட்டுக்கு வரி!

இந்தியாவில் பல தனி நபர்கள் டிவிடெண்ட் மூலமாக மட்டுமே ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை சம்பாதித்து வருகின்றனர். ஆனால், இந்த டிவிடெண்ட் வருமானத்துக்கு  இதுவரை எந்தவித வரியும் விதிக்கப்படுவதில்லை. பல வளர்ந்த நாடுகளில் டிவிடெண்ட்டுக்கு வரி விதிக்கப்படுகிறது. பெரும்பாலும் நன்கு பணம் படைத்தவர்கள்தான் அதிகபட்சமான டிவிடெண்ட்  பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நிறுவனங்களின் புரமோட்டர்களாகவோ அல்லது அதிக சம்பளம் வாங்குபவராகவோதான் உள்ளனர். இதற்கு வரி ஏதும் இல்லாததால் இவர்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். எனவே, இந்த பட்ஜெட்டில் டிவிடெண்ட் வருமானத்துக்கு குறைந்தபட்ச வரம்புக்கு மேல் உள்ள தொகைக்கு 30% வரை வரி விதிக்க வேண்டும்.

என்ஜிஓ-களிடம் புழங்கும் வெளிநாட்டுப் பணம்!

இந்தியாவில் உள்ள என்ஜிஒ-களுக்கு வெளிநாடுகளிலிருந்து பெரும்பணம் நிதியாக கிடைக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி என்ஜிஒ-களுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 40,000-க்கும் மேலான என்ஜிஓ-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பாதிபேர்கூட தங்கள் நிதி நிலை அறிக்கைகளை முறையாகத் தாக்கல் செய்வதில்லை. வெளிநாடுகளிலிருந்து இந்திய மக்களுக்காக என்ஜிஒ-கள் மூலம் வரும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் போவதால், இந்த என்ஜிஓ-களை முறைப்படுத்தும் வகையில் அரசு சட்டங்களை இயற்ற வேண்டும். மேலும், இங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் சமூக நலனுக்காக கட்டாயம் ஒதுக்கவேண்டிய நிதியை என்ஜிஒ-கள் பெறும் வகையிலும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

கறுப்புப் பணத்தை ஒழிக்க!

இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நிர்ணயித்துள்ளது போல உள்நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தையும் வெளிக்கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு வருடத்தைக் கடந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக வைத்திருந்தாலும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் கையில் இருந்தாலும் (இந்தப் பணம் எதன் மூலமாக வந்தது என்று வருமான வரித்துறை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லாமல்) அது குற்றமாகப் பதிவு செய்யப்படும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.

மேலும், சில தெரிந்த மற்றும் தெரியாத ஆதாரங்கள் மூலம் இந்தியாவுக்கு நிதி ஆதரவு கிடைத்து வருகிறது. இவற்றில் எஃப்ஐஐ/எஃப்டிஐ/எஃப்சிஆர்ஏ, ஏற்றுமதிக்கு பணம் அனுப்புதல் மற்றும் ஹவாலா டீலர்கள் மூலம் நடக்கும் பரிமாற்றம் என அனைத்தும் சரியானவைதானா எல்லாவற்றையும் கண்காணிக்க முடியாவிட்டாலும், இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து நிதி சார்ந்த வழிகளையும் கண்காணிக்க நிதி ஆணைக்குழு ஒன்றை ஏற்படுத்தித் தரவேண்டும்.

பணம் காய்க்கும் மரங்கள்!

நம் நிதி அமைச்சகத்துக்கு பெருமளவு நிதியைச் சேர்க்கும் வகையிலான வழிகள் பல உள்ளன. நம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம், வரி இல்லா வருவாயாக சுமார் ரூ.1,00,000 கோடிக்கும் மேல் திரட்ட முடியும். மேலும், செயல்படாத அரசு நிறுவனங்களை நிறுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைக்கலாம்.

(விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் (VIF) என்கிற இணையதளத்தில் பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்  எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது!)

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick