மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ஆன்லைனில் ஈஸி!

இரா.ரூபாவதி

லரின் நம்பகமான முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. நம் தேவையின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்துகொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும். அரசின் கண்காணிப்பின் கீழ் நடக்கும் திட்டம் இது;  இதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற முடியும். இது மாதிரியான பல பாசிட்டிவ் காரணங்களினால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமெனில், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்துதர மியூச்சுவல் ஃபண்ட் புரோக்கிங் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.  காசோலையை தரவேண்டும். இதற்கெல்லாம் அலைவதற்கு நேரமில்லை என்று நினைக்கிறவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஆன்லைன் மூலமே முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை ஆன்லைன் மூலமாக வாங்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

“கையில் பணம் இருக்கும்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவே இந்த ஆன்லைன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் முதலீடு செய்வது மிகவும் எளிது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வெப்சைட்டில் நேரடியாக முதலீடு செய்ய முடியும். அதாவது, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களில் முதலீடு செய்யலாம்.

இப்படி வாங்கிய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்பனை செய்யவும் முடியும்; ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கு மாறவும் முடியும். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த ஸ்டேட்மென்ட்டை பார்க்க என அனைத்து வேலைகளையும் ஆன்லைனிலே செய்ய முடியும்.

இதற்கு தனியாக ஆன்லைனில் ஒரு யூஸர் ஐடி, பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கும் தனியாக யூஸர் ஐடி உருவாக்க வேண்டியிருக்கும். ஏற்கெனவே கேஒய்சி செய்யவில்லை எனில், அதை ஆன்லைனில் செய்வது அவசியம். யூஸர் ஐடி உருவாக்கும்போதே வங்கிக் கணக்கு குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். மேலும், இதனுடன் பான் கார்டு விவரம், நாமினி விவரம் ஆகியவற்றை தரவேண்டியிருக்கும். இந்த தகவல்களை பூர்த்தி செய்தபிறகு ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும்.

ஏற்கெனவே பான் கார்டு   இருந்து, கேஒய்சி  செய்திருந்தால், , ரத்து செய்யப்பட்ட காசோலை கொடுக்க வேண்டும். அதாவது, ரத்து செய்த காசோலையை ஸ்கேன் செய்து அதை ஃபண்ட் நிறுவனத்துக்கு மெயில் அனுப்ப வேண்டும். இந்த வேலைகளைச் செய்தபிறகு எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும். ஆன்லைனில் முதலீடு செய்யும்போது நேரடித் திட்டம் அல்லது ரெகுலர் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். என்ஏவியில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.

மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலமாகவும் ஆன்லைனில் முதலீடு செய்ய முடியும். ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்யும்போது அந்தந்த நிறுவனத்தின் ஃபண்டுகளில் மட்டும்தான் முதலீடு செய்ய முடியும். விநியோகஸ்தர் மூலமாக முதலீடு செய்யும்போது இந்தச் சிக்கல் இருக்காது. அங்கு அனைத்து ஃபண்டுகளிலும் ஒரே இடத்தில் முதலீடு செய்ய முடியும்” என்றார்.

ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம், ஐசிஐசிஐ டைரக்ட், மை யூனிவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் இணையதளங்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள்.

இந்த நிறுவனங்களின் மூலமாக ஆன்லைனில் முதலீடு செய்யும்போது, அந்த நிறுவனங்களில் கணக்கு துவங்குவதற்கு காகித வடிவத்தில் முதலீட்டாளரின் ஆவணங்கள் தரவேண்டியிருக்கும். ஒருமுறை மட்டும் செய்தால் போதும். அதேபோல, இசிஎஸ் கொடுக்க ரத்து செய்யப்பட்ட காசோலை தர வேண்டியிருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்வதற்குமுன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்ட் சரியா என்பதை ஒருமுறைக்குப் பலமுறை செக் செய்வது முக்கியம். தெரியாமல் அல்லது தேவை இல்லாத ஃபண்டை வாங்கினால் அந்த ஃபண்ட் யூனிட்டை விற்றுதான் பணத்தை வெளியே எடுக்க முடியும். எனவே, அதிக கவனத்துடன் முதலீடு செய்வது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick