என் நிலத்தை தானமாக தர என்ன வழி?

?என்னுடைய வருமானத்தில் வாங்கிய ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மூன்று ஏக்கரை பள்ளிக்கூடத்துக்கு தானமாக கொடுக்கலாம் என்று இருக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும், யாருடைய அனுமதியை பெற வேண்டும்?

கண்ணன்,

த.பார்த்தசாரதி, சொத்து மதிப்பீட்டு நிபுணர்.

“இந்த நிலம் உங்கள் வருமானத்தில் வாங்கியது எனில், நீங்கள் 3 ஏக்கர் நிலத்தை தான செட்டில்மென்ட் (gift deed) மூலமாக அந்தப் பள்ளிக்கூடத்துக்கு  எழுதிக் கொடுக்க வேண்டும். அந்தப் பத்திரம் சம்பந்தப்பட்ட  சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.”

?என் வயது 30. ரூ.1 லட்சத்துக்கு பங்கு வாங்கி ஆறு மாதத்தில் ரூ.1,20,000-க்கு விற்றுவிட்டேன். லாபத்துக்கு நான் அடிப்படை வருமான வரி வரம்புபடி வருமான வரி கட்ட வேண்டுமா?

வெங்கட்ராமன்,

சிஏ.ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர், கார்த்திகேயன் & ஜெயராம் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ், ஈரோடு.

“நிதி ஆண்டு 2015-16-க்கு தனிநபருக்கு வருமான வரி விலக்கு ரூ.2,50,000 வரை உள்ளது. வாங்கி ஆறு மாதத்துக்குள் பங்குகளை விற்பனை செய்வதால், தங்களுடைய லாபம் குறுகிய கால மூலதன லாபமாக (Short term capital gain) கருதப்படும். தாங்கள் ஈட்டிய ரூ.20,000 லாபத்துடன் தங்களின் மற்றைய வருமானம் எல்லாம் சேர்ந்து, தனிநபர் வருமான வரம்பைவிட குறைவாக இருப்பின் வரியேதும் கட்டத் தேவையில்லை.”

?ஒரு நிறுவனப் பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்பட்டால், அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும், அதற்கான நடைமுறையை விளக்கிச் சொல்லவும்.

ஜான்ஸன்,

க.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட், ருபீடெஸ்க் கன்சல்டன்சி.

“போனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகள் ஆகும்.

இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும்.

இந்த நடைமுறைக்குப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகிவிடுவார். மேலும், ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும்போது அந்த நிறுவனப் பங்கின் பங்கு விலை குறைகிறது. உதாரணமாக, ஒரு  நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம்.

 போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்கு விலை ரூ.2,000-ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்டபிறகு அதன் விலை தானாகவே ரூ.1,000 என்கிற அளவுக்கு குறைந்துவிடும். இதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ரெக்கார்ட் தேதி என்பதைத்தான்.

அதாவது, நிறுவனங்கள் இதுபோன்ற போனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend), பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றை அறிவிப்பார்கள்.

அந்தக் குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோ, அவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும். உதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22-ம் தேதியை ரெக்கார்ட் தேதியாக அறிவித்திருந்தால், அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்கு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள் தேவைப்படும். அப்படிப் பார்த்தால், ஜூன் 20 -ம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான் இந்தச் சலுகை கிடைக்கும்.

அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்கினால், போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தைய நாள் ஜூன் 21 எக்ஸ் போனஸ் (Ex-Bonus) தேதி என்று அழைக்கப்படும். எக்ஸ் போனஸ் (Ex-Bonus) தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின்படி குறைந்து வர்த்தகமாகும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்