கமாடிட்டி டிரேடிங் - மெட்டல்&ஆயில்!

இரா.ரூபாவதி

சிய சந்தைகள் சரிந்திருப்பது, யுவானின் மதிப்பைச் சீனா குறைத்திருப்பது ஆகியவற்றின் விளைவாகத் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய்யின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா நிவேஷ் நிறுவனத்தின் இயக்குநர்  மனோஜ் குமார் ஜெயின் கூறுகிறார்.

கச்சா எண்ணெய்!

“கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அதாவது, கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 29.73 டாலர் என்ற நிலையில் இருந்தது. இதை அடைவதற்கு இன்னும் 1.5% விலை குறைந்தால் போதும்.

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை இரண்டாவது முறையாக 30 டாலருக்குக் கீழ் வர்த்தகமாகி உள்ளது. கச்சா எண்ணெய் கையிருப்பு 2,34,000 பேரல் அதிகரித்துள்ளது.  கடந்த 19 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 70 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. அதிக வரத்து, தேவைக் குறைவு, சீனாவின் பொருளாதார பிரச்னை ஆகியவற்றின் காரணமாக இதன் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வர்த்தகர்கள் 2025-1980 என்ற  விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 1850 ; டார்கெட் 2130 - 2230.

தங்கம்!

சீனா மற்றும் உலக அளவில் நிலவும் பொருளாதார பிரச்னை காரணமாகத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தது. ஆனால், தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் சரியவே செய்தது. அதாவது, வாரத்தின் துவக்கத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,107 டாலராக இருந்தது. அதுவே கடந்த வியாழன் அன்று ஒரு அவுன்ஸ் 1,092 டாலராகக் குறைந்தது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,085 டாலர் வரை சரிந்து வர்த்தகமானது.

2014-ல் சீனாவின் வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருந்தது. இது 2015-ல் 7 சதவிகிதமாக இருக்கும் என வல்லுநர்கள் கூறினார்கள். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு துவங்கியதிலிருந்து சீன சந்தைகள் கடுமையாகச் சரிந்து வருகிறது. தவிர  யுவானின் மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஆசிய சந்தைகளும் சரிய ஆரம்பித்தன.  2016-ல் அமெரிக்கா வட்டி விகிதத்தை வேகமாக உயர்த்தும் சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. மேலும், அமெரிக்காவின் கோல்டு ஃபண்டில் கையிருப்பு அதிகரித்து வருகிறது. உலகப் பொருளாதார அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.

இந்திய சந்தைகளில் தங்கத்துக்கான சப்போர்ட் விலை 25,600 ஆகும். ரெசிஸ்டன்ஸ் நிலை 26,080 - 26,240 ஆகும். மூன்று நாட்கள் தொடர்ந்து உயர்ந்தும், வாராந்திர முடிவில் 26,240 -ஐ உடைத்தால் மட்டுமே ஏற்றம் இருக்கும். வாராந்திர முடிவு நிலை 25,600-க்கு கீழ் சென்றால் சரிவு 24,960 வரை தொடரலாம். வர்த்தகர்கள் 25,800 நிலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 25,600 ; டார்கெட் 26,080 - 26,240.”

வெள்ளி!

வெள்ளியின் விலை கடந்த வாரத் துவக்கத்தில் சற்று சரிந்தது. ஆனால், புதன் அன்று மீண்டும் ஏற்றம் கண்டது. அதாவது, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 13.97 டாலரில் இருந்து உயர்ந்து, வியாழன் அன்று 14.10 டாலருக்கு வர்த்தகமானது. இது 2.4 சதவிகித விலை உயர்வு ஆகும். சீனாவில் நிலவும் பிரச்னை, அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு ஆகியவற்றின் காரணமாக நிதிச் சந்தையில் ஒருவிதமான தேக்கநிலை நிலவுகிறது. இதனால் முதலீட்டிலே ஒருவிதமான மந்தநிலை காணப்படுகிறது. வரும் வாரத்திலும் இந்த தேக்கநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

காப்பர்!

காப்பரை அதிகமாக நுகர்வு செய்வது சீனாதான். தற்போது அங்கு பொருளாதார சிக்கல் இருந்தாலும் டிசம்பர் மாதத்தில் சீனா அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது. அதாவது, சீனாவின் காப்பர் இறக்குமதி 15.2% அதிகரித்து, டிசம்பரில் மட்டும் 5,30,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. 2015-ல் இதுவே சீனாவின் அதிகபட்ச காப்பர் இறக்குமதி  அளவாகும்.  இதற்குமுன் 2014 ஜனவரியில்  5,36,000 டன் காப்பரை இறக்குமதி செய்தது. மேலும், காப்பர் இன்டர்நேஷனல் ஸ்டடி குரூப் (International Copper Study Group) அடுத்த நான்கு ஆண்டுகளில் காப்பரின் உற்பத்தி 5% அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆசிய சந்தைகள் சரிவில் இருப்பது மற்றும் யுவானின் மதிப்பு சரிந்திருப்பது ஆகியவை காப்பருக்கு நெகட்டிவ் விஷயங்களாக உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick