நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு... சரியான முதலீடு எது?

ஹர்ஷேந்து பிண்டால், தலைவர், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (இந்தியா).

முதுமை எல்லோருக்குமே வரத்தான் போகிறது. இளமையில் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் எல்லோருக்குமே முதுமையிலாவது, அதாவது ஓய்வுக் காலத்திலாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற கனவு கட்டாயம் இருக்கும். இதற்காகவே தங்களின் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்கிறோம்.

ஆனால், எதில் முதலீடு செய்ய வேண்டும், எது ஓய்வுக் காலத்துக்கு சரியான முதலீடு, கடன் சார்ந்த முதலீடா அல்லது ஈக்விட்டி சார்ந்த முதலீடா போன்ற குழப்பங்கள் எல்லோருக்கும் இருக்கும். இந்தக் குழப்பங்களுக்கான பதிலைப் பார்ப்போம்.

ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்யும்போது கடன் சார்ந்த முதலீட்டில் சேமித்து ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும் ஈக்விட்டி முதலீடு நீண்ட கால அடிப்படையில் அதிக லாபத்தை தரும் என்றும் ஓர் எண்ணம் நிலவுகிறது. மேலும், இந்த முதலீடு ஒருவர் ஓய்வு பெறும்போது பணவீக்கத்தைத் தாண்டி லாபத்தைத் தரும். பணவீக்கமானது தற்போதைய செலவு மற்றும் ஓய்வுக் கால செலவுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடுகிறது.

ஓய்வுக் கால முதலீட்டை லட்சியமாக்குங்கள்!

ஒருவர் தன்னுடைய ஓய்வுக் கால முதலீட்டை தன்னுடைய லட்சியமாக கருதி முதலீடு செய்ய வேண்டும். இதற்காக முதல் மாத சம்பளத்தில் இருந்தே வருங்கால வைப்பு நிதி (பிராவிடென்ட் ஃபண்ட்) சேமிக்க வேண்டும். மேலும், முதல் மாத சம்பளத்தில் இருந்தே மியூச்சுவல் ஃபண்டு மூலம் ஈக்விட்டிகளில் இதற்காக முதலீடு செய்ய தொடங்கிவிடலாம். எஸ்ஐபி எனப்படும் முறையான முதலீட்டு திட்டத்தின் (Systematic Investment Plans) மூலம் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் செய்யும் ஈக்விட்டி முதலீடு நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைத் தாண்டி அதிக லாபத்தைத் தரும்.

அதேபோல், நம்முடைய ஊதியம் உயர உயர, வருங்கால வைப்பு நிதி தொகைக்காக நாம் முதலீடு செய்யும் தொகையையும் நாம் கணிசமாக உயர்த்திக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், போனஸ் போன்ற கூடுதல் வருவாய் வரும்போது அதை அப்படியே செலவு செய்யாமல், அதனை ஓய்வுக் கால முதலீட்டில் சேமிப்பது உங்களுடைய லட்சியத்துக்கு மேலும் உரம் சேர்ப்பதாக அமையும். மேலும், ஈக்விட்டி சார்ந்த முதலீட்டு திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டுக்கு கிடைக்கும் வருவாய்க்கு வருமான வரிச் சட்டம் 1961, 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கும் வழங்கப்படுகிறது. இதனால் பிற முதலீடுகளைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ஓய்வுக் காலத்துக்கு எவ்வளவு தேவை?

ஓய்வுக் காலத்துக்கு நமக்கு எவ்வளவு தொகை தேவை என்று கணிப்பது கொஞ்சம் கடினமானதுதான். வேண்டுமானால் ஒருவர் தற்போது செய்யும் செலவுகளோடு தோராயமான பணவீக்க விகிதத்தைச் சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தால், நமக்கு சுமாராக எவ்வளவு தேவைப்படலாம் என்பதை நிர்ணயிக்க முடியும். அந்தத் தொகையைப் பொறுத்து ஒருவர் தனது மாதாந்திர முதலீட்டை திட்டமிட்டுக் கொள்ளலாம். ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த மாதாந்திர முதலீட்டை நிறுத்தக்கூடாது என்பதை ஒருவர் தன் மனதில் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தினால், ஓய்வுக் கால சேமிப்பைக் குறைத்துவிடும். மேலும், முறையான தொடர் முதலீடுகள் செய்யும்போதுதான், கூட்டு வட்டி அதிசயத்தினால் பணவீக்கத்தைத் தாண்டி அதிக லாபத்தை அடைய முடியும்.

முதலீட்டு பாதை எப்படி இருக்க வேண்டும்?

ஈக்விட்டி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டை பொறுத்தவரை, அது சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டவை என்பதால், மிக அதிக லாபத்தைத் தருவதாகவும், நஷ்டத்தைத் தருவதாகவும் இருக்கலாம். இந்த ஏற்ற இறக்கத்தை சமாளிக்க ஒருவர் தன்னுடைய இளம் வயதில் அதிகபட்ச தொகையை ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய வேண்டும். பிறகு வயதாக ஆக தன்னுடைய ஈக்விட்டி முதலீட்டு தொகையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, உங்களுடைய முதலீட்டுப் பாதை உங்களுடைய வயதைப் பொறுத்து சறுக்குப் பாதையாக இருக்க வேண்டும். இதன் மூலம் வயதாக ஆக ஈக்விட்டிகளில் அதிக ஏற்ற இறக்கங்களிலிருந்து உங்களுடைய ரிஸ்குகளைக் குறைத்துக்கொள்ள முடியும். ஆனால், அவற்றை குறைவான ஏற்ற இறக்கங்கள் உள்ள முதலீட்டு திட்டங்களுக்குப் படிப்படியாக மாற்றிக்கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்டு வழங்கும் முறையான பரிமாற்ற திட்டங்கள் (Systematic transfer plan) மூலம் உங்களுடைய முதலீடுகளை ஈக்விட்டியிலிருந்து கடன் சார்ந்த முதலீடுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதற்காக முழுவதுமாக ஒருவர் ஈக்விட்டிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று அவசியமில்லை. ஓய்வுக்காலத்தை நெருங்கும்போது செய்யும் ஈக்விட்டி முதலீடுகளின் அளவு ஒருவரது ரிஸ்க்கைத் தாங்கும் வலிமையைப் பொறுத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்துகொள்ளலாம். 

முதலீடு செய்வதைப் போலவே, செலவு செய்வதையும் முறையாக செய்ய வேண்டியது அவசியம். ஓய்வுக் காலத்தின்போது தினசரி செலவுகளுக்கு தேவையான பணத்தை முறையான பணம் பெறும் திட்டங்கள் (Systematic withdrawal plan) மூலம் குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கேற்ப அந்த மாதாந்திர தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்தப் பணத்தை மட்டும் எடுத்து செலவு செய்வதன் மூலம் ஒருவர் தன்னுடைய செலவீனத்திலும் ஒழுக்கத்துடன் திட்டமிட்டு நடந்துகொள்ள முடியும். 

ஓய்வுக் காலத்தில் வளமாக வாழ்வதற்காக செய்யும் முதலீடுகள், பங்குச் சந்தையில் செய்யப்படாத முதலீடுகளாக இருக்கும்பட்சத்தில், பணவீக்கத்தின் காரணமாக உங்களுக்குத் தேவையான வருமானமும் லாபமும் கிடைக்காமல் போகலாம். எனவே, நீண்ட கால அடிப்படையிலான உங்களுடைய ஓய்வுக் கால முதலீடுகள், ஓய்வுக் கால தேவைகளுக்கான வருமானத்தைத் தரும் ஈக்விட்டிகளில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இதற்கு மியூச்சுவல் ஃபண்டுகளின் முறையான முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இதில் உங்களிடம் கூடுதலாக எஞ்சி இருக்கும், பணத்தை இப்போதே முதலீடு செய்யத் துவங்குங்கள். அதன் மூலம் உங்களுடைய ஓய்வுக் கால தேவைகளை எளிதாக சமாளித்து மகிழ்ச்சியாக வாழலாம்.

தொகுப்பு: சி.சரவணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick