மந்த நிலையில் உலகப் பொருளாதாரம்... நிஃப்டி 6600 புள்ளிகளுக்கு கீழே இறங்குமா?

- ஓர் அலசல் ரிப்போர்ட்சி.சரவணன்

ந்தியப் பங்குச் சந்தை ஒரு நிலையற்ற தன்மையில் காணப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல ஏற்றத்தைக் கண்ட பங்குச் சந்தை இப்போது சறுக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சந்தை முடியும்போது, சென்செக்ஸ் 22986.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 6980.95 புள்ளிகளாகவும் இருந்தது. இந்த இறக்கம் இன்னும் தொடருமா, தொடரும் எனில், சந்தை இன்னும் எந்த அளவுக்கு கீழே இறங்கக்கூடும் என ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

சந்தையின் ஏற்ற - இறக்க வரலாறு!

‘‘இந்தியப் பங்குச் சந்தை எலியட்ஸ் வேவ் தியரிபடி, கிட்டத்தட்ட ஒவ்வொரு எட்டு வருடமும் கடுமையான இறக்கத்தை சந்தித்து வருகிறது. உதாரணத்துக்கு, கடந்த மூன்று எட்டு ஆண்டுகளை எடுத்து அலசுவோம். 1992-ம் ஆண்டில் சென்செக்ஸ் அதிகபட்ச புள்ளிகள் 4546-ஆக இருந்தது. இது 1993-ல் 1980 என்கிற குறைந்தபட்ச புள்ளிகளுக்கு இறக்கம் கண்டது. கடந்த 2000-ம் ஆண்டில் சென்செக்ஸ்-ன் உச்சபட்ச புள்ளிகள் 6150-ஆக இருந்தது. இது 2001-ல் 2594 என்கிற குறைந்தபட்ச புள்ளிகளுக்கு இறங்கியது. 2008-ம் ஆண்டில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 21206 புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது. அதே ஆண்டில் 7697 புள்ளிகளுக்கு இறக்கம் கண்டது’’ என்றவர் சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

‘‘அடுத்த ஏற்ற - இறக்கம் என்பது 2016-ம் ஆண்டில் வருவதற்கு பதில் முன்னதாக 2015-ம் ஆண்டிலேயே இந்தியப் பங்குச் சந்தையில் வந்துவிட்டது. 2015-ம் ஆண்டு மார்ச்சில் சென்செக்ஸ் இதுவரைக்கும் இல்லாத அளவாக 30024 என்கிற உச்சத்துக்கு சென்றது. நடப்பு 2016-ம் ஆண்டில் சென்செக்ஸ் எவ்வளவு இறங்கும் என இப்போது உறுதியாக எதையும் சொல்ல முடியாது” என்றவரிடம் இந்தியப் பங்குச் சந்தையின் இந்த இறக்கத்துக்கு என்ன காரணம் என்று கேட்டோம்.

சந்தை இறக்கத்துக்கு காரணங்கள்..!


‘‘சந்தையின் இப்போதைய இறக்கத்துக்கு இந்தியப் பிரச்னைகள் மட்டும் காரணம் அல்ல. உலகப் பிரச்னைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. முதலில் உலகப் பிரச்னைகளை அலசுவோம். உலக அளவில் பொருளாதார சிக்கல்கள் நீடிப்பதால், சர்வதேச அளவில் பெரும்பாலும் பங்குச் சந்தைகள் இறக்கத்தில் இருக்கின்றன. சீனாவில் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கி இருக்கிறது. மேலும், அந்த நாடு அதன் கரன்சியான யுவானின் மதிப்பை இன்னும் குறைக்கப் போகிறது. இது இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கும் விஷயமாக இருக்கும். ஐரோப்பா மற்றும் ஜப்பானில் பொருளாதார வளர்ச்சி இல்லை. அமெரிக்காவில் வட்டி விகிதம், குறைக்கப்படுமா என ஃபெடரல் ரிசர்வ்-ன் சேர்மன் ஜேனட் யெல்லெனிடம் கேட்கப்பட்ட போது, குறைக்க மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். இது இந்தியாவுக்கு நெகட்டிவ்-ஆன  விஷயம். அந்த வட்டி அறிவிப்பு வரும்போது சந்தை இன்னும் கூடுதலாக இறங்க வாய்ப்பு இருக்கிறது” என்றவரிடம், இந்தியாவில் என்ன பிரச்னை... என்று கேட்டோம்.

‘‘இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி சிக்கலுக்கு உரியதாக இருக்கிறது. முடிந்த 2015 டிசம்பர் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. பிப்ரவரி 11 வரைக்கும் வெளியான 2052 நிறுவனங்களின் நிதி நிலையை வைத்து பார்க்கும் போது, முந்தைய செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிட்டால், விற்பனை 2.2% இறக்கம் கண்டி ருக்கிறது. இதே காலகட்டத்தில் நிகர லாபம் சுமார் 20% வீழ்ச்சி கண்டிருக்கிறது. 2015 டிசம்பர் காலாண்டு முடிவுகளை, 2014 டிசம்பர் காலாண்டு முடிவுகளுடன் ஒப்பிட்டால், விற்பனை 2.81% குறைந்தும் நிகர லாபம் 4.77% அதிகரித்தும் காணப்படுகிறது.

இங்கே நிகர லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணம், கச்சா எண்ணெய், உருக்கு போன்ற மூலப் பொருட்களின் விலை இறங்கி இருப்பதுதான். அதே நேரத்தில், பொருளாதார மந்தநிலையால் விற்பனை வளர்ச்சி அல்லது வருமான வளர்ச்சி குறைந்திருக்கிறது. மேலும், கடன் வட்டிக்கான செலவு 7% அதிகரித்துள்ளது. இது வங்கிகள் வட்டியைக் குறைக்கவில்லை என்பதையும் நிறுவனங்களால் வட்டியை சரியாக கட்ட முடியவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது” என்ற ஏ.கே. பிரபாகரிடம் தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்டோம். 

சிறு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது..!

‘‘சந்தை இன்னும் இறங்கும் என்கிற நிலையில் சிறு முதலீட்டாளர்கள் புதிய முதலீட்டை மேற்கொள்ள ஏதுவாக ரொக்க கையிருப்பை அதிகரித்துக் கொள்வது நல்லது. அப்படி இல்லை என்றால் லிக்விட் அஸெட் என்கிற முறையில் விரைவாக பணமாக்கக்கூடிய லிக்விட் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இப்போதைய சூழலில் இந்தியப் பங்குச் சந்தையில் மொத்த முதலீடு லாபகரமாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, சந்தை இறங்க இறங்க கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டை மேற்கொண்டு வரலாம்.

அதுவும் சென்செக்ஸ், நிஃப்டி இண்டெக்ஸ் பங்குகளில் முதலீட்டை பிரித்து மேற்கொண்டு வருவது நல்லது. அல்லது நிஃப்டி பீஸ்களில் முதலீட்டை மேற்கொண்டு வருவது சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வதை தவிர்த்து, பரவலாக பல துறை பங்குகளில் முதலீட்டை செய்வது நல்லது. ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் கொஞ்ச காலத்துக்கு முதலீட்டை தள்ளிப் போடலாம்” என்றவர், எப்போது முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்.

‘‘இந்தியப் பங்குச் சந்தை எட்டு வருடங்களுக்கு ஒருமுறை அதிக வீழ்ச்சியை கண்டு வருகிறது என ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். இந்த காலகட்டங்களில் இண்டெக்ஸ்களின் பிரைஸ் டு ஏர்னிங் (பி.இ) என்பது அதிகமாக இருந்து வந்திருக்கிறது. உதாரணத்துக்கு நிஃப்டி குறியீட்டை எடுத்துக் கொண்டால்,, கடந்த 2000-ம் ஆண்டில் அதன் பி.இ 28 மடங்காக இருந்தது. 2008-ல் 24 மடங்காகவும், 2015-ல் 22 மடங்காவும் இருந்தது. இந்த காலகட்டத்தில் இபிஎஸ் வளர்ச்சியும் பெரிதாக இல்லை.

கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால், நிஃப்டி பி.இ சராசரி 16.8 மடங்காக இருக்கிறது. மீடியன் பி.இ 13.5 மடங்காக உள்ளது. நிஃப்டி பி.இ 16.8 மடங்கு என்பது புள்ளிகளில் சுமார் 6400 ஆகவும், 13.5 மடங்கு என்பது 5200 புள்ளிகளாகவும் இருக்கிறது.

தற்போது பிப்ரவரி 11-ம் தேதி நிலவரப்படி, நிஃப்டி பி.இ 18.33-ஆக உள்ளது. இண்டெக்ஸ் பி.இ 13 முதல் 14 மடங்குகளில் இருக்கும்போது செய்யும் முதலீடு நல்ல லாபகரமான முதலீடாக இருக்கும். நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ள இதனை நல்ல இடம் என்று சொல்லாம். இப்போதைய நிலையில் சென்செக்ஸ் 21000 புள்ளிகளுக்கும் நிஃப்டி 6300 புள்ளிகள் வரைக்கும் இறங்க வாய்ப்பு இருக்கிறது” என்று முடித்தார்.

சந்தையின் போக்கையும் முதலீட்டுக்கான இடத்தையும் நிபுணர் விளக்கிச் சொல்லிவிட்டார். இனி நீங்கள்தான் உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும்.

உயரும் தங்கம் விலை!


சர்வதேச சந்தையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை திடீரென   அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து காம்டிரென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம்.

‘‘கடந்த வாரம் மட்டும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 86 டாலர் அளவுக்கு உயர்ந்து, தொடர்ந்து 1,200 டாலருக்கு மேல் வர்த்தகமானது. அதிகபட்சமாக கடந்த வியாழன் அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,255 டாலர் வரை சென்றது. மேலும், கடந்த வியாழன் அன்று மட்டும் தங்கத்தின் விலை 5 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்தது. 2014 மார்ச் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் தங்கத்தின் விலை உயரத் துவங்கியுள்ளது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது, இந்தியப் பங்குச் சந்தை உள்பட உலக பங்குச் சந்தைகள் அனைத்துமே இறக்கத்தில் உள்ளன. இதனால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டில் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.

மேலும், கடந்த வருடம் அதிக வருமானம் தந்த முதலீடுகளில் தங்கம் இடம்பெற்றுள்ளது. கச்சா எண்ணெய்யின் விலையும் தொடர்ந்து சரிந்து வருவதால், கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துள்ளது. இந்தக் காரணங்களினால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

இது போன்ற பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். தவிர, அமெரிக்க டாலரின் வலிமையும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால், தங்கத்தின் விலை இன்னும் உயர வாய்ப்பு உருவாகும். ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1,300 டாலர் வரை உயரக்கூடும்’’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick