இதுவும் கடந்து போகும்!

ஹலோ வாசகர்களே..!

ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரியலாமா,  கூடாதா என்கிற வாக்கெடுப்பில், பிரிந்து செல்வதே சரி என்று சொல்லி இருக்கிறார்கள் இங்கிலாந்து மக்கள். இந்தச் செய்தி வெளியாகும் முன்பே உலக அளவில் நிதிச் சந்தைகள் தடுமாற்றத்துடன் காணப்பட்டன. வெள்ளி அன்று நிஃப்டி 300 புள்ளிகள் வரை இறங்கி வர்த்தகமானது.

இப்படிப்பட்ட இறக்கத்தைப் பார்க்கும்போது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்படுவது இயற்கையே! ஆனால், இதற்காக பயந்து, ஒதுங்கி நிற்பதற்கு எந்த அவசியமும் இல்லை என்பதே நம் கருத்து.

காரணம், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதினால் அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் பாதிப்படையலாம். வளர்ந்து வரும் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படப் போவதில்லை. இந்த உண்மையை சந்தை சட்டெனப் புரிந்து கொண்டதன் விளைவுதான், வெள்ளி அன்று நிஃப்டி 300 புள்ளிகளுக்கு இறங்கினாலும் வர்த்தகம் முடியும் தருவாயில் இறங்கிய புள்ளிகளில் இருந்து 120 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

பிரிட்டனின் இந்த முடிவினால் பிற நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் நமக்கு நன்மை செய்வதாகவே இருக்கும். உதாரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை இறங்கினால், அதை வாங்குவதற்காகும் செலவு நமக்கு குறையும். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1 டாலர் குறைந்தால் நமக்கு சுமார் ரூ.6,500 கோடிக்கு மேல் மிச்சமாகும். அதேபோல, நிக்கல், அலுமினியம் போன்ற கமாடிட்டிகளின் விலை குறைந்தாலும் நமக்கு நன்மையே ஏற்படும். முக்கியமாக டாலரின் மதிப்பு சர்வதேச சந்தையில் குறைந்தால், நம் ரூபாயின் மதிப்பு அதிகரித்து, நமக்கு நல்ல லாபத்தை தரும்.

2008-ல் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நம் சந்தை 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தது. அது போல இப்போது நடந்துவிடுமோ என்று நினைக்கக் கூடாது. காரணம், அமெரிக்கப் பொருளாதாரம் என்பது சர்வதேச பெருளாதாரத்தின் முதுகெலும்பு மாதிரி. ஆனால், பிரிட்டன் அப்படியல்ல. நாம் அமெரிக்காவை சார்ந்து இருப்பதில் பத்தில் ஒரு பங்குகூட பிரிட்டனைச் சார்ந்து இல்லை.

ஆக எப்படிப் பார்த்தாலும், இந்த வாக்கெடுப்பினால் குறுகிய காலத்தில் பாதிப்புகள் இருந்தாலும் நீண்ட கால நோக்கில் அதிக அளவில் நன்மை நடக்கவே நிறைய வாய்ப்புண்டு. எனவே, இதுவும் கடந்து போகும் என்கிற முறையில் இந்த நிகழ்வை அணுகினால், இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் என்பது நமக்கு தெளிவாகப் புரியும்! கிடைக்கும் வாய்ப்புகளை தயங்காமல் பயன்படுத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனமான முதலீட்டாளருக்கு அழகு!

- ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick