நாணயம் லைப்ரரி: வீட்டிலும் வேலையிலும் சூப்பர்மேன் ஆக்கும் சூத்திரங்கள்!

புத்தகத்தின் பெயர் : த ஸ்வீட் ஸ்பாட் (The Sweet Spot)

ஆசிரியர் : கிரிஸ்டைன் கார்ட்டர்

பதிப்பாளர் : Random House Publishing Group

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம்  கிரிஸ்டைன் கார்ட்டர் என்ற பெண்மணி எழுதிய  ‘த ஸ்வீட் ஸ்பாட்’ எனும் பணியிடத்திலும் வீட்டிலும் நம்முடைய உருப்படியான செயல்களை மேற்கொள்ள செயல்திறனை (புரடக்டிவிட்டியை ) அதிகரிப்பது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தை.

செயல்திறன் அதிகரிப்பு என்றவுடனேயே அட, இது நம்மைக் கடுமையாக உழைக்கச் சொல்லும் புத்தகமாக இருக்குமோ என்ற எண்ணம் வரக்கூடும். அந்த மாதிரி யோசனை எதையும் சொல்லவில்லை என்பதுதான்  இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு. நிறைய ஓய்வுநேரங்களையும், நமக்கு பிடித்தவற்றையும் செய்த பின்னரும் புரடக்டிவ்-ஆக இருப்பது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம் இது. 

முதலில் மன அழுத்தத்துடன் வாழ்வதிலிருந்து ஆனந்தமாய் வாழ ஆரம்பிக்கும் ஆரம்பப்புள்ளி  எது என்று ஆரம்பித்து சோர்வையும் ஏக்கத்தையும் மாற்றி செயல்திறனை சந்தோஷத்துடன் அதிகரிப்பது எப்படி என்பதையும் சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஒரு மருத்துவர், ஆறே மாதம்தான் உயிருடன் இருக்கப் போகிறார் என்கிற நிலையில் என்னென்ன செய்ய நினைப்பீர்கள் என்று அவரிடம் கேட்டதை நினைவு கூர்ந்து ஆரம்பிக்கிறார் ஆசிரியை.

ஆறு மாதத்துக்குள் என்ன செய்யவேண்டும், யாரிடமெல்லாம் பேசவேண்டும், யாரையெல்லாம் சென்று பார்க்கவேண்டும், மீதமிருக்கும் நேரத்தை எப்படியெல்லாம் செலவழிக்கவேண்டும் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது என்றாராம் அந்த டாக்டர். 

எல்லோரும் இறக்கவே போகிறோம். சிலர் சீக்கிரமாகவும், சிலர் கொஞ்சநாள் கழித்தும் இறப்பார்கள். இந்த உலகில் பிரச்னையே உண்மையாகவே வாழ்வதுதான் என்கிறார் ஆசிரியை. நான் ஏதோ பிரச்னையில் இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். செளகரியமாகவே இருக்கிறேன் என்று நினையுங்கள்.

ஆனாலும், ஓடுகிற ஓட்டமும் ஆடுகிற ஆட்டமும் நிறைய மன அழுத்தத்தையல்லவா கொண்டு வந்துவிடுகிறது என்கிறார் ஆசிரியை. சரி, மன அழுத்தம் வேண்டாம் என்றால் கொஞ்சம் ப்ரேக் எடுத்து பிடித்ததைச் செய்ய நினைத்தால் பயமாகவல்லவா இருக்கிறது? மூச்சு விடவே நேரமில்லாமல் ஓடுகிற பிழைப்பில் ப்ரேக்கா, அப்படீன்னா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன் என்கிறார் ஆசிரியை.

இன்றைக்கு நாம் எல்லோருமே எல்லோரிடத்திலும் கேட்கும் கேள்வி, எப்படி இருக்கீங்க என்பதுதான். நல்லாருக்கேன் என்று சொல்பவர்களைவிட பிசியா இருக்கேன் என்று சொல்பவர்கள்தானே அதிகமாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.

சீன மொழியில் பிசி என்பதற்கான குறியீடு இதயம் மற்றும் கொல்லுதல் என்ற இரண்டு குறியீடுகளைச் சேர்ந்து வருவதாம். அதாவது, பிசியாய் இருந்தால் இதயத்தை கொல்வதற்கு சமமான வேலைகளைத்தானே செய்கிறீர்கள் என்கிறார் ஆசிரியை. இதற்கு மாற்றாக ஆலிவ் மரங்களின் பாணியை பின்பற்றினால் நமக்கு முழு வெற்றி கிடைக்கும் என்கிறார்.

ஆலிவ் மரம் ஒரு வருடம் பூ பூத்து காய் காய்த்துக்கொட்டும். அடுத்த வருடம் வளர்ச்சியை மட்டுமே முன்நிறுத்தி நிறைய கிளைகள் விடும். போனால் போகிறது என்று  கொஞ்சம் பூ, காய் என்பவற்றையும் தரும். ஆலிவ் மரத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த முக்கிய குணாதிசியம்தான் என்கிறார் ஆசிரியை.

ஆண்டு முழுக்க இதை செய்ய முடியாவிட்டாலும் ஒவ்வொரு நாளிலும் 60 முதல் 90 நிமிட நேர தொடர் வேலைக்குப் பின்னால் ஒரு சிறிய ரெஸ்ட்டை எடுத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்ததைச் செய்யுங்கள் என்கிறார் ஆசிரியை.

கோபம், பயம் மற்றும் ஏனைய நெகட்டிவ் எமோஷன்கள் எல்லாம் நம்முடைய இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கக் கூடியவை. நன்றியறிதல், இரக்கம், பிரமிப்பு, அன்பு போன்ற பாசிட்டிவ் எமோஷன்கள் எல்லாம் நம் இதயத்துடிப்பின் வேகத்தை குறைக்கக்கூடியவை.  அதனாலேயே பாசிட்டிவ் எமோஷன்களைத் தூண்டும் விஷயங்களை நாம் அவ்வப்போது செய்துவரவேண்டும் என்கிறார் ஆசிரியை.

மனதைப் பெரிதுபடுத்தினால் சந்தோஷம் வரும். சந்தோஷம் என்பது வரும் நேரத்தில் நம்முடைய புரடக்டிவிட்டி என்பது வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது என்கிறார் ஆசிரியை.  ஒரு மடங்கு சந்தோஷத்துக்கு  மூன்று மடங்கு துக்கம் என்ற நிலையில் இருக்கும் நபர்கள் அனைவருமே வேலையில் கருத்தில்லாமலும், மிகுந்த மன அழுத்தத்துடனும், மனைவியுடன் சண்டையிட்டுக்கொண்டுமே இருக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். இந்த நிலையை குறைத்துக்கொண்டாலே மாறுதல்கள் தானே வரும் என்கிறார் ஆசிரியை.

 இந்த ரேஷியோவை எப்படி மாற்றுவது என்பதற்கான  வழிகளையும் சொல்லியுள்ளது இந்தப் புத்தகம். பாசிட்டிவ் எண்ணங்களைத் தரும் விஷயங்களை தேடிக் கண்டுபிடித்து மெனக்கெட்டு செய்வது என்பதுதான் முதல் விதி.

நன்றியறிதல் (நமக்கு உதவியவர்களுக்கு நன்றியை சொல்லுதல்) என்பது மனதில் பாசிட்டிவ் எமோஷன்களை வளர்க்க வல்லது.  உங்களுக்கு உதவியவர்களை மெனக்கெட்டு சென்று நன்றிகளைச் சொல்லுங்கள். வெளியூரில் இருக்கிறாரா? நல்லதொரு மெயிலை எழுதி அனுப்புங்கள் என்கிறார் ஆசிரியை.

அடுத்தபடியாக, நமக்கு உத்வேகம் அளிக்கும் விஷயங்களை கண்டறிந்து அவற்றை செய்தல் என்று சொல்கிறார் ஆசிரியர். ஆச்சரியமூட்டும் விஷயங்கள்,  மனிதர்கள் ஏன் பெரிய அறிஞர்கள் சொன்ன விஷயங்களின் மேற்கோள்களை படிப்பதன் மூலம்கூட நாம் உத்வேகம் அடையலாம் என்கிறார் ஆசிரியை.

அடுத்தபடியாக ஆசிரியை சொல்வது, எதிர்காலத்தைப் பற்றி கனவு காண்பதை;   எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை அல்ல. எதிர்காலம் பற்றிய கனவு என்பது பாசிட்டிவ் எமோஷன்களை தூண்டும் ஒரு முக்கிய காரணியாகும். அதனால் எதிர்கால கவலைகளை விட்டொழித்து எதிர்காலம் குறித்த கனவுகளை வளர்த்தெடுங்கள் என்கிறார் ஆசிரியர். இந்தப் பயிற்சியில் இரண்டு நிலை உள்ளது. எதிர்காலத்தைப் பற்றி நினைத்தல்  மற்றும் நினைத்ததைப் பேசுதல் என்பதாகும் அவை. இந்த இரண்டையும் செய்தால் மனதில் பாசிட்டிவ் எமோஷன்கள் பெருகும் என்கிறார் ஆசிரியை.

கடைசியாக ஆசிரியை சொல்வது, கொஞ்சம் சிரிங்கப்பா என்று. சிரிப்பு என்பது மிகப் பெரிய பாசிட்டிவ் எமோஷனைத்தூண்டும் விஷயமாகும். வாய் விட்டு சிரிக்கும்போது உடலுக்குள் நிகழும் ரசாயன மாற்றங்கள் மூளையை உற்சாக நிலைக்குத் தள்ளும் சக்திகொண்டவை என்கிறார் ஆசிரியை.

நம்முடைய மூளையின் செயல்பாட்டை தெரிந்துகொண்டால், அது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். நம்முடைய நடவடிக்கைகளில் 95%  நம்முடைய நனவிலி மனமே (Unconscious mind)கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. உதாரணத்துக்கு,  வாகனம்  ஓட்டிக்கொண்டே மற்றொருவருடன் பேசுவது, ஒரு சிக்கலான சூழலில் சண்டை போடுவதா, ஓட்டம் பிடிப்பதா என்பதை முடிவு செய்வது, மொக்கையான ஜோக்கை கேட்டால் கூட இதற்கு போய் சிரிக்கவேண்டுமா என நினைக்காமல் உடனடியாக சிரிப்பது போன்ற விஷயங்கள் இந்த நனவிலி வகையாகும்.

நம்முடைய பழக்கங்கள் பலவும் இந்த நனவிலி மனதுக்கு உடனடியாக மாற்றப்பட்டுவிடுகிறது. மீதமிருக்கும் ஐந்து சதவிகித செயல்பாடுகளே கான்ஷியஸாக சிந்தித்து செயல்படும் விஷயங்களாகும். இந்த 95% என்பது ஒரு யானையைப் போன்றது. அது பாட்டுக்கு போகிற போக்கில் மட்டுமே போக எத்தனிக்கும். மீதமிருக்கும் 5%  என்பது யானையின் பாகனைப்போன்றது. யானை விஷயத்தில், பாகனால் யானையின் போக்கை மாற்ற முடிகிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். எப்படி முடிகிறது, யானையை பாகன் எக்கச்சக்கமான நேரத்தையும் முயற்சியையும் செய்து பழக்குகின்றான். எனவே, பழக்கவேண்டியது யானையை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

நம் வாழ்வின் பெரும்பாலான சமயம் நாம் பாகனிடம் சரி விடுப்பா, யானை கொஞ்சம் முரட்டுத்தனமாத்தான் இருக்குது. அது போக்கில் விட்டுவிடு என சொல்லிவிடுகிறோம். இதை மாற்றி பழக்கம் என்ற யானையை நம்முடைய எண்ணத்துக்கு  ஏற்றாற் போல் எப்படி மாற்றி அமைப்பது என்பது குறித்த செயல் அட்டவணையையும் இந்தப் புத்தகம் தருகிறது.

பிசியாய் இருக்கிறேன் என்று சொல்லும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

-நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப்  புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)


இன்டர்நெட் பயன்பாடு: 5-வது இடத்தில் தமிழகம்!

இன்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்தும் இந்திய மாநிலங்கள் எவையெவை என்பதை சொல்லும் குறியீட்டை (Index) இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தற்போது வெளியிட்டுள்ளது. இந்தக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. கர்நாடகா மற்றும் குஜராத் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நான்காவது இடத்தில் தெலங்கானாவும் ஐந்தாவது இடத்தில் தமிழகமும் இடம்பெற்றுள்ளன. ஆன்லைனில் மக்களின் பங்கேற்பை அடிப்படையாக வைத்து இந்தக் குறியீடு உருவாக்கப்படுகிறது. இன்டர்நெட் பயன்பாட்டில் தமிழகம் இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick