சரியான புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஜெ.சரவணன்

ங்குச் சந்தையில் லாபம் பார்க்க சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டும் போதாது. நம்முடைய முதலீட்டையும், வர்த்தகத்தையும் சரியாக செய்துகொடுக்கும் புரோக்கிங் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதும் மிக அவசியமான ஒன்றாகும். காரணம், பங்குச் சந்தையில் நேரடியாக நம்மால் முதலீடு செய்ய முடியாது. புரோக்கர்கள் மூலம் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஒருவர் தவறான புரோக்கிங் நிறுவனத்திடம் சிக்கிவிட்டால், அதுவரை அவர் செய்துவந்த முதலீடு அனைத்தும் திரும்பக் கிடைக்காமலே போவதற்கான வாய்ப்புண்டு. எனவே, சந்தையில் புதிதாக முதலீடு செய்யத் தொடங்கி இருக்கும் முதலீட்டாளர்கள் சரியான புரோக்கரை அல்லது புரோக்கிங் நிறுவனத்தை எப்படி தேர்வு செய்வது என்பதைச் சொன்னார் பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமன். 

அனுபவம் என்ன என்று பாருங்கள்!

‘‘டீமேட் வர்த்தகக் கணக்கைத் துவங்கும்முன் கட்டாயம் சந்தையில் உள்ள புரோக்கிங் நிறுவனங்களைப் பட்டியலிட்டு அவற்றைப் பற்றி சிறு ஆராய்ச்சி செய்ய வேண்டும். சட்ட ரீதியான விஷயங்களில் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். செபி விதிமுறைகள்படி அது தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் எவ்வளவு ஆண்டுகள் சந்தை அனுபவம் பெற்றவை என்பதைப் பார்க்க வேண்டும். சமீபத்தில் அல்லது புதிதாக தொடங்கப்படும் புரோக்கிங் நிறுவனங்களாக இருந்தால், அதை நிர்வகிப்பவர் யார், சந்தையில் அவரது அனுபவம் என்ன ஆகியவற்றைப் பார்த்து அதன்பிறகே முடிவு செய்ய வேண்டும். நாம் தேர்வு செய்யும் புரோக்கர் குறைந்தபட்சம் சில பெரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தையில் சந்தித்திருக்க வேண்டும். அப்போதுதான் சந்தை குறித்த சரியான ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க முடியும்.

கமிஷன் அல்ல, சேவைதான் முக்கியம்!

நல்ல புரோக்கிங் நிறுவனத்துக்கு, கமிஷன் என்பது முக்கியம் அல்ல. அளிக்கப்படும் சேவைதான் முக்கியம். வாடிக்கையாளர் மூலம் என்ன வருமானம் கிடைக்கும் என்று பார்க்கிற மாதிரி புரோக்கிங் நிறுவனங்கள் இருக்கக் கூடாது.  கமிஷனை வைத்து புரோக்கிங் நிறுவனத்தை மதிப்பிடாமல், அது தரும் சேவையைப் பார்க்க வேண்டும்.

முழுமையான ஆன்லைன் வசதி!


புரோக்கிங் நிறுவனத்தின் ஆன்லைன் தளம் நவீன தொழில்நுட்பத்துடன், முதலீட்டாளர்கள் எளிமையாகக் கையாளும் வகையில் சிறப்பானதாக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். மேலும் எந்த நேரத்திலும் ஆன்லைன் தளம் செயல்படாமல் போய்விடக்கூடாது.

புரோக்கிங் நிறுவனத்தின் ஆன்லைன் தளம் எந்த நேரத்திலும் விரைவாக இருக்க வேண்டும். முக்கியமாக, அதிக அளவில் டிரேடிங் நடக்கும் தருணங்களிலும் வேகமாக இயங்க வேண்டும்.

மொபைல் ஆப் வசதியும் இருந்தால் இன்னும் செளகரியம். மேலும், நாம் கணினியின் முன்பு இல்லாத சமயத்திலும் நம்முடைய ஆர்டரை புக் செய்யும் வகையில்  வசதிகள் இருக்க வேண்டும்.

தெளிவான பயிற்சி தரவேண்டும்!

ஒரு நிறுவனத்தில் கணக்குத் தொடங்கும்போதே, கணக்குத் தொடங்குபவருக்கு அந்த நிறுவனம் தெளிவாக அனைத்து வர்த்தக வழிமுறைகளையும் சொல்லித் தர வேண்டும். ஆன்லைன் தளத்தில் டிரேடிங் செய்வதற்கான பயிற்சி (Demo) தர வேண்டும். அதற்குப்பின் தேவையில்லாமல் புரோக்கிங் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமே இருக்கக் கூடாது. அந்த வகையில் சிறப்பானதொரு முழுமையான தொழில்நுட்ப சேவையை புரோக்கிங் நிறுவனம் வழங்க வேண்டும்.

விளம்பரம் அல்ல, விசாரணைதான் முக்கியம்!


விளம்பரங்களைப் பார்த்து புரோக்கர்களைத் தேர்வு செய்யாதீர்கள். முன்பு புரோக்கர்கள் விளம்பரம் செய்யத் தடை இருந்தது. ஆனால் இன்று சில புரோக்கர்கள், பங்கு வர்த்தகத்தில் உறுதியான வருமானத்தைப் பெற்றுத் தருவோம் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். அதனால் உஷாராக இருக்க வேண்டும். புரோக்கிங் நிறுவனம் குறித்து தீர விசாரித்து தேர்வு செய்ய வேண்டும்.

நாம் செய்யும் வர்த்தகம் குறித்த கான்ட்ராக்ட் நம்முடைய மின்னஞ்சலுக்கும், பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கும் மெசேஜ் மூலமாகவும் அனுப்ப  வேண்டும். அதேபோல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நம்முடைய வர்த்தகக் கணக்கின் அறிக்கை அனுப்பப்பட வேண்டும். இவையெல்லாம் சரியாக வருகிறதா என்பதை விசாரிக்க வேண்டும். புரோக்கரிடம் அதிகக் கேள்விகள் கேட்க வேண்டும். நாம் கேட்கும் கேள்விகள் சந்தை குறித்து அவர்களின் அனுபவம் என்ன என்பதை வெளிக்கொண்டு வரும் வகையில் இருக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்