டிமாண்ட் குறையும் தங்கம்! - என்ன காரணம்?

இரா.ரூபாவதி

ந்தியாவில் ஜனவரி மாதம் துவங்கினாலே கொண்டாட்டம்தான். புது வருடம், பொங்கல், திருமணமான சீசன் என வரிசையாக ஏதாவது ஒரு கொண்டாட்டம் வந்துகொண்டே இருக்கும். இந்தக் கொண்டாட்டத்தின் அடையாளமாகத் தங்கம் வாங்குவதைச் சுபகாரியமாக நினைக்கிறோம். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கான சராசரி தங்கத்தின் தேவையானது 950 - 1,000 டன்னாக உள்ளது. இதில் சுமார் 60 சதவிகித தங்கத்தை கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தான் வாங்குகிறார்கள். கிராமங்களில் உள்ள மக்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக நினைக்கிறார்கள். மேலும், முதலீட்டுக்கு மட்டும் இல்லாமல், தங்கள் பிள்ளைகளின் திருமணத்துக்கு பரிசளிப்பதற்காகவும் வாங்குகிறார்கள்.

ஆனால், வழக்கமாகத் திருமண சீசனில் வாங்கப்படும் தங்கத்தின் அளவைவிட, இந்த வருடம் 10 - 15% தேவை குறைந்துள்ளது. பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, இந்த ஆண்டு விவசாய உற்பத்தி அதிகமான அளவில் இல்லை. மேலும்,  விளைப்பொருட்களின் விலையும் கணிசமாக சரிந்திருக்கிறது. இதனால் கிராமப்புற மக்களின் வருமானம் குறைந்திருக்கிறது. விவசாயத்துக்காக ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான வட்டி செலுத்த வேண்டும்; தவிர, தினசரி செலவுகள், மீண்டும் விவசாயம் செய்வதற்கு பணம் தேவை என்பது போன்ற பல சிக்கல்களை பல விவசாயிகள் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள். இந்த நிலையில், தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் குறைந்து வருகிறது.

கிராமப்புறங்களில் தேவை குறைந்திருப்பதற்கான காரணம் என்ன, தற்போது தங்க நகை விற்பனை எப்படி உள்ளது என்பது குறித்து கோவை நகை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராமிடம் கேட்டோம்.

“கிராமப்புற மக்களின் வருமானத்தில் 60 - 70% விவசாயத்திலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 30 - 40 சதவிகித வருமானம் சேவைத் துறை மூலமாகக் கிடைக்கிறது. அதாவது, கிராமங்களில் உள்ளவர்களின் பிள்ளைகள் பெரிய ஊர்களில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்த்து சம்பாதித்து தருகிறார்கள். சென்னை, கடலூர் போன்ற மாவட்டங் களில் ஏற்பட்ட பாதிப்பினால் வேலைவாய்ப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் கிராமப் புறங்களின் வருமானம் வெகுவாகக்  குறைந்து,   தினசரி வாழ்க்கை நடத்துவதே சிக்கலாகி உள்ளது. இதனால் தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார்கள்.  கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், 50 சதவிகித விற்பனை இந்த வருடம் குறைந்துள்ளது. இதன் காரணமாக நகை விற்பனை மூலம் எங்களுக்குக் கிடைக்கும் லாபமும் குறைந்துள்ளது” என்றார்.

தாராபுரத்தை சேர்ந்த ரேணுகாவுடன் பேசினோம்.  ‘‘விவசாயம் செய்கிறவர்களின் பெரிய முதலீடே தங்கம்தான். ஏனெனில் விவசாயத்துக்கு பணம் தேவைப்பட்டால் உடனடியாக தங்கத்தைத் தான் அடமானம் வைப்போம். அதனால் வருமானம் கிடைக்கும் போதெல்லாம் தங்கத்தை வாங்கி வைப்போம். ஆனால், கடந்த மூன்று வருடங் களாகவே தங்கம் வாங்க முடியவில்லை. இதற்கு வருமானம் இல்லை என்பது மட்டும் இல்லாமல், விளைபொருட்களுக்கான விலை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வருடமும் அதிக மழை காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தது.  இதனால் விளைச்சலும் இல்லை, வருமானமும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் தங்கம் வாங்குவது குறித்து யோசிக்கக்கூட முடியவில்லை’’ என்றார்.

தமிழகம் முழுக்க கிராமப்புறங்களில் உள்ள பலரும் தாராபுரத்தை சேர்ந்த ரேணுகா மாதிரிதான் யோசிக்கிறார்கள். இப்போதைய நிலையில், தங்கம் அவசியம் வாங்கியாக வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தவிர, மற்றவர்கள் தங்கத்தை வாங்க பலமாக யோசிக்கிறார்கள் என்பதே உண்மை!


காயின் மற்றும் பார் விற்பனை ஜோர்!

தங்கக் காயின் மற்றும் பார்களின் டிமாண்ட் கடந்த நான்கு காலாண்டு களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6% டிமாண்ட் அதிகரித்து உள்ளது. விலை சரிவில் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஆபரணமாக வாங்காமல் காயின் மற்றும் பார்களாக வாங்குகிறார்கள். 2015 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட சரிவு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் சிலர் பங்குச் சந்தை சரிவில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிசெய்யக் கையில் இருந்த தங்கத்தை விற்பனை செய்கிறார்கள். இன்னும் சிலர் தங்கத்தின் விலை மேலும் சரியும் என்ற எதிர்பார்ப்பில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகிறார்கள்.


விலை இன்னும் குறையும்?

அமெரிக்க ஃபெடரல் சமீபத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தியதால்,  தங்கம் விலை சரிந்தது. தற்போது சீனாவில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது. சீன பொருளாதார சிக்கல்கள் காரணமாக, அந்த நாடு புதிதாக தங்கம் வாங்குவதற்கு பதிலாக, தன்னிடம் இருக்கும் தங்கத்தை விற்கத் தொடங்கலாம். இது எப்போது நடக்கும் என்று தெரியாது. தங்கத்தின் விலை அடுத்த ஒரு மாதத்துக்கு ஏற்ற இறக்கங்களுடன் இருக்குமே தவிர, பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick