நாணயம் லைப்ரரி: பிரபலங்களின் வாழ்க்கை... நம்மை வெற்றியாளர் ஆக்கும் பாடங்கள்!

சித்தார்த்தன் சுந்தரம்

புத்தகத்தின் பெயர்: லிவிங் லெஜண்ட்ஸ் லேர்னிங் லெசன்ஸ் (Living Legends Learning Lessons)

ஆசிரியர்: பாலா வி.பாலச்சந்திரன், எ.கவிப்ரியா

பதிப்பாளர்: வெஸ்ட்லாண்ட் லிமிடெட்

`லிவிங் லெஜண்ட்ஸ், லேர்னிங் லெசன்ஸ்’ என்கிற இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர்களில் ஒருவர் புதுக்கோட்டையில் பிறந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் படித்து இல்லினாய்ஸ்-ல் உள்ள `நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக’த்தில் சுமார் 35 வருடங்கள் பேராசிரியராகப் பணிபுரிந்து 2008-ம் ஆண்டு ஓய்வு பெற்றவரும், சென்னையில் உள்ள `கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’-ன் நிறுவனரும், சேர்மனுமான பாலா வி. பாலச்சந்திரன் ஆவார். இவரோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர் `ஆடிங் ஸ்மைல்ஸ் மீடியா பிரைவேட் லிட்’ என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த எ.கவிப்ரியா.

இந்தப் புத்தகத்தில் இந்தியாவிலும் உலக அளவிலும் பிரபலமாக இருக்கக்கூடிய பத்து ஜாம்பவான்களின்  தலைமைப் பண்பு, அவர்கள் தத்தமது துறைகளில் எதிர்கொண்ட சவால்கள், அதை சமாளித்த விதம் போன்றவை குறித்து எளிய ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு, முத்தாய்ப்பாக அவர்களோடு பழகியதன் மூலம் தான் கற்றுக் கொண்ட வற்றையும் வாசகர் களுக்காக ஆசிரியர் பாலா தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. 

 இந்த பத்து ஜாம்பவான்கள் யார் தெரியுமா? டாடா குழுமத்தைச் சேர்ந்த ரத்தன் டாடா, பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா, தெர்மாக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனு ஆகா, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, பிரிட்டானியா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த வினிதா பாலி, `மார்க்கெட்டிங்’ குரு பிலிப் கோட்லர், கோத்ரெஜ் நிறுவனத்தின் ஆதி கோத்ரெஜ், நாளமில்லா சுரப்பி வல்லுநரும் (Endocrinologist), நவீன காலச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆன தீபக் சோப்ரா, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன், கெலாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் சுமார் 26 வருடங்கள் பணியாற்றி அதன் டீனாக இருந்து ஓய்வு பெற்ற டொனால்ட் ஜேக்கப்.

மூடவேண்டிய நிலையிலிருந்த டாடா குழுமத்தைச் சேர்ந்த `நெல்கோ’வை லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாற்றி அமைத்ததிலிருந்து துவங்கியது ரத்தனின் கார்ப்பரேட் பயணம். 1970-களில் மென்பொருள் துறையின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தெளிவாக தெரியாத நிலையில் ஆரம்பிக்கப்பட்டு, இன்றைக்கு உலக அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனம்தான் டிசிஎஸ்.

அன்றைக்கு டிசிஎஸ், அமெரிக்காவிலிருந்து அனுப்பப்படும் ஆவணங்களை `பஞ்ச்’ செய்து 24 மணி நேரத்துக்குள் திரும்ப அனுப்பக்கூடிய வேலையைத்தான் செய்துவந்தது. இன்றைக்கு இந்த நிறுவனத்தின் வருமானம் சுமார் 14 பில்லியன் டாலர்கள்.  உலக அளவில் 46 நாடுகளில் கிட்டத்தட்ட 3.5 லட்சம் பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்தக் குழுமம் அறிமுகப்படுத்திய நானோ கார், ஜிஞ்சர் ஹோட்டல் (பட்ஜெட் ஹோட்டல்) போன்ற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு புத்தகம் எழுதக்கூடிய அளவுக்குத் தகவல்கள் இருக்கின்றன.

ரத்தன் டாடாவிடம் இருக்கக்கூடிய முக்கியமான தலைமைப் பண்பு என்ன என இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கேட்டார். ``வெற்றி பெற வேண்டுமென்கிற தீவிரமான ஆசை இருக்க வேண்டும்… பயமிருக்கக் கூடாது… ஆனாலும் மனதில் ஒரு மூலையில் தோல்வி குறித்த ஒரு ஐயம் இருக்க வேண்டும். சில வேளைகளில் அந்த ஐயமே வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய காரணியாக அமைந்துவிடும்’ என்றார்.

`வாழ்வு என்பது ஒரு சிரமமான பயணம். அதில் உள்ள சிரமங்கள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும், ஊக்கப்படுத்தக்கூடியதாகவும் வைத்திருக்கிறது. பிரச்னை எதுவுமில்லை என்றால் வாழ்க்கை சலித்துவிடும்……’ இப்படிச் சொல்பவர் பயோடெக் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷா.

‘சவால்களும் அதை சமாளித்து அதிலிருந்து விடுபட்டு வெளியே வருவதும் உங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வாழ்க்கைக்கும், தொழில்முனைவுத் திறனுக்கும் தேவை தோல்விகள். அந்தத் தோல்விகளிலிருந்து முன்னேற நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தான் பல தோல்விகளை சந்தித்திருப்பதாகவும், ஒவ்வொரு முறை தோல்வி அடையும்போதும் அது தனக்கு புதிய பலத்தைக் கொடுத்திருப்பதாக’வும் கூறும் இவர், தொழில் துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார்.

கிரணுக்கு இன்ஸ்பிரேஷன் `பாடி ஷாப்’ என்கிற நிறுவனத்தை நடத்திவரும் அனிதா ரோடிக் என்கிற பெண்தான் எனக் கூறியிருக்கிறார். பாடி ஷாப்பில் விற்கப்படும் அழகுப் பொருட்கள் தயாரிப்பைப் பரிசோதித்துப் பார்க்க விலங்குகளைப் பயன்படுத்து வதில்லை. ரோடிக் ஒரு செயல்முனைவாளர் (ஆக்டிவிஸ்ட்). `உங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள். வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்யுங்கள். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் காரியத்தில்/செயலில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். அடுத்தவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக நீங்கள் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள். என் வெற்றிக்கான தாரக மந்திரம் இதுதான்’’ என்கிறார் கிரணின் இன்ஸ்பிரேஷனான ரோடிக்.

`நம் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு தலைவர் இருக்கிறார். தலைவர் என மக்கள் அழைக்கப்படு பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், முன்னவரிடம் இருக்கக்கூடிய தைரியமும், கனவை நினைவாக்குவதற்கு அவர்களிடம் உள்ள நம்பிக்கையும்தான். எந்தவொரு பெரிய நிறுவனுத்தின் வெற்றிக்கு அல்லது தொழில் முனைவோரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பது அவர்களது `பிசினஸ் ப்ளான்’ இல்லை. மாறாக, `மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதில் உள்ள தீராத ஆசையும், நம்பிக்கையும் தான்’ என்கிறார் பிரிட்டானியா நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு சென்ற அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினிதா பாலி.

தெர்மாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் அனு ஆகா. இவர் தன் வாழ்வில் ஏற்பட்ட சோகத்தினூடே வெற்றி கண்டவர். மிகவும் திறமையும், புத்திசாலியுமான இவரது கணவர் ரோஹிண்டன் மாரடைப்பு, வாதநோயால் தாக்கப்பட்டு, பதினான்கு ஆண்டுகள் அதோடு போராடி இறந்த போது அவரும், ஆகாவின் அப்பாவும் உருவாக்கிய தெர்மாக்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அனுவின் கைக்கு வந்தது.

1996-ம் ஆண்டு 33% வளர்ச்சி கண்ட நிறுவனம், 1999-ம் ஆண்டு சரிவை சந்திக்க ஆரம்பித்தது, பங்குச்சந்தையில் ரூ.400-க்கு விற்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்கு ரூ.36-ஐத் தொட்டது. அந்த காலகட்டத்தில் ஒரு பங்குதாரர் அனுவுக்கு, `திருமதி ஆகா, உங்களுக்குப் பணத்தின் மேல் அக்கறை இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால், பங்குதாரர்கள் அனைவரையும் நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டீர்கள்” என எழுதியிருந்தார்.

அதன்பின் மிகப் பெரிய ஆலோசனை நிறுவனமான பிசிஜி–யின் உதவியோடு நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றார். `அதிரடியான மாற்றங்களை நிறுவனத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரும்போது உங்களுடைய மனநிலையை மாற்றிக் கொள்வதுடன், செளகரியமான சொகுசான நிலைமையிலிருந்து வெளியே வரவேண்டும். அதோடு, உணர்ச்சிப் பிணைப்புகளிலிருந்தும் (sentiments) வெளிவர வேண்டும்’ என்று கூறும் அனு ஆகா, மேலும் `அடிப்படை வலுவாக இருக்கும்போது பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களில் அக்கறை கொள்வது அவசியமில்லை. அது ஒரு குறுகிய கால அவகாசம் கொண்டது. டென்னிஸ் மேட்சின்போது ஸ்கோர் போர்டையே பார்த்துக் கொண்டிருந்தால், சரியாக விளையாட முடியாது. நல்ல விளையாட்டு வீரருக்கு அழகு ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தி இறுதியில் ஜெயிப்பதுதான்’ என்று கூறுகிறார்.

`நான் தரவுகளின் (data) அடிப்படையில் செயல்படுபவன். `நாளை’ என்ற ஒன்று இல்லை என எண்ணி அவசரகதியில் செயல்படக் கூடியவன். சரியான தரவுகளை வைத்திருக்கும்பட்சத்தில் நீங்கள் பரிவர்த்தனையில் வெற்றி பெறுவீர்கள். இன்ஃபோசிஸ்-ல் நாங்கள் வேடிக்கையாக, `கடவுளை நாங்கள் நம்புகிறோம் – மற்றவர்கள் எல்லோரும் தரவுகளை அவர்களோடு கொண்டு வரவேண்டும்’ என சொல்வதுண்டு.

சுமார் 250 டாலரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், இன்றைக்கு 30 நாடுகளில் 1,55,000 பணியாளர்களுடன் உலக அரங்கில் ஆண்டுக்கு 7 பில்லியன் டாலரை சம்பாதித்து வெற்றி நடைபோட்டு வருகிறது.

`கனவுகள் வலுவான திட்டங்களை உருவாக்க உதவும்’ என சொல்வதுண்டு. மூர்த்தியின் சிறுவயது கனவுதான், வலுவான திட்டங்களை உருவாக்க அவருக்கு உதவியது. இன்று அவை ஆலமரமாக வளர்ந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தோடு ஒரு குறுந்தகடு இணைப்பும் உள்ளது. அதில் இந்த பத்து ஜாம்பவான்களிடம் நடத்திய சிறிய கால அளவிலான நேர்காணல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அனு ஆகா சொல்வது போல, ‘வாழ்க்கையில் தோல்வி அடையவில்லையெனில் பல பாடங்களை நாம் கற்றுக் கொள்ளாமலே இருந்திருப்போம்’. எனவே, வெற்றியைக் கொண்டாடுவது போல தோல்வியையும் கொண்டாடி படிப்பினைகள் பெறுவோம். அதுவே வாழ்க்கையில் நம்மை முன்நடத்திச் சென்று ஒரு வெற்றியாளராக்கும் என்பது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அனைவராலும் உணர முடியும்.

(குறிப்பு: இந்தப்  புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)


தங்கம் இறக்குமதி 179% அதிகரிப்பு!

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் 850 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு இதே கால அளவில் 650 டன் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

கடந்த டிசம்பரில் தங்கம் இறக்குமதி 380 கோடி டாலர் அதாவது, ரூ.24,700 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179% அதிகமாகும். நம் ஊரில் தங்க மோகம் எப்போதும் குறையாது போல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick