வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட் வேண்டும்!

ஹலோ வாசகர்களே..!

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட் வேண்டும்!

இந்த மாதத்தின் கடைசி நாளன்று (29-ம் தேதி) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இரு ஆண்டுகளுக்கு முன்பு நிதி அமைச்சர் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது அது இடைக்கால பட்ஜெட்டாகவே அமைந்தது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் அறிவிப்புகள் எதையும் எதிர்பார்க்க வழியில்லாமல் இருந்தது. கடந்த ஆண்டில் அவர் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகையை தந்ததுடன், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றையும் அறிவித்தார். அந்த அறிவிப்புகள் செயல்படத் தொடங்கி, நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காணும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

ஆனால், கடந்த ஒராண்டு காலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிப்பதற்குப் பதிலாக, குறைகிறது. சமீபத்தில் வெளியான 2015 டிசம்பருக்கான தொழில் துறைகளின் வளர்ச்சி விகிதம் (IIP) 2015 நவம்பருடன் ஒப்பிடும்போது 1.3% குறைந்துள்ளது. ஏற்றுமதியானது கடந்த 14 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.  புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் எதுவும் வரவில்லை. மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அதனால் சாதாரண மக்களுக்கு எந்த நன்மையும் விளைய வில்லை. ஆக, கடந்த இரு ஆண்டுகளாக வெகுஜன மக்களின் வாழ்வில் எந்த பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையை மாற்றும்  நடவடிக்கைகளை இந்த பட்ஜெட்டி லாவது நிதி அமைச்சர் எடுக்கவேண்டும். தொழில் துறை வளர்ச்சிக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் அறிவிக்கவேண்டும். புதிய தொழில்களை தொடங்குவதற்கான தடைகள் அனைத்தையும் உடைக்கும் வழிமுறைகளைக் காணவேண்டும். இதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவதுடன், உற்பத்தியாகும் பொருட்கள் உள்நாட்டிலேயே விற்கும் சூழ்நிலையையும் உருவாக்க வேண்டும். உலகப் பொருளாதார நிலை சரியில்லை என்று இன்னும் எத்தனை நாட்களை நாம் கடத்தப் போகிறோம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்