மோட்டார் இன்ஷூரன்ஸ்... எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடையாது?

சோ.கார்த்திகேயன்

நான் நிறுத்தி நிதானமாகத்தான் வண்டி ஓட்டுறனே... என் வண்டிக்கு நான் எதுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கணும்... என மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுப்பதையே தவிர்த்து வருகின்றனர் நம்முடைய மக்கள். சாலையில் நாம் என்னதான் நிதானமாகச் சென்றாலும், நம் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் செல்லும் வாகன ஓட்டிகளும் நிதானமாக வருவார்களா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆகையால், மோட்டார் இன்ஷூரன்ஸ் என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று.

ஆனால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டாலே நமக்கு நிச்சயமாக இழப்பீடு கிடைத்துவிடும் என்று நினைத்துவிடக் கூடாது. இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்தபின் பெரும் பாலான சமயங்களில் க்ளெய்ம் கிடைக்கும் என்றாலும் சில சமயங்களில் க்ளெய்ம் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு என்கிற உண்மையை ஒவ்வொரு பாலிசிதாரரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள் எந்தெந்த நிலைமையில் க்ளெய்ம் செய்யும்போது இழப்பீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

எதற்கெல்லாம் க்ளெய்ம் இல்லை?

மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது என்பது குறித்து இன்ஷூரன்ஸ் துறை நிபுணர் மற்றும் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“வாகனத்தை ஓட்டுகிறவர்கள் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) மது அருந்திவிட்டு அல்லது போதைப் பொருள் சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் இல்லை.

வாகனத்தை 16 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால், க்ளெய்ம் இல்லை. பழகுநர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானால், உரிமம் பெற்ற ஒருவர் அப்போது உடன் இருந்திருந்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும்.

தனிநபர் வாகன பாலிசியில், வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அந்த வாகனத்தை வாடகை டாக்சியாகவோ அல்லது சரக்கு போக்குவரத்து வாகனமாகவோ பயன்படுத்தி, அப்போது விபத்து ஏற்பட்டு க்ளெய்ம் கோரினால் இழப்பீடு எதுவும் கிடைக்காது.

 வாகனத்தை ஓட்டுகிறவர்களிடம் (உரிமையாளர் அல்லது ஓட்டுநர்) முறையான மற்றும் செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்து நடந்தால், க்ளெய்ம் கிடைக்காது.

சாதாரண பாலிசியை எடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் அல்லது கார் பந்தயங்களில் பங்கேற்று சேதம் ஏற்பட்டால், க்ளெய்ம் கிடைக்காது. பந்தயங்களில் கலந்து கொள்பவர்கள் அதற்கென இருக்கும் தனி பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பிரீமி யம் சற்று அதிகமாக இருக்கும்.

வழக்கமாக குறிப் பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளும் பராமரிப்புச் செலவு களுக்கு க்ளெய்ம் கிடையாது.

நீதிமன்றம், போக்கு வரத்து அதிகாரி அல் லது போலீஸ் அதிகாரி களால் லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்ட வர்களுக்கு க்ளெய்ம் கிடையாது.

டிரைவிங் லைசென்ஸ் இல்லை எனில்..?


வாகனம் ஓட்டும் உரிமையாளர் அல்லது டிரைவரிடம் முறையான மற்றும் செல்லத்தக்க டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் இழப்பீடு கிடைக்காது. நாளடைவில் ஏற்படும் வாகனத்தின் தேய்மானத்துக்கு க்ளெய்ம் இல்லை. நம் நாட்டின் எல்லைக்கு வெளியே விபத்து நடந்தால் க்ளெய்ம் கிடைக்காது.  அடிக்கடி விபத்து ஏற்படுத்துவர்களுக்கு க்ளெய்ம் கிடையாது.  ராங் சைட் டிரைவிங் ஓட்டினால் க்ளெய்ம் கிடையாது” என எந்தெந்த நிலையில் க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக விளக்கினார்.

இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தர மறுக்கும்போது, இன்ஷூரன்ஸ் குறை தீீர்ப்பாளர்களிடம் முறையிடலாம். குறை தீர்ப்பாளர்கள் க்ளெய்ம் வழங்க மறுக்கும்பட்சத்தில் உரிய நீதிமன்றத்தில் வழக்கிட்டு நீதிபதி திருப்தி அடையும்பட்சத்தில் க்ளெய்ம் கிடைக்கும்.

தற்போது இந்தியாவில் ஒரு வாகனத்துக்கு மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க, அதன் மொத்த விலையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவாகவே செலவாகிறது. சர்வதேச அளவில் இது 5 சதவிகிதமாக இருக்கிறது.

மோட்டார் வாகன பாலிசிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நம் வாகன பாதிப்புக்கான பாலிசி (own damage policy). அடுத்து, நம் வாகனத்தால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கான பாலிசி (third party insurance). மேற்கண்ட இரண்டு வகையான பாலிசிகளின் பலன்களை ஒருசேரத் தருவது ஒருங்கிணைந்த பாலிசி (Comprehensive policy). விவரம் தெரிந்த வாகன ஓட்டிகள் அனைவரும் பாலிசி எடுக்கும்போதே மிக கவனமாக இருப்பது நல்லது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick