எதிர்கால நிதித் திட்டமிடல்... ஏன் தேவை நிதி ஆலோசகரின் உதவி?

இரா.ரூபாவதி

ருமானம் ஈட்டும் அனைவருமே எதிர்கால தேவைகளுக்காக சில திட்டங்களில் முதலீடு செய்து வருவது வரவேற்கத்தகுந்த விஷயம்தான். ஆனால், சரியான முதலீட்டுத் திட்டங்களில்தான் முதலீடு செய்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். எங்களுக்கு தெரியாத முதலீடா என்று நினைத்து பலரும் தங்களுக்கு தெரிந்த அளவில் ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதை முழுக்க தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும், குடும்பத்தின் நிதி சார்ந்த தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு நிதி ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்வது நல்லது. குடும்ப நிதி திட்டமிடல்களை செய்வதற்கு  ஒரு நிதி ஆலோசகர் எந்த வகையில் உதவியாக இருப்பார்?  

மனம் சார்ந்த ஆரோக்கியம், உடல் சார்ந்த ஆரோக்கியம், நிதி சார்ந்த ஆரோக்கியம் ஆகிய மூன்றையும் நம்  வாழ்க்கையில் எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். நமக்கு தலைவலி, காய்ச்சல் வரும்போது, நமக்குத் தெரிந்த மருந்து, மாத்திரைகளை மருந்துக் கடையில் வாங்கிச் சாப்பிடுகிறோம். அதன்பிறகும் உடல்நலம் பெறவில்லை எனில், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுகிறோம். ஆனால், ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி இருந்தால், நோயானது சீக்கிரமே குணமாகி இருக்கும். செலவும் குறைவாகவே ஆகியிருக்கும்.

எதிர்காலத் தேவைக்கான முதலீடு என்று வரும்போதும் நாம் இதே தவறைத்தான் செய்கிறோம். நமக்குத் தெரிந்த வகையில் நாமே முதலீடு செய்வதால், நம் தேவைகள் நிறைவேறாமல் போவதுடன்,  நஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.  இதனால் கூடுதலான முதலீட்டை எதிர்காலத்துக்கு நாம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவோம். நம் உடல்நலத்தைக் காத்துக்கொள்ள நாம் மருத்துவரை அணுகுவதுபோல, நிதி சார்ந்த விஷயங்களைச் சரியாக வைத்துக் கொள்வதற்கும் நிதி ஆலோசகரின் ஆலோசனை அவசியம் தேவை.

ஒரு குடும்பத்தின் நிதித் திட்டமிடல் சரியாக அமைய நிதி ஆலோசகரின் ஆலோசனை ஏன் தேவை என நிதி ஆலோசகர் சுபாஷிடம் கேட்டோம்.  ‘‘ஒரு குடும்பத்தில் நிதி சார்ந்த பிரச்னைகள் எப்போதுமே இருந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் பிரச்னையை எப்படி சரிசெய்வது என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். நிதி சார்ந்த பிரச்னைகளுக்கு சரியான ஆலோசனைகளை சொல்லி, எதிர்கால முதலீடு குறித்த திட்டமிடலை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர்கள் தெளிவான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

வருமானம் ஈட்டுபவர்கள் அனைவருமே முதலீடு செய்தாலும், அந்த முதலீடு தங்களின் இலக்கை அடைய உதவுமா என்பதை யாருமே யோசிப்பதே இல்லை. எதற்காக முதலீடு செய்கிறோம், அதனுடைய அடிப்படைத் தேவை என்ன, அந்த முதலீட்டின் மூலமாக எந்த இலக்கை நிறைவேற்றப் போகிறோம் என்ற திட்டமிடல் கட்டாயம் தேவை. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லாமல் செய்யப்படும் முதலீடு வீணாகவே முடியும். 

முதலீடு செய்யும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது நாமினிதான். உங்களுடைய நாமினி யார் என்பதைத் தீர்மானித்தபிறகு முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் இதில் தவறு செய்கிறார்கள். இன்னும் சிலர், நண்பர்கள் முதலீடு செய்கிறார்கள். அதனால் நானும் அதே திட்டத்தில் முதலீடு செய்கிறேன் என்கிறார்கள். நண்பர்களின் எதிர்காலத் தேவையும் உங்கள் தேவையும் வேறுவேறாக இருக்கும்போது, அவர் தேர்ந்தெடுத்த முதலீட்டுத் திட்டம் உங்களுக்கு எப்படி பொருத்தமாக இருக்கும்?

சிலர் குடும்பத்தின் தேவைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, பாதுகாப்பு குறித்து யோசிப்பதில்லை. அதாவது, இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாக நினைத்து, எண்டோவ்மென்ட் பாலிசியில் முதலீடு செய்கிறார்கள். டேர்ம் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸின் அவசியம் தெரிந்து, அந்த பாலிசிகளை எடுக்காமல், ஒன்று அல்லது இரண்டு லட்சம் ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசிகளை எடுத்து வைத்திருப்பதால், எந்தப் பயனும் இல்லை.

ஒரு குடும்பத்தில் எவ்வளவு வருமானம் வருகிறது, அதில் எவ்வளவு செலவாகிறது என்பதைப் பலரும் தெரிந்துவைத்திருப்பதில்லை. இது தெரிந்தால் எவ்வளவு தொகை மிச்சமாகிறது, அந்த தொகையை வைத்து எப்படி முதலீடு செய்யலாம் என்பதை முடிவு செய்ய முடியும். செலவுகள் குறித்த சரியான தெளிவு இல்லாமல் சில திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, அதன்பின் அந்த முதலீட்டுத் திட்டத்தை தொடர முடியாமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால், ஒரு குடும்ப நிதி ஆலோசகர் முதலீட்டுத் திட்டத்தை அமைத்து தரும்பட்சத்தில், அது சாத்தியமாகக்கூடியதாகவே இருக்கும். இதனால் இடையில் முதலீடு செய்வதை நிறுத்துவது என்கிற பேச்சே எழாது’’ என்றார்.

தமக்கு தெரிந்த வகையில் பலரும் முதலீடு செய்கிற இந்தக் காலத்தில், நிதி ஆலோசகரை கலந்து ஆலோசித்து நிதித் திட்டமிடல் செய்துகொண்டதன் மூலம் தமக்கு கிடைத்த நன்மைகளை எடுத்துச் சொன்னார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பாலமுருகன். அவரை சந்தித்துப் பேசினோம்.

“திருமணத்துக்குப் பிறகு சேமிக்கவேண்டுமே என நினைத்து முதலீடு செய்து வந்தேன். என் முதலீடு அனைத்துமே நிரந்தர வருமானம் தரக்கூடிய தாக இருந்தது. அதாவது, எஃப்.டி., வி.பி.எஃப் ஆகிய திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்திருந்தேன்.  அந்தச் சமயத்தில்தான் எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் செலவு செய்ய வேண்டி இருந்தது. இதேபோலத்தான் எதிர்கால செலவுகளும் இருக்கும். இந்தச் செலவுகளை சமாளிப்பதற்கு அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது என யோசிக்கும்போதுதான் நிதி ஆலோசகரின் உதவியை நாடினோம்.

எதிர்காலத் தேவையின் அடிப்படையில் எங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை  நிதி ஆலோசகர் தெளிவாக எடுத்துச் சொன்னார். மேலும், அஸெட் அலோகேஷன் முறையில் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்ய சொன்னார். இதன் விளைவாக எங்கள் எதிர்கால இலக்குகளை நிச்சயம் அடைய முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது’’ என்றார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுரேஷ் சீனிவாசனைச் சந்தித்தோம். ‘‘எனக்கு ஒரே பெண் குழந்தை என்பதால், குழந்தையின் எதிர்கால தேவையான கல்வி, திருமணம் மற்றும் என்னுடைய ஓய்வுக் காலத்துக்கு திட்டமிட வேண்டியிருந்தது. குழந்தையின் தேவை களுக்கு சில முதலீடுகளைச் செய்து வைத்திருந்தேன். அதன்பிறகு ஓய்வுக் காலத் தேவை மற்றும் வரி சேமிப்புக்காக இரண்டு, மூன்று வீடுகளை வாங்கினேன். இது தவறான முதலீடு என்பது நிதி ஆலோசகரிடம் கலந்தாலோசித்தபின்   தெரிந்துகொண்டேன்’’ என்றார்.

குடும்பத்தின் நிதித் திட்டமிடலை  சரியாக அமைத்துக் கொள்ள நிதி ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்க பலரும் தயங்கக்  காரணம், கட்டணம்தான். இந்தக் கட்டணத்தை ஏன் தரவேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர். இது முற்றிலும் தவறான எண்ணம். நம் உடல்நலம் சரியில்லாதபோது,  மருத்துவரின் ஆலோசனையைப் பெற கட்டணம் செலுத்த நாம் தயங்குவதில்லை. ஆனால், நிதி ஆலோசகரிடமிருந்து ஆலோசனை பெற நினைக்கும்போது, அது இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கும்போது, அதன் தரம் நமக்கு முழு திருப்தி தரும்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. மேலும், இலவசமாக கிடைக்கும்போது ஒன்றின் மீது நாம் வைக்கும் அக்கறை குறைவாகவே இருக்கும்.  

இனியாவது நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிதித் திட்டமிடலை விஷயம் தெரிந்த நிதி ஆலோசகரின் உதவியுடன் செய்யத் தொடங்குவோம்.

யார் நிதி ஆலோசகர்?

இந்தியாவில் நிதி ஆலோசகராக இருக்க வேண்டும் எனில் அதற்கு சில பாடத் திட்டங்களை படித்திருப்பது அவசியம். சர்ட்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர் (Certified Financial Planner), ஃபெல்லோ சார்ட்டர்டு ஃபைனான்ஷியல் பிராக்ட்டீஷனர் (Fellow Chartered Financial Practitioner), சார்ட்டர்டு வெல்த் மேனேஜர் (Chartered Wealth Manager), சர்ட்டிஃபைடு இன்டர்நேஷனல் வெல்த் மேனேஜர் (Certified International Wealth Manager) ஆகிய இந்த நான்கில் ஏதாவது ஒரு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தால்தான் நிதி ஆலோசனை வழங்க முடியும். நிதி ஆலோசனை பெறுவதற்குமுன், நீங்கள் கலந்தாலோசிக்கும் நிதி ஆலோசகர் இந்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்கிறாரா எனத் தெரிந்துகொள்வது அவசியம். மேலும், உங்களின் தேவை நிறைவேறும் வகையில் நிதி ஆலோசகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இதை தவிர்த்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட முதலீட்டு திட்டத்தை குறித்து மட்டும் பேசினால் அவர் சிறந்த ஆலோசகர் இல்லை என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick