ரூ.10,000 தந்தால் தினம் ரூ.100! முதலீட்டாளர்களே உஷார்!

மு.சா.கெளதமன்

ரூ.10,000 தந்தால் தினமும் ரூ.100 வீதம் 200 நாட்களுக்கு திரும்ப தருகிறோம் என சென்னையின் பல  பகுதிகளில் கவர்ச்சிகரமான ஒரு  விளம்பரம்  தென்படுகிறது. இந்த விளம்பரத்தை பார்த்தவுடனே, இது எந்த அளவுக்கு உண்மை என்பதை விசாரிக்க அந்த விளம்பரத்தில் தரப்பட்டிருந்த செல்போன் நம்பருடன் தொடர்பு கொண்டோம். போனை எடுத்தவர், ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள காசி எஸ்டேட்டில் உள்ள ‘யுனிபுள் புரமோட்டர்ஸ் (Unibull Promoters)’ என்கிற முகவரிக்கு வரும்படி சொன்னார். அங்கு போனால், ‘யுனிபுள் லேண்ட் புரமோட்டர்ஸ் (Unibull Land Promoters)’ என்றிருந்தது. கேட்டால், ரியல் எஸ்டேட் விற்பனையும்  செய்கிறார்களாம்.

முருகன் என்பவர் எங்களுடன் பேசினார். ‘‘சார், நீங்க கொடுக்குற ரூ.10,000 பணத்தை நான் அப்படியே மளிகைக்கடை சாமான் வாங்கி 10 - 25% மார்ஜின் வெச்சு வித்து லாபம் பார்ப்பேன். வர்ற லாபத்துல உங்களுக்கு ஒரு நாளக்கி 1%, அதாவது, 100 ரூபாய்தான் தர்றேன். நான் உங்ககிட்ட வாங்குன பணத்தையும்,  நான் உங்களுக்கு வட்டியோடு அசல திருப்பி தரவேண்டிய தொகையையும் 20 ரூபா பத்திரத்துல ஒரு அக்ரிமென்ட் போட்ருவோம். தவிர, நீங்கள் யாரையாவது இந்த ஸ்கீம்ல சேர்த்து விட்டீங்கன்னா, அவர் முதலீடு செய்றதுல மாசத்துக்கு 1% உங்களுக்கு குடுப்போம்’’  என்றார்.

‘‘நீங்க சொல்றதுக்கு ஏதாவது உத்தரவாதம் தருவீங்களா? ரிசர்வ் பேங்க்ல இதுக்கு அனுமதி வாங்கி இருக்கீங்களா?’’ என்று கேட்டவுடன், முருகனின் முகம் மாறியது. ‘‘இது ஒரு மியூச்சுவல் ஒப்பந்தம்தான். நான் எழுதி கொடுத்த ஒப்பந்தத்தை வைத்து நீங்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் தரும் பணத்தை நான் மளிகைக் கடையில் முதலீடு செய்து, வரும் லாபத்தைதான் தர்றேன்’’ என்றார். நாம் விசாரித்த வரை இந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியிடமோ, செபியிடமோ பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
ஏற்கெனவே பிஏசிஎல்,  எம்ஆர்டிடி போன்ற நிறுவனங்கள் அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடித்த நிலையில், இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டுமா? முதலீட்டாளர்களே உஷார்!

படம்:  ஜெ.விக்னேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick