சரியான திட்டங்கள்... சக்சஸ் ஃபார்முலா!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

சிலர் தங்களின் வரவு செலவு கணக்குகள், சேமிப்பு, முதலீடு என எல்லாவற்றிலும் பக்காவாக செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால், எதிர்காலத் தேவைக்கு ஏற்ப செய்கிறோமா என்ற கேள்வி அவர்களுக்கு இருக்கவே செய்யும். முறையான நிதித் திட்டமிடலே அதற்கு தீர்வுகளைத் தரும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் ஜி.தியாகராஜனும் சரியாகத் திட்டமிட்டு சரியாகச் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் முறையான ஆலோசனையுடன் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நமக்கு மெயில் அனுப்பியிருந்தார். அவருடன் பேசினோம்.

‘‘என் சொந்த ஊர் லால்குடி. பிஹெச்.டி முடித்திருக்கிறேன். எனக்கு வயது 38. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை ஆராய்ச்சி மையம் தஞ்சாவூரில் உள்ளது. இப்போது அங்குதான் பணியாற்றி வருகிறேன். அப்பா, ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பெற்றோர் சொந்த ஊரில் இருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக அவர்கள் யாரையும் சார்ந்து இல்லை. ஆனாலும் என் மன திருப்திக்காக மாதம் ரூ.7,000 தந்து வருகிறேன்.

என் மனைவி கெளதமி எம்.ஏ., எம்.பில். படித்திருக்கிறார். குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். எங்கள் மகன்       நந்த கிஷோருக்கு ஐந்து வயது. மகள் ஜான்விக்கு இரண்டு வயது. லால்குடியில் சொந்த வீடு இருக்கிறது. கோவைக்கு பணிமாற்றம் ஆகும் வாய்ப்பு இருப்பதால், கோவையில் சொந்த வீடு கட்டியுள்ளேன். கடந்த வருடம் ரூ.25 லட்சத்துக்கு 20 வருடம் இ.எம்.ஐ செலுத்தும் வகையில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். இப்போது தஞ்சாவூரில் அலுவலகக் குடியிருப்பில் இருக்கிறோம்.

எனக்கு ரூ.75 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் உள்ளது. ரூ.6 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி உள்ளது. அவசரகால நிதியாக ரூ.1.25 லட்சம் கையில் வைத்துள்ளேன்.  ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4,000 வரை சம்பள உயர்வு இருக்கும். செல்வமகள் திட்டத்தில் மாதம் ரூ.500 முதலீடு செய்து வருகிறேன்.

எனக்கு பெரிய அளவிலான இலக்குகள் எதுவும் இல்லை. சராசரியாக எல்லோருக்குமான பொதுவான இலக்குகள்தான் எனக்கும். என் வரவு செலவு விவரங்களையும், சேமிப்பு முதலீடு மற்றும் என் தேவைகளை குறிப்பிட்டுள்ளேன். தகுந்த மாற்றங்கள் செய்துகொடுத்தால் பயனுடையதாக இருக்கும்’’ எனக் கோரிக்கை வைத்தார்.

இனி இவருக்கான நிதித் திட்டமிடலை தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

‘‘மிஸ்டர் தியாகராஜன்... உங்கள் இலக்குகள் அனைத்துமே மிக முக்கியமானவை. எதையும் விட்டுவிட முடியாது. எல்லா இலக்குகளுக்கும் முன்னுரிமை தந்தாக வேண்டும். உங்கள் இலக்குகள் அனைத்துக்கும் மாதம் ரூ.28,000 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதற்கு இன்னும் ரூ.17,000 கூடுதலாக முதலீட்டுக்கு தொகை ஒதுக்க வேண்டும். ஆனால், இப்போதைய நிலையில் இது சாத்தியமில்லை. அட்டவணையில் நான் குறிப்பிட்டிருக்கும் தொகையுடன் வருடத்துக்கு 10% அதிகரித்துக்கொண்டால், எல்லா இலக்குகளையும் எளிதில் அடைய முடியும். உங்களுக்கு இருக்கும் சம்பள உயர்வு அதற்கு கைகொடுக்கும்.   

உங்கள் மகனுடைய மேற்படிப்புக்கு மாதம் ரூ.6,000-ல் முதலீட்டைத் தொடங்கவும். ஆண்டுக்கு 10% அதிகரித்துக்கொண்டால், 12% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாகவேகூட  தேவையான தொகை கிடைத்துவிடலாம். எந்தக் கவலையும் இல்லாமல் மேற்படிப்புக்கு செலவு செய்யலாம். 

உங்கள் மகனுடைய திருமணத்துக்கு அடுத்த 22 வருடங்களில் ரூ.50 லட்சம் தேவை என கேட்டுள்ளீர்கள். அதற்கு மாதம் ரூ.3,900 முதலீடு செய்ய வேண்டும். இது சாத்தியமில்லை என்பதால், ரூ.1,750 -ல் முதலீட்டை ஆரம்பித்து படிப்படியாக வருடம் 10% அதிகரித்துக்கொள்ளுங்கள். அப்படியும் ரூ.3.5 லட்சம் பற்றாக்குறை இருக்கக்கூடும். உங்கள் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் சூழலில் இதனை சமாளித்துக்கொள்ளலாம். 

உங்களுடைய மகள் பெயரில் செல்வமகள் திட்டத்தில் செய்யும் முதலீட்டின் மூலம் ரூ.2 லட்சம் மட்டுமே கிடைக்கும். உங்கள் மகளின் மேற்படிப்புக்கு இன்னும் ரூ.38 லட்சம் தேவை.  அதற்கு மாதம் ரூ.7,600 முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் ரூ.4,600 முதலீடு  செய்ய ஆரம்பித்து, ஆண்டுக்கு 10% அதிகரித்துக்கொள்வதன் மூலம் இந்தத் தொகையை பெறமுடியும். இதேபோன்று  ரூ.2,670 -ல் முதலீட்டை ஆரம்பித்து வருடத்துக்கு 10% அதிகரிப்பதன் மூலம் உங்கள் மகளின் திருமணத்துக்கான தொகை ரூ.60 லட்சத்தை அடுத்த 21 வருடங்களில் பெறமுடியும்.

உங்களுடைய ஓய்வுக்காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ.88,000 தேவையாக இருக்கும். அதற்கான கார்பஸ் தொகையாக ரூ.2.43 கோடி தேவை.  பி.எஃப் மூலமாக உங்களுக்கு ரூ.2.1 கோடி கிடைக்கும். பற்றாக்குறைக்கான தொகைக்கு மாதம் ரூ.1,800 முதலீடு செய்ய வேண்டும்.

தற்போது எஸ்ஐபி மூலம் முதலீடு செய்துவரும் 7,000 ரூபாயை உங்கள் மகளின் மேற்படிப்பு மற்றும் உங்கள் ஓய்வுக்காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும். ஜீவன் ஆனந்த் பாலிசி கிடைக்கும் முதிர்வுத் தொகை ரூ.1.4 லட்சத்தை உங்கள் மகன் திருமணத்துக்கு பயன்படுத்திக்கொள்ளவும். நீங்கள் எடுத்துள்ள டேர்ம் இன்ஷூரன்ஸ் போதாது. இன்னும் ரூ.25 லட்சத்துக்கு அதிகரித்துக்கொள்ளவும்.

அவசர கால நிதியாக ரூ.1.25 லட்சத்தை கையில் வைத்திருப்பதாக சொல்லியுள்ளீர்கள். அதனை லிக்விட் ஃபண்டில் போடவும். தேவையானபோது எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சரியாக திட்டமிட்டு, சக்சஸ் ஃபார்முலாவை புரிந்துகொண்டிருக்கிறீர்கள். தேவைக்கேற்ற முதலீட்டை செய்தால், நீங்கள் வளமாக வாழலாம்.

பரிந்துரை:

வெளியேற வேண்டிய ஃபண்டுகள்:  ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ஹெச் டி எஃப் சி டாப் 200, எஸ் பி ஐ எமெர்ஜிங் பிசினஸ் அண்ட் ஆக்ஸிஸ் ஃபோகஸ்டு 25 ஃபண்ட்.

முதலீடு செய்ய வேண்டிய ஃபண்டுகள்:        பி.என்.பி பரிபாஸ் மிட்கேப், ஐசிஐசிஐ ஃபோகஸ்டு புளுசிப், மிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ், டாடா பேலன்ஸ்டு, பிர்லா எம்.என்.சி ஃபண்ட். 

ஆல் தி பெஸ்ட் தியாகராஜன்”

* நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி (SEBI registered Investment Advisor- license no is – INA200000878)

படங்கள்: கே.குணசீலன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick