கமாடிட்டி டிரேடிங் - மெட்டல்&ஆயில்!

இரா.ரூபாவதி

சீன பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தினேஷ் பாலாஜி கூறுகிறார்.

“சீனாவின் பங்குச் சந்தை சரிவு மற்றும் அந்த நாட்டின் நாணயமான யுவானின் மதிப்பு கடுமையாக சரிந்ததை அடுத்து கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்தது. பிராண்ட் கச்சா எண்ணெய்யின் விலையானது 2004 ஜூலை மாதத்தில் இருந்த அளவுக்குச் சரிந்துள்ளது. அந்தச் சமயத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 34.18 டாலராக இருந்தது. தற்போது ஒரு பேரல் பிராண்ட் கச்சா எண்ணெய் விலை 34.32 டாலராக உள்ளது.

சீன சந்தையில் நிலவும் சரிவு, கச்சா எண்ணெய் அதிக வரத்து ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வருகிறது.

கடந்த காலங்களில் தேவைக்குமேல் ஒரு நாள் கச்சா எண்ணெய்யின் உற்பத்தியானது 1.5 மில்லியன் பேரலாக இருந்தது. 2016ம் ஆண்டில் உலகத் தேவையின் வளர்ச்சியானது குறைந்து ஒரு நாளைக்கு 1.20 - 1.25 மில்லியன் பேரலாக இருக்கும் என ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது. 2015-ல் மிக அதிகமாக 1.8 மில்லியன் பேரலாக இருந்தது. ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய்யின் உற்பத்தியைக் குறைப்பது குறித்த கூட்டம் வருகிற ஜூன் 2ம் தேதி வியன்னாவில் நடைபெற உள்ளது. மேலும் சீனாவில் நிலவும் பிரச்னை தொடர்ந்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 30 டாலர் வரை சரிய வாய்ப்புள்ளது. எனவே வரும் வாரத்திலும் கச்சா எண்ணெய்யின் விலை சரியவே செய்யும்” என்றார்.

தங்கம்!

கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. அதாவது கடந்த திங்கள் அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,063 டாலராக இருந்தது. அதுவே வெள்ளி அன்று 1,100 டாலருக்கு மேல் வர்த்தகமானது. இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கத்தின் விலை அதிகரித்தது.  கடந்த வாரத்தில் மட்டும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 40 டாலருக்கு மேல் விலை அதிகரித்தது. சீன சந்தையின் சரிவுதான் இதற்கு முக்கிய காரணம். சீன சந்தைகள் சரிவடைந்ததை அடுத்து ஆசிய பங்குச் சந்தைகளும் சரிவடைய ஆரம்பித்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது கவனத்தை திருப்பினார்கள். தங்கத்தின் விலை உயர்வினால் முதலீட்டாளர்கள் ஷார்ட் கவரிங் செய்ய ஆரம்பித்தார்கள்.

உலக நாடுகளில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், புவியியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் தங்கம் மாற்று முதலீடாக இருக்கும். சீனாவில் 2015 இரண்டாம் அரை ஆண்டில் தங்கம் அதிக அளவில் வாங்கப்பட்டுள்ளது.  சீன பங்குச் சந்தையில் ஏற்படும் முன்னேற்றத்தின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை வரும் வாரத்தில் இருக்கும்.

வெள்ளி!


தங்கத்தின் விலையைப் போல வெள்ளியின் விலை அதிகரித்தது. ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்த அளவுக்கு இல்லாமல் வெள்ளியின் விலை 2.1 சதவிகிதம் அதிகரித்தது. வெள்ளியை முதலீட்டாளர்கள் முதலீடாகக் கருதுவதில்லை. தொழில் துறைகளில்தான் வெள்ளியின் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது சீனாவின் உற்பத்தித்துறை வளர்ச்சி வெகுவாக குறைந்திருப்பதுதான் சந்தைச் சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் வெள்ளியின் தேவை மிகக் குறைய வாய்ப்புள்ளது. வரும் வாரத்தில் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

காப்பர்!

சீன பங்குச் சந்தைகள் சரிவின் காரணமாக காப்பரின் விலை அதிகமாகச் சரிய ஆரம்பித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை சரிந்துள்ளது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் அதிக வீழ்ச்சியின் காரணமாக சீன சந்தைகளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சீனாவின் உற்பத்தி வளர்ச்சி கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அதேபோல சேவை துறையின் வளர்ச்சியும் 17 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. இந்த இரண்டும்தான் சீன சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பானது 2011ம் ஆண்டு மார்ச் மாத அளவுக்குச் சரிந்துள்ளது. எனவே தொழில் துறைக்குத் தேவையான காப்பரை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டுச் சந்தையிலே வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2009 மார்ச் மாதத்திலிருந்து காப்பரின் விலை 26 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. சீனாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் வரும் வாரத்தில் விலையில் பிரதிபலிக்கும்.  

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும்  044-66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க  உங்களுக்கே!

அக்ரி கமாடிட்டியைப் படிக்க: http://bit.ly/1OEgEzp

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick