லாபத்தைப் பெருக்க கைகொடுக்கும் சோலார் பவர்!

சிஏ.ஜி.என்.ஜெயராம் ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ்.

ம்ம ஊர்ல வருஷத்துக்கு ஒன்பது மாசம் வெயில் கொளுத்துது என்று புலம்புகிறவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! கொளுத்தும் வெயிலை ஒரு  சாபக்கேடாக இல்லாமல் பெரியதொரு  வரமாக மாற்ற வந்துவிட்டது சூரிய ஒளி மின்சாரம்.

இந்திய நாட்டின் மின் பற்றாக்குறையைப் போக்கவல்ல சூரிய ஒளி மின்சாரம் நமது நாட்டுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் வெவ்வேறு திட்டங்களின் மூலம் பெரிதும் ஆதரிக்கப்பட்ட சூரிய ஒளி மின்சார உற்பத்தி இன்னும் ஆறு ஆண்டுகளில் 175 ஜிகா வாட்டை எட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் ஜேஎன்என்எஸ்எம் (JNNSM) திட்டத்தின் இலக்காகும்.

ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சார உபகரணம் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 15-லிருந்து 16 லட்சம் யூனிட்டுகள் உற்பத்தி செய்யவல்லது. இவ்வாறு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நிறுவனங்கள் தங்கள் சொந்த தொழில் உபயோகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை உபயோகப்படுத்தும் வாய்ப்பு இல்லாமல் இருந்தால் அரசுக்கு அதனை விற்றுவிட முடியும்.

இவை அல்லாமல் இந்த மின்சாரத்தை  தொழில் செய்யும் உயர் அழுத்த இணைப்பு இருக்கக்கூடிய  ஒரே குழுமத்தில் உள்ள  தனியார் நிறுவனங்களுக்கும் சந்தை விலையில்  விற்க முடியும்.

லாபம் தரும் சூரிய ஒளி!

சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01-க்குப் பெற்றுக் கொள்ளும் திட்டம் தமிழ்நாட்டில் மார்ச்  2016 வரை அமலில் இருக்கிறது.  இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டபோது ஒரு மெகாவாட் உபகரணம் சுமாராக ரூ.7.50 கோடியாக இருந்தது.  படிப்படியாக இந்த முதலீட்டுத் தொகை குறைந்து, தற்போது சுமார் ரூ. 5.50 கோடி ஆக உள்ளது.  ஆனால், மின்சாரத்தின் கொள்முதல் விலை அதே ரூ. 7.01- ல் இருப்பதால் இதனுடைய லாபம் மிகவும் உயர்ந்துள்ளது.

அரசு  நிறுவனமான என்டிபிசி இவ்வாறு  உற்பத்தியாகும் மின்சாரத்தை ரூ.4.34-க்கு  கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய சூழ்நிலையில் சூரிய ஒளி மின்சாரத்தை மிக அதிக விலைக்குக் கொள்முதல் செய்யும் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம் ஒன்றுதான்.

திட்டமிடல் தேவை!

சூரிய ஒளி மின்சாரமானது  சூரிய ஒளியைப் பொறுத்தே அமையும் என்பதால் இதனை பகல் நேரத்தில் மட்டுமே (அதாவது, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உற்பத்தி செய்ய முடியும்.  சமீப காலங்களில் தொழிற்கூடங்களின் கூரை மேல் நிர்மாணிக்கப்படும் சோலார் ப்ளான்ட் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதை அரசாங்கத்தின் தொகுப்புக்குள் (Grid) செலுத்தாமல்  மின்சாரத்தை தாங்களே நேரடியாக பயன்படுத்திக் கொள்வதால், முதலீட்டுத் தொகையும் குறையும்.

உதாரணமாக, ஒரு நட்சத்திர ஓட்டலானது பகல் நேரத்தில் தயாரிக்கும் மின்சாரத்தை  அரசு மின் தொகுப்புக்கு  (Grid) தந்து விட்டு, இரவு நேர பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை மின் வாரியத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.  இதுவே ஒரு கல்வி நிறுவனமாக இருந்தால், பகல் நேரத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.  

நிதி மற்றும் வரிச் சலுகைகள்!

வருமான வரிச் சட்டத்தின் கீழ் சூரிய ஒளி உபகரணத்துக்கு  முடுக்கப்பட்ட தேய்மானச் செலவு (Accelerated Depreciation) வழங்கப்படுகிறது. இதனால் அதிக லாபமீட்டும் நிறுவனங்கள் பெரிய அளவில் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். ஆனால், இவ்வாறு கிடைக்கும் அதிகப்படியான தேய்மானக் கழிவை பெறும் நிறுவனங்களுக்கு அரசு மின்சாரக் கொள்முதல் விலை சற்றுக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, சூரிய ஒளியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம் ஈட்டப்படும் லாபத்துக்கு  10 வருட காலத்துக்கு முழு வருமான வரிக் கழிவு பிரிவு    80IA-ன் கீழ் உண்டு.

ஒரு நடுத்தர தொழில் நிறுவனம் ஆண்டொன்றுக்கு ரூ. 5 கோடி லாபம் ஈட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்டுக்கு இந்த நிறுவனம் வருமான வரியாக ரூ.1.50 கோடி கட்ட வேண்டியிருக்கும். இந்த நிறுவனம் 2 மெகாவாட் சோலார் ப்ளான்ட்டுக்கு ரூ. 11 கோடிக்கு இந்த மார்ச் மாத இறுதிக்குள் நிறுவினால், அதற்கு தேய்மானக் கழிவாக ரூ. 5.50 கோடி அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும். இதன் மூலம் அந்த நிறுவனம், இந்த ஆண்டுக்கு வருவான வரி மூலமாக ரூ.1.50 கோடி மிச்சப்படுத்த முடியும். 

இந்தத் தொகையை முதலீட்டுத் தொகையிலிருந்து கழித்தால், 2 மெகாவாட் சோலார் ப்ளான்ட்-ன் முதலீடு ரூ.9.50 கோடி (11-1.50) ஆகும்.  இதைத் தவிர, அடுத்த ஆண்டில் தேய்மானக் கழிவின் மூலம் இந்த நிறுவனம் மேலும் ரூ. 1.65 கோடி வருமான வரியை மிச்சப்படுத்த முடியும்.

சூரிய  ஒளி மின்சாரத்தின் பல  சிறப்பு அம்சங்கள் காரணமாக இந்த முதலீட்டுக்கு  என்சிஇஎஃப் (NCEF), க்ரீன் பாண்டுகள் (GREEN BONDS), விஜிஎஃப் (VGF) போன்ற திட்டங்கள் மூலம் இலகு கடன்கள் (Soft Loan) மற்றும்  முதலீட்டு மானியங்கள் வழங்கப்படுகின்றன. என்சிஇஎஃப் திட்டத்தின் கீழ் ரூ.17,000 கோடியும். விஜிஎஃப்  திட்டத்தின் கீழ் ரூ.5,050 கோடியும் இத்தகைய முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும், அதிகப்படியாக மின்சாரம் உபயோகிக்கும் தொழில்கள் ஒரு குறிப்பிட்ட அளவு (உபயோகத்தில் 6%) சூரிய ஒளி மின்சாரம் கட்டாயமாக உபயோகிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத தொழில்கள் சந்தையிலிருந்து கட்டாயமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ் (REC) வாங்க வேண்டும். இதற்கு சோலார் பர்சேஸ் ஆப்லிகேஷன் (Solar Purchase Obligation (SPO) என்று பெயர். சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்கள் இதன் மூலம் யூனிட் ஒன்றுக்கு  ரூ.3.50-லிருந்து ரூ.5.80வரை பெற முடியும்.

மின்சாரத்தை  அரசாங்கத்திடம் விற்காமல்  தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் இதர தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நிறுவனங்கள் மட்டுமே இந்த லாபத்தை அடைய முடியும், மேற்கூறப்பட்ட வருமான வரிச் சலுகைகளைக் கொண்டு சரியான  முறையில் முதலீட்டு அமைப்பைத் திட்டமிட்டால், சூரிய ஒளி  மின்சக்தித் திட்டத்தில் இருந்து கிடைக்கப் பெறும் முதலீட்டுக்கான உள்ஈட்டு வருவாய் (Internal Rate of Return on equity)-ஐ 40 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கும். இதில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை 2.5 ஆண்டுகளில் திரும்பப் பெற இயலும் (Pay Back Period).

இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில், நாம் முழு ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிலை செய்தால்,  சராசரியாக உள்ஈட்டு வருவாய் (IRR) 20% என்றும், முதலீட்டினை திரும்பப் பெறும் காலம்  சராசரியாக 4 வருடங்கள் என்றும் கொள்ளலாம். நேரடி மேலாண்மை தேவைப்படாத இந்த மின் உற்பத்தி தொழிலில் சரியான முறையில் முதலீட்டை மேற்கொண்டால், அபரிமிதமான  லாபம் கிடைக்கும். இந்த உபகரணத்தின் பயனுள்ள வாழ்நாள் 25 வருடங்களாகும்.

வீடுகள்,  அலுவலகங்கள்  மற்றும்  இதர  குறைந்த அழுத்த இணைப்புகள்  கொண்ட  இடங்களுக்கு  இந்த  சூரிய ஒளி  மின்சாரத்தை கூரை மேல்  நிறுவ  முடியும். ரூ.10 லட்சத்துக்குள் முதலீடு செய்தால், 10 - 11 கிலோ வாட்  உபகரணத்தை நிறுவ  முடியும். இதற்கு மத்திய அரசின் மானியம்  கிடைக்கும். அவ்வாறு கிடைக்கப் பெறும் மின்சாரத்தை உபயோகம் போக மீதமுள்ளதை அரசுக்கு விற்றுவிட முடியும். இதனால் விடுமுறை நாட்களில் உற்பத்தியாகும் மின்சாரம் வீணாகாமல் தடுக்கலாம்.

நம்முடைய விலை மதிப்பிட முடியாத நேரத்தை எடுக்காமலேயே லாபத்தை மட்டும் அள்ளிக் கொடுப்பதுடன் நம் சந்ததி யினருக்கும் விட்டுச் செல்லக்கூடிய தொழிலாக இதைக் கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick