உங்களிடம் உள்ள பாலிசி பெஸ்ட் பாலிசியா?

பளிச் தெளிவுக்கு பக்கா செக் லிஸ்ட்இரா.ரூபாவதி

ன்றைய நிலையில் பல அபாயங்களுக்கு இடையேதான் நாம் இந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.  இதனால் நோய்வாய்ப்படுதலோ அல்லது உயிர் இழத்தலோ என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கிற நிலையிலேயே நாம் எல்லோரும் இருக்கிறோம்.

எதிர்பாராத விதத்தில் நிகழும் மரணம் மற்றும் நோயினால் பாதிக்கப்படுவது என இந்த இரண்டு அபாயங்களில் இருந்து நம்மையும், நம்முடைய குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக காப்பாற்றுவது இன்ஷூரன்ஸ்தான். நோயினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ஹெல்த் இன்ஷூரன்ஸும், உயிரிழப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளிலிருந்து குடும்ப உறுப்பினர்களைக் காக்க லைஃப் இன்ஷூரன்ஸும் ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியம்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் குறித்த விழிப்பு உணர்வு பொது மக்களிடையே உருவாகி, இன்றைக்கு பலரும் பல புதிய பாலிசிகளை எடுத்து வருகிறார்கள். பாதுகாப்புக்காக மட்டும் எடுக்காமல் சிலர் வரி சேமிப்புக்கா கவும் இன்ஷுரன்ஸ் பாலிசிகளை எடுக்கிறார்கள்.

இன்ஷுரன்ஸ் பாலிசியை இப்படி எந்த காரணத்துக்காக எடுத்தாலும், அந்த பாலிசி நம் தேவைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளதா, நாம் வைத்து இருக்கும் இன்ஷுரன்ஸ் பாலிசி பெஸ்ட் பாலிசிதானா என்பதை தெரிந்துகொள்வது எப்படி, நாம் வைத்திருக்கும் பாலிசி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

லைஃப் இன்ஷூரன்ஸ்!

‘‘லைஃப் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, பலரும் சேமிப்புக்காக எடுக்கிறார்கள். இது தவறு. முதலில் உங்களுடைய ரிஸ்க்கை கவர் செய்யும் வகையில் பாலிசி எடுக்க வேண்டும். அதாவது, குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் எதிர்பாராத வகையில் மரணம் அடையும்போது, அவரின் இழப்பை பொருளாதார ரீதியாக சமாளித்துக் கொள்வதற்கு லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி தேவை என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

 இந்த பாலிசியானது எண்டோவ்மென்ட் பாலிசியாக அல்லாமல், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருப்பது கட்டாயம். குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் தரக்கூடிய திட்டங்களதான் டேர்ம் பாலிசிகள். இந்த டேர்ம் பாலிசியில் நாம் கட்டும் பிரீமியம் நமக்கு திரும்பக் கிடைக்காது. ஆனால், எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் நாம் செலுத்தும் பிரீமியம் நமக்கு திரும்பக் கிடைக்கும். ஆனால், அதிக பிரீமியத்தில் மிகக் குறைந்த கவரேஜ் தொகையே எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் கிடைக்கும். இந்த பாலிசி மூலம் கிடைக்கும் வருமானமானது அதிகபட்சமாக 5 முதல் 6% என்கிற அளவிலேயே இருக்கும். எனவே, நீங்கள் வைத்திருக்கும் பாலிசி டேர்ம் பாலிசியா அல்லது எண்டோவ்மென்ட் பாலிசியா என்பதை முதலில் பாருங்கள்.

கூடுதல் கவரேஜ் தொகை!

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவரின் ஆண்டு வருமானத்தைப் போல 10 முதல் 20 மடங்கு அளவுக்கு அந்த பாலிசியின் கவரேஜ் தொகை இருப்பது அவசியம். இதற்கும் குறைவான கவரேஜ் தொகை இருந்தால், தேவைப்படும் கூடுதல் தொகைக்கு தனியாக ஒரு பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், இந்த கவரேஜ் தொகை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்குமா என்பதையும் பார்ப்பது அவசியம். அதாவது, இப்போது உங்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ரூ.30 - ரூ.60 லட்சம் வரை கவரேஜ் இருந்தால் போதும்.

இன்னும் 10, 15 வருடங்கள் கழித்து வருமானம் அதிகரிக்கலாம். அந்த சமயத்தில், கூடுதல் கவரேஜூக்காக இன்னொரு பாலிசி எடுப்பது அவசியம். புதிதாக பாலிசி எடுப்பவர்கள் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு அதிக கவரேஜூக்கு வழிசெய்து தருகிற மாதிரியான பாலிசியை எடுப்பது நல்லது. 

நிறுவனத்தின் தற்போதைய நிலைமை!

லைஃப் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகுதான் க்ளெய்ம் செய்ய முடியும். எனவே, பாலிசி எடுத்துள்ள நிறுவனத்தின் தற்போதைய நிலைமை எப்படி உள்ளது என்று பார்ப்பது முக்கியம்.

மேலும், அந்த நிறுவனத்தின் முதன்மையான தொழில் என்ன என்பதையும் கவனிப்பது நல்லது. நிதி சேவை சார்ந்த தொழிலை பிரதான தொழிலாக வைத்திருக்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பாலிசி வைத்திருக்கும் நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இந்த தொழிலை செய்யுமா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

க்ளெய்ம் விகிதம்!

நீங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும் நிறுவனத்தின் க்ளெய்ம் விகிதம் எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பது அவசியம். க்ளெய்ம் விகிதமானது ஒவ்வொரு வருடமும் மாறக்கூடியது. இந்த விகிதம் 80-95 சதவிகிதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக க்ளெய்ம் விகிதம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

க்ளெய்ம் விகிதம் மட்டும் இல்லாமல், எவ்வளவு பாலிசிகள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். எல்ஐசி போன்ற நிறுவனங்களில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் பாலிசிகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால், சிறிய நிறுவனங்களில் க்ளெய்ம் செய்யப்படும் பாலிசிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அதில் எவ்வளவு பாலிசிகளுக்கு க்ளெய்ம் நிராகரிக்கப்படுகிறது என்பதை கவனிப்பது நல்லது.

சேவை!

இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் சேவை எப்படி உள்ளது என்பதை கவனிப்பது மிக முக்கியம். ஏனெனில் டேர்ம் இன்ஷூரன்ஸில் பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகுதான் க்ளெய்ம் செய்ய முடியும். எனவே, இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் தொடர்ந்து செயல்படுகிறதா, அந்த நிறுவனத்தின் பிரீமியம் செலுத்தும் தேதிக்குமுன் மெயில், எஸ்எம்எஸ் அனுப்புவது போன்ற சேவைகள் எப்படி உள்ளது, வாடிக்கையாளர் சேவை மையத்தை எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த சேவை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்னை இருந்தாலும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை மாற்றலாம்.

பிரீமியம்!

நீங்கள் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் பிரீமியம் எவ்வளவு, அதே மாதிரியான பாலிசி களுக்கு பிற நிறுவனங்களில் எவ்வளவு பிரீமியம் என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

பிரீமியம் தொகை அதிக அளவில் வித்தியாசப்பட்டால், அதற்கான காரணம் என்ன என்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்களில் எல்லாம் நீங்கள் வைத்திருக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி பக்காவாக இருந்தால், அந்த பாலிசியை பெஸ்ட் பாலிசி என்றே சொல்லலாம்’’ என்று முடித்தார் ஸ்ரீதரன்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

பெஸ்ட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கினார் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சேகர் சம்பத்.

கட்டுப்பாடு இல்லாத பாலிசிகள்!

“ஹெல்த் இன்ஷூரன்ஸை பொறுத்தவரை, பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். அதாவது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது, அறை வாடகையானது கவரேஜ் தொகையில் அதிகபட்சமாக 1 - 1.5 சதவிகிதமே இருக்கும். இதன் அடிப்படையில் மற்ற எல்லா செலவுகளுக்கான கவரேஜூம் இருக்கும்.

அதேபோல, ஒவ்வொரு நோய்க்கான கட்டுப்பாடுகளும் இருக்கும். குறிப்பிட்ட வியாதிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும் போது, அந்த நோய்க்காக அதிகபட்சமாக இவ்வளவு சதவிகித தொகைதான் க்ளெய்ம் கிடைக்கும் என இருக்கும். இப்படி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாத பாலிசிகளே சிறந்ததாக இருக்கும். கட்டுப்பாடுகள் மிகுந்த பாலிசிகளை வைத்திருந்தால்,  குறிப்பிட்ட நோய்க்கு அதிகம் செலவாகும்போது பாலிசிதாரரின் கையிலிருந்து பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும். 
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய பாலிசி என்பதால் கவரேஜ் தொகையை உயர்த்திக் கொள்ள அல்லது டாப் அப் எடுத்துக் கொள்ளும் வசதி கொண்டதாக இருக்க வேண்டும். ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் போர்ட்டபிலிட்டி மூலமாக இன்ஷூரன்ஸை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.

கோ-பேமென்ட்!

ஹெல்த் இன்ஷூரன்ஸில் மூத்த குடிமக்களுக்கான பாலிசியில் கோ-பெமென்ட் இருக்கும். இது அதிகபட்சமாக 50% வரை இருக்கும். ஆனால், சில நிறுவனங்கள் தனிநபர், ஃப்ளோட்டர் பாலிசிகளில் கோ-பேமென்ட் வைத்திருக்கும். இந்த வகை பாலிசிகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இந்த பாலிசியில் ஒவ்வொரு முறை க்ளெய்ம் செய்யும்போதும் குறிப்பிட்ட அளவு தொகையை உங்கள் கையில் இருந்து செலவழிக்க வேண்டியிருக்கும்.

சிகிச்சைக்கு முன்/பின் கவரேஜ்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சில நோய்களுக்கு சிகிச்சைக்கு முன்/பின் க்ளெய்ம் செய்ய முடியும். அதாவது, சிகிச்சைக்குமுன் 60 நாட்கள், சிகிச்சைக்குப்பின் 90 நாட்கள் கழித்துக் கூட கவரேஜ் கிடைக்கக்கூடிய பாலிசிகள் உள்ளன. இந்த பாலிசிகளை வைத்திருந்தால், உங்களின் மருத்துவ செலவு கணிசமாகக் குறையும். அதாவது, ஒரு நோயைக் கண்டுபிடிக்கும் முன் ஆகும் செலவுகளுக்கும் க்ளெய்ம் கிடைக்கும்.

நெட்வொர்க் ஹாஸ்பிட்டல்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க்கில் எவ்வளவு மருத்துவமனைகள் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். அதாவது, நீங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் நெட்வொர்க் மருத்துவமனை உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதேபோல, வழக்கமாக நீங்கள் செல்லக்கூடிய பகுதியில் நெட்வொர்க் மருத்துவமனை இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் உங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது, நெட்வொர்க் மருத்துவமனை இல்லையெனில், உங்களின் கையிலிருந்து பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கேஷ்லெஸ் வசதி!

இப்போது இன்ஷூரன்ஸ் துறையில் கடுமையான போட்டி நிலவுவதால், பல்வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேஷ்லெஸ் வசதியை வைத்திருக்கிறது. இந்த வசதியை பயன்படுத்துவதற்காக ஃப்ளோட்டர் பாலிசியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக கார்டு கொடுத்திருக்கும். இந்த வசதி மிகவும் அவசியமான வசதி ஆகும். இந்த வசதி இருந்தால், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். மேலும், ஆம்புலன்ஸ் சேவைக்கு க்ளெய்ம் கிடைக்கும் வகையில் பாலிசி இருப்பது முக்கியம்.

டிபிஏ!

கடந்த சில ஆண்டுகளாக புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இதில் பல நிறுவனங்களே டிபிஏவாகவும் செயல்படுகிறது. இந்த வகை நிறுவனங்கள், எங்களுக்கு நாங்களே டிபிஏ என்பதால் விரைவாக க்ளெய்ம் செட்டில் செய்வோம் என்கிறது. ஆனால், அந்த நிறுவனங்கள் க்ளெய்ம் நடைமுறை உண்மையில் எப்படி உள்ளது என்பதை உங்களின் நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது.

இன்ஷூரன்ஸ் நிறுவனம் அல்லாத டிபிஏவாக இருக்கும்போது அந்த நிறுவனத்தின் சேவை தொலைபேசி மையம் ஆண்டின் எல்லா நாட்களிலும் இருப்பது அவசியம். ஒரு க்ளெய்மை எந்தக் காரணம் கூறி வேண்டுமானாலும் நிராகரிக்க முடியும். எனவே, க்ளெய்ம் நடைமுறை என்பது மிகவும் முக்கியமான விஷயம். எனவே, இதில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இதில் சிக்கல் இருந்தால் வேறு நிறுவனத்துக்கு பாலிசியை மாற்றுவது நல்லது” என்றார்.

மேற்கூறிய நடைமுறைகள் அனைத்தும் சரியாக இருந்தாலே போதும், நீங்கள் வைத்திருக்கும் பாலிசி பெஸ்ட் பாலிசி என்றுதான் அர்த்தம். நீங்கள் வைத்திருக்கும் பாலிசி மேற்சொன்ன விஷயங்களுடன் பொருந்தி வரவில்லை எனில், அந்த பாலிசியை மாற்றிக் கொள்வது அவசியம்!


உள்ளூரில் இன்ஷூரன்ஸ் பாலிசி!

நீங்கள் பாலிசி வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளை நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கிறதா என்பதை பார்ப்பது நல்லது. அதாவது, நீங்கள் கோவையில் இருக்கிறீர்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் கிளை சென்னையில் இருக்கிறது என்றால் உங்களின் தேவைகள் அனைத்துக்கும் சென்னைக்கு வரவேண்டியிருக்கும். எனவே, நீங்கள் எடுத்திருக்கும் இன்ஷுரன்ஸ் பாலிசியை விநியோகம் செய்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் உங்கள் பகுதியில் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். 

வாடிக்கையாளர் சேவை மையம் என்பது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் உயிர் நாடி ஆகும். இந்த சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும். க்ளெய்ம் படிவம், நாமினி மாற்றம் செய்வதற்கான நடைமுறை, குறை தீர்ப்பு மையம், கிளை அலுவலகங்களின் தொலைபேசி எண் ஆகிய தகவல்கள் இணையதளத்தில் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.


கவரேஜும், காத்திருப்புக் காலமும் முக்கியம்!

நிகில் ஆப்தே, முதன்மை புராடெக்ட் ஆபீசர்,

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷூரன்ஸ்


“ஹெல்த் இன்ஷூரன்ஸில், குறைந்தபட்ச கவரேஜ் தொகை உள்ளதா என்பதை கவனிப்பது முக்கியம். இப்போதுள்ள மருத்துவ தேவையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.3 முதல் ரூ.5 லட்சமும், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையும் கவரேஜ் வைத்திருப்பது நல்லது. இதற்கு குறைவாக இருப்பவர்கள் டாப்அப் எடுத்துக் கொள்வது நல்லது. இப்போது உள்ள சூழ்நிலையில் மருத்துவச் செலவுகள் மிக அதிகமாக உள்ளது. அதாவது, இருதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 2 முதல் 3 லட்சம் ரூபாய் செலவாகும். எனவே, கவரேஜ் தொகையில் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்குமுன் இருக்கும் நோய்களுக்கு காத்திருப்புக் காலம் இருக்கும். எத்தனை ஆண்டுகள் காத்திருப்புக் காலம் என்பதை கவனிக்க வேண்டும். சில நிறுவனங்கள் குறைவான கவரேஜ் தொகைக்கு 3 ஆண்டுகள் காத்திருப்புக் காலம் என குறைத்து தருகின்றன. பொதுவாக, நான்கு ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் இருக்கும். முடிந்தவரை, குறைவானக் காத்திருப்புக் காலம் இருக்கும் பாலிசிகள் இருந்தால் நல்லது”.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick